அணு எரிபொருள் வங்கி : ஐ.ஏ.இ.ஏ. முடிவு!

Webdunia

செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (20:23 IST)
அணு மின் சக்தி தயாரிக்கும் திட்டத்தை மேற்கொண்டு வரும் நாடுகளுக்கு தொடர்ந்து அணு எரிபொருளை வழங்குவதற்கு ஏதுவாக அணு எரிபொருள் சேமிப்பு வங்கியைத் துவக்குவது குறித்து சர்வதேச அணு சக்தி முகமை ஆலோசித்து வருகிறது!

ஆஸ்ட்ரியா தலைநகர் வியன்னாவில் நடைபெற்று வரும் சர்வதேச அணு சக்தி முகமையின் (International Atomic Energy Agency - IAEA) 51வது மாநாட்டில் உரையாற்றிய அதன் தலைவர் மொஹம்மது எல் பராடி இந்த அணு எரிபொருள் வங்கி அரசியல் சார்பற்றும், அதே நேரத்தில் அணு ஆயுதப் பரவல் எதிர்ப்பு உடன்படிக்கையின் உள்ளடக்கத்தின் படியும் செயல்படும் என்று கூறினார்.

இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ள 144 நாடுகளின் பிரதிநிதிகள் பலர், அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு ஆக்கம் செய்து பயன்படுத்துவதற்கான தேச மையங்களை சர்வதேச மையங்களாக மாற்ற வேண்டும் என்றும், புதிதாக சர்வதேச மையங்களை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிய நாடுகள் மட்டுமின்றி, ஆஃப்ரிக்க, ஐரோப்பிய நாடுகளும் புதிதாக அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றன.

அணு மின் சக்தியில் ஆர்வமுடைய நாடுகளுக்கு உதவிடும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த எரிபொருள் வங்கி, அணு மின் உலைகளின் முழு காலத்திற்கும் தொடர்ந்து எரிபொருளை பெறுவதை உறுதி செய்யும் என்று கூறிய பராடி, அணுப் பொருளை கண்காணிப்பது மிகச் சிக்கலான நடவடிக்கை என்றும், அதில் ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும் பெரும் பிரச்சனையாகிவிடும் என்றும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்