தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்களைத் தொடர்வதற்கு சர்வதேச நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிழக்குத் தீமோர் மற்றும் கொசாவோ மக்களுக்கு வழங்கப்பட்டதை போல எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான பொருத்தமான வாய்ப்பை தமிழர்களுக்கு வழங்கவேண்டும் எனவும் விடுதலைப் புலிகள் வலியுத்தியிருக்கின்றனர்.
ஐ.நா. சபையின் 62 வது வருடாந்தக் கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், அதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள விரிவான கடிதம் ஒன்றில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
நேற்று திங்கட்கிழமை (24.09.07) அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில், சிறிலங்கா அரசு தன்னுடைய இராணுவ நடவடிக்கைகளை, இனப் படுகொலையை, மோசமான மனித உரிமை மீறல்களை நிறுத்தி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் பிரச்சினைக்குத் இறுதித் தீர்வைக் காண்பதற்கு முன்வர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்காக சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசை வற்புறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிறிலங்க அரசின் மனித உரிமை மீறல்கள், சர்வதேச நாடுகள் முன்பாக அவர்கள் மேற்கொள்ளும் பொய்ப்பிரச்சாரங்கள், போர் நிறுத்த உடன்படிக்கையைப் பலவீனப்படுத்தும் வகையில் அரசு திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழ் மக்களுடைய விருப்பங்கள் தொடர்பாகவும் அக்கடிதத்தில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.