தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களை பெற்றுத் தரும் முகவராக செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் குமரன் பத்மநாபன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகளை தாய்லாந்து அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது!
குமரன் பத்மநாபன் என்றும், சண்முகம் குமரன் தர்மலிங்கம் என்றும் அழைக்கப்படுவதாகக் கூறப்படும் இவரை சர்வதேச காவல் துறையின் தாய்லாந்து பிரிவு கைது செய்துள்ளதாக இன்று காலை படங்களுடன் அனைத்து பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளியானது.
இந்தச் செய்தியை தாய்லாந்து அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அயலுறவு அமைச்சகத்தின் துணை பேச்சாளர் பிய்யீரா கெம்கோன், "சிறிலங்காவின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த யாரும் இந்த வாரத்தில் கைது செய்யப்பட்டதாக எந்தத் தகவலும் அரசிடம் இல்லை" என்று கூறியுள்ளார்.
குமரன் பத்மநாபன் கைது செய்யப்பட்டதாக எந்தத் தகவலும் தங்களுக்கு வரவில்லை என்றும் தாய்லாந்திற்கான சிறிலங்க தூதரகம் தங்களுக்குத் தெரிவித்துள்ளதாக யு.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுக் கழகத்தின் இயக்குநர் விஜய் சங்கர், குமரன் பத்மநாபன் கைது செய்யப்பட்டதை உறுதி செய்யுமாறு தாய்லாந்து அரசை கேட்டுள்ளதாகவும், அதற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.