சிறிலங்காவில் நீண்டகாலமாக நடந்துவரும் இனச் சிக்கலிற்க்கு இராணுவ ரீதியில் தீர்வுகாண முடியாது என்றும், அமெரிக்கா, சிறிலங்காவின் நட்பு நாடு என்ற வகையில் தம்மால் முடிந்தவரை உதவுவதற்குத் தயாராகவுள்ளது என்றும் அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளேக் கொழும்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
''சிறிலங்கா அரசு கடந்த சில மாதங்களில் முக்கிய வெற்றிகள் சிலவற்றை பெற்றுள்ளது. கிழக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை வெளியேற்றியது, அண்மையில் ஆயுதங்களை ஏற்றிவந்த விடுதலைப் புலிகளின் கப்பல்களை மூழ்கடித்தது ஆகியன முக்கிய இராணுவ வெற்றிகளாகும். ஆனால், இந்த வெற்றிகள் இலங்கையின் பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காணமுடியுமா என்று மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு சிறிலங்கா அரசாங்கத்தை தூண்டக்கூடாது. அது சாத்தியமில்லை'' என்று பிளேக் கூறியுள்ளார்.