ஈராக்காக மாறிவரும் பாகிஸ்தான்: பெனாசீர்!
Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (13:24 IST)
மற்றொரு ஈராக்காகவோ ஆப்கானிஸ்தானாகவோ வன்முறை நிறைந்த நாடாகப் பாகிஸ்தான் மாறிவருவதைத் தடுப்பதற்காகவே தான் பாகிஸ்தானுக்குத் திரும்ப விரும்புவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனசீர் புட்டோ கவலையுடன் கூறியுள்ளார்.
முன்பு தெருக்களில் நடமாடிய அப்பாவி மக்களைக் கொன்ற தீவிரவாதிகள் இப்போது நமது இராணுவ வீரர்களைக் கொல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஒரு உள்நாட்டுக் கலவரத்தை நோக்கித் தள்ளப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
பெனசீர் பிரதமராக இருந்த போது கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட அவரின் சகோதரர் மிர் முர்ட்டசா புட்டோவின் நினைவுநாள் நிகழ்ச்சி துபாயில் நடைபெற்றது,
அதில், கலந்து கொண்ட பெனசீர், தீவிரவாதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதால் நாட்டின் இறையாண்மை கேள்விக்குறியாகியுள்ளது என்றும், அயல்நாட்டு அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளது என்றும் கவலை தெரிவித்தார்.
"மற்றோரு ஆப்கானிஸ்தானாகவோ, ஈராக்காவோ பாகிஸ்தான் மாறுவதை நான் விரும்பவில்லை. எனவே நான் பாகிஸ்தான் திரும்ப விரும்புகின்றேன். என்னிடம் துப்பாக்கிகள் இல்லை. ஆனால் எனது பாகிஸ்தான் மக்கள் கட்சியிடம் நல்ல திட்டம் உள்ளது. நான் நாடு திரும்பினால் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன. அவ்வாறு மிரட்டல் விடுபவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நான் அல்லாவைத் தவிர வேறு யாருக்கும் பயப்பட மாட்டேன்" என்று பெனசீர் கூறியுள்ளார்.
"பாகிஸ்தானில் மற்றொரு போர் உருவாகக் கூடாது என்பதால் அதிபர் முஷாரப்புடன் பேசினேன். நிலையான அரசியல் தன்மை, சமமான அதிகாரப் பகிர்வு மற்றும் ஜனநாயகம் ஆகியவை காக்கப்பட வேண்டும். சீருடை அணிந்த அதிபரை நான் விரும்பவில்லை. எதிர்காலத்திலும் நான் விரும்ப மாட்டேன்" என்று அவர் கூறியதாக கல்ப் நியூஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.