பாகிஸ்தானில் தொழில் மண்டலம் : அமெரிக்கா ஒப்புதல்!
Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (14:17 IST)
பழங்குடியினர் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணம் உட்பட இரு பகுதிகளில் மறுகட்டுமான வாய்ப்பு மண்டலங்கள் (Reconstruction Opportunity Zones - RoZs) என்ற தரமான தொழில் மண்டலங்களை அமைக்கவேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கெனவே ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைக்கப்பட்டதைப் போன்ற தரமான தொழில் மண்டலங்களின் (Quality Industrial Zones (QIZs))அடிப்படையில், இந்த மறுகட்டுமான வாய்ப்பு மண்டலங்கள் அமையும்.
மேலும் இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் எந்த வரியும் இன்றி அமெரிக்கச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
வன்முறையாளர்கள், அல் காய்டா இயக்கத் தலைவர்கள் ஆகியோரால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியினர் தங்கள் வாழ்க்கையில் முன்னேற இத்திட்டம் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் பாதித்த பகுதிகள், பழங்குடியினர் வாழும் பகுதிகள், ஆப்கானிஸ்தான் தலையீடு அதிகமுள்ள பகுதிகள் ஆகியவற்றில் இத்தகைய மண்டலங்களை அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது.
ஆனால், முதலில் பாதுகாப்பாக இடங்களில்தான் தொழில் மண்டலங்கள் அமைக்கப்படும் என்று அமெரிக்கா கூறிவிட்டது.
இருந்தாலும், நிலநடுக்கம் பாதித்த பகுதிகள், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகள் குறைபாடு காரணமாக அங்கு தொழில் மண்டலங்கள் அமைக்கும் திட்டம் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது.
பிற நாடுகளில் அமெரிக்காவின் மறுகட்டுமான வாய்ப்பு மண்டலங்களை அமைப்பது பற்றிய சட்ட முன்வரைவு இந்த மாத இறுதியில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், மறுகட்டுமான வாய்ப்பு மண்டலங்கள் பற்றித் தெரிவித்தார்.