அடுத்த ஆண்டு பாதுகாப்புச் செலவிற்காக 16, 644 கோடி ரூபாயை ஒதுக்க உள்ளதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டு முன்வரைவை இன்று சமர்ப்பித்த துணை நிதியமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய கூறியதாவது :
கடந்த ஆண்டு பாதுகாப்புச் செலவோடு ஒப்பிடும்போது இது 20 விழுக்காடு அதிகமாகும். இந்த ஆண்டு பாதுகாப்புச் செலவிற்காக 13,0 94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
அடுத்த ஆண்டுக்கான மொத்தச் செலவீனமாக 92,050 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த தொகையில் பாதுகாப்புச் செலவீனமானது ஐந்தில் ஒரு பங்கு ஆகும்.
சிறிலங்கா வரலாற்றிலேயே பாதுகாப்புச் செலவிற்காக இந்தளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.
வருகிற நவம்பர் 7 ஆம் நாள் 2008 ஆம் ஆண்டுக்கான சிறிலங்கா அரசின் வரவு-செலவுத் திட்டத்தை அதிபரும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் தாக்கல் செய்ய உள்ளார்.