செப். 24 : இந்தியா - சீனா எல்லை பேச்சுவார்த்தை!

Webdunia

செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (21:06 IST)
இந்தியா - சீனா இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையே வரும் 24 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது!

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெறவுள்ள இந்த 11வது சுற்றுப் பேச்சில் இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதியாக எம்.கே. நாராயணன், சீனத்தின் சிறப்புப் பிரதிநிதியாக அந்நாட்டு அயலுறவு துணை அமைச்சர் தாய் பிங்குவா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று சீன அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் ஜியாங் யூ கூறியுள்ளார்.

சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு ஏற்கனவே சென்றுவிட்ட அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் இன்று அந்நாட்டு அயலுறவு அமைச்சர் யாங் ஜீச்சியை சந்தித்தார். அதன்பிறகு அயலுறவு உதவி அமைச்சர் யாஃபியுடன் பேசினார் என்று கூறிய ஜியாங் யூ, எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வுகாண வகுக்கப்பட்டுள்ள அடிப்படைகளின் கீழ் நியாயமான தீர்வை எட்டுவதற்கு இந்தியாவுடன் இணைந்து சீனா முயற்சிக்கும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்