நவாஸ் ஷெரீஃப் நாடு கடத்தப்பட்டார்!

Webdunia

திங்கள், 10 செப்டம்பர் 2007 (15:59 IST)
பாகிஸ்தான் அதிபர் பொறுப்பில் இருந்தபோது பதவி நீக்கம் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பாகிஸ்தானில் வந்திறங்கிய சில மணி நேரங்களில் மீண்டும் நாடு கடத்தப்பட்டார்!

2000வது ஆண்டு முதல் ஜெட்டாவில் இருந்த நவாஸ் ஷெரீஃப் இன்று காலை லண்டனில் இருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் வந்தார். பாகிஸ்தான் மண்ணில் ஷெரீஃப் வந்த விமானம் இறங்கியதும், அதிலிருந்து பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்ட பிறகு நவாஸ் ஷெரீஃபை தரையிறக்கி ஒரு ஹெலிகாப்டரில் ரகசிய இடத்திற்கு கூட்டிச் சென்றனர். அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்தது.

அவரைச் சந்தித்த செளதி அரசு தூதர்கள், 10 ஆண்டுகாலம் பாகிஸ்தானிற்கு திரும்பமாட்டேன் என்று செளதி அரசிற்கு அளித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தினர்.

செளதி அரசுடன் செய்துகொண்ட அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவரும், அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக நாடு கடத்தப்பட்டதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு நவாஸ் ஷெரீஃப் வேறொரு விமானத்தில் ஏற்றப்பட்டு ஜெட்டாவிற்கு அனுப்பப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்