காஷ்மீர் சிக்கலைப் பேசுவதற்கு இதுவே உகந்த நேரம் : பாகிஸ்தான்!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (20:38 IST)
சர்வதேச அளவிலும் மண்டல அளவிலும் சாதமான சூழல் நிலவும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு காஷ்மீர் சிக்கலிற்குத் தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறைச் செயலர் ரியாஸ் முகமது கான் கூறியுள்ளார்.

ஐ.நா. பொது அவையில் பேசிய அவர், "இந்தியா ஏற்றுக்கொள்ளும் தீர்வை பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்களுக்காக நாங்கள் அநுசரித்து ஏற்போம்" என்றார்.

"சர்வதேச அளவிலும், இந்திய துணைக் கண்டத்திலும் சாதமான சூழல் நிலவுகிறது. இந்த வாய்ப்பை தங்களின் எல்லாப் பிரச்சனைகள் தொடர்பாகவும் பேச இந்தியாவும் பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக தெற்காசியப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் ஜம்மு-காஷ்மீர் சிக்கல் குறித்துப் பேச இது உகந்த நேரமாகும்" என்றார்.

மேலும், இருதரப்பும் தங்களின் அரசியல் குறிக்கோள், உறுதி மற்றும் விட்டுக்கொடுக்கும் தன்மையை எடுத்துக் காட்டவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமைதிப் பேச்சில் கண்டிப்பாகப் பங்கெடுக்க வேண்டிய காஷ்மீர் மக்களின் கோரிக்கையை எதிரொலிக்கிற யோசனைகளை அதிபர் பர்வேஷ் முஷாரஃப் தந்துள்ளார் என்று தனது பேச்சின் மூலம் ரியாஸ் முகமது கான் தெரிவிக்க விரும்பினார்.

ஆனால் முஷாரஃப்பின் யோசனைகள் என்று குறிப்பாக எதையும் அவர் எடுத்துரைக்கவில்லை.

தீவிரவாதம் குறித்துப் பேசிய அவர், தீவிரவாதம் மற்றும் வன்முறைகளால் எழுந்துள்ள புதிய அச்சுறுத்தலின் மூலம் என்பது நாகரீகங்களுக்கு இடையிலான மோதல் அல்ல என்று குறிப்பிட்டார்.

"எல்லா மக்களின் நன்மைக்காகவும், உலகமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தின் நவீனத்தால் ஏற்படும் பயன்களைப் பெறவும், நீடித்துவரும் சிக்கல்களைப் பற்றிப் பேசுவதற்காக உள்ள வாய்ப்புகளைப் பொதுப்படுத்துவதில் உள்ள ஒருங்கிணைந்த இயலாமை சர்வதேச சமூகத்தின் தோல்வியாகும்".

"இதனால் பாலஸ்தீனம், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் சண்டைகளும், தெற்காசியாவில் காஷ்மீர் சிக்கலும் தீர்க்கப்படாமலே உள்ளன. மிகப் பழைய சிக்கல்கள் புதியமுகம் பெற்றுள்ளன" என்று ரியாஸ் முகமது கான் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்