மகாத்மாவின் கொள்கைகள் இன்றைய உலகிற்கும் அவசியம் : ஐ.நா செயலர்!
Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (13:34 IST)
சகிப்புத்தன்மை இன்மையாலும், மோதல்களாலும் உலகம் முழுவதும் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், எண்ணற்ற மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திர இந்தியா பிறப்பதற்குக் காரணமான மாகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கைகள் மீண்டும் நம் சிந்தனையில் உதிக்க வேண்டியது அவசியம் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
மாகாத்மா காந்தியின் பிறந்த நாளை சர்வதேச அகிம்சை நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முதலாவது அகிம்சை நாள் ஐ.நாவில் கடைபிடிக்கப்பட்டது.
அப்போது பொது அவையில் பேசிய பான் கி மூன் ''அதிகரித்துவரும், கலாச்சாரக் கலப்பால் ஏற்படும் பதற்றத்தையும், சகிப்புத்தன்மை இன்மையால் ஏற்படும் மோதல்களையும் உலகம் உணர்ந்து வருகிறது. இதனால் தீவிரவாதத்தின் ஆதிக்கமும், வன்முறையைத் தூண்டும் கருத்துக்களும் பலமடைந்து வருகின்றன'' என்றார்.
மியான்மரில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைத் தாக்குதல்களைக் குறிப்பிட்ட அவர், ''மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்றி அகிம்சை முறையில் ஆயுதங்களைத் தொடாமல் போராடுபவர்களின் மீது ஆயுதப் படைகள் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம்'' என்றார்.
உலகம் முழுவதும் சுதந்திரம் மற்றும் குடியுரிமைகளுக்காக மிகப்பெரிய இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் மகாத்மா காந்தி என்று நினைவுகூர்ந்த பான் கி மூன், ''ஒவ்வொரு நாளும் தன்னுடைய வாழ்வில் அகிம்சையைப் பின்பற்றிய மகாத்மா, அதன் மூலம் எண்ணிலடங்கா மனிதர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கிறார்'' என்றார்.