குமரன் பத்மநாதன் கைது செய்யப்படவில்லை : பிரணாப் முகர்ஜி!

Webdunia

வெள்ளி, 14 செப்டம்பர் 2007 (13:03 IST)
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத முகவர் என்று கூறப்படும் கே.பி. என்கின்ற கே. பத்மநாதன் கைது செய்யப்படவில்லை என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளதாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்!

3 நாள் பயணமாக தாய்லாந்து வந்துள்ள பிரணாப் முகர்ஜி, இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை : தாய்லாந்தி்ற்கும், தென்கிழக்கு ஆசியாவிற்கும் அனுகூலம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பத்மநாதன் கைது குறித்து செய்தியாளர்கள் வினவியதற்கு, அந்த நபர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று எங்களுக்கு (தாய்லாந்து அரசால்) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் இந்தியத் தூதரகத்திற்கு தரப்பட்டுள்ளது. அதனை நாங்கள் நம்புகிறோம் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இதற்கிடையே, தாய்லாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச காவல் துறையின் தாய்லாந்து பிரிவு தலைவர் கர்னல் அபிச்ஜார் சூல்பினையா, "பத்மநாதன் தாய்லாந்திற்குள் வந்திருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான குடியேற்றத்துறை ஆவணங்களில் எந்தத் தகவலும் இல்லை" என்று கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் இப்பயணத்தில் இந்தியா - தாய்லாந்து இடையே வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, முதலீடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்