பெனாசீர் புட்டோ பாகிஸ்தான் திரும்பினார்!
Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2007 (15:30 IST)
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், அந்நாட்டு முன்னாள் பிரதமருமான பெனாசீர் புட்டோ 8 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பினார். அவருடன் அவரது கட்சியின் முக்கிய தலைவர்களும் வந்தனர்.
தலைநகர் கராச்சியில் உள்ள ஜின்னா விமான நிலையத்தில் வந்திறங்கிய பெனாசீரை, பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி நின்று மேளங்கள் முழங்க வரவேற்றனர்.
அல் காய்டா, தலிபான் போன்ற தீவிரவாத இயக்கங்களால் பெனாசீரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் உள்துறை அமைச்சகம் பல்லடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தது.
விமான நிலையத்தைச் சுற்றியுள்ள முக்கியச் சாலைகளில் ஏராளமான காவலர்கள் ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டிருந்தனர்.
பெனாசீரின் பயணத்திற்காக குண்டு துளைக்காத கார்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அதில் அவர் புறப்பட்டுச் சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் நின்றிருந்த ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்தனர்.
இன்று மாலை கராச்சியில் நடைபெறவுள்ள பேரணியில் பேச பெனாசீர் திட்டமிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிஃப் ஆட்சிக்கு வந்த துவக்கத்தில் பெனாசீர் மீது ஊழல் குற்றச்சாற்றுகள் கூறப்பட்டன. எனவே மேல் நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக அவர் வெளிநாடு சென்றார்.
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் இழந்த ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவர உதவுவேன் என்று துபாயில் இருந்தவாறு பெனாசீர் உறுதியளித்திருந்தார்.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை பயணத்தை தள்ளி வைக்குமாறு அதிபர் முஷாரஃப் தரப்பில் மீண்டும் மீண்டும் பெனாசீரிடம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், அவ்வாறு தாமதமாக வந்தால் பெனாசீர் மீதுள்ள குற்றச்சாற்றுகளை நீக்க நடவடிக்கை எடுத்து, அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதாகவும் முஷாரஃப் கூறியிருந்தார்.
ஆனால், மக்களிடம் அளித்துள்ள வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் திட்டமிட்டபடி நாடு திரும்புவேன் என்று பெனாசீர் கூறியிருந்தார்.
அதிபர் முஷராஃப் ஆட்சியிலிருக்கும் காலத்தில் நாடு திரும்பும் இரண்டாவது முன்னாள் பிரதமர் பெனாசீர் ஆவார்.
முன்னதாக, மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீஃப் நாடு திரும்பினார். ஆனால் இஸ்லாமாபாத்தில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டு சவுதி அரேபியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
அடுத்த மாதம் 15- ஆம் தேதி மீண்டும் நாடு திரும்புவேன் என்று நவாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.