சிறிலங்காவில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்திற்கு அரசின் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததால் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன என்று அம்மாவட்ட ஆட்சியர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தற்போது நிலவும் சூழலில் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் கடும் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.
மேலும் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வந்த வீடு கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பழைய திட்டங்களின் வேலைகள் நடக்கின்றன. புதிய வேலைகள், மேம்பாட்டுப் பணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கட்டடப் பொருட்களுக்கான தடைகள் காரணமாக கிடைக்கும் சிறிதளவு நிதியை கொண்டு பணிகளை மேற்கொள்ள முடியாது. எரிபொருள் நெருக்கடி காரணமாக விவசாயப் பணிகள் பாதிப்படைந்துள்ளன.
தற்போது உயிலங்குளம் பாதை மூடப்பட்டுள்ளதால் மடு மாந்தை மேற்குப் பகுதி மக்களுக்கான உணவுப்பொருட்களை ஓமந்தை வழியாக எடுத்து வரவேண்டியுள்ளது. வழக்கமாக 5 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் இப்பாதையை 7 நாட்களும் திறக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.