கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்ட இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃபிற்கு மீண்டும் விசா அளிக்க வேண்டும் என்கின்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆட்ரேலிய அரசு மேல் முறையீடு செய்துள்ளது!
ஹனீஃப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவருடைய நடத்தை சரியில்லை என்று காரணம் காட்டி அந்நாட்டு குடியேற்றத்துறை அவரது பணி விசாவை ரத்து செய்தது. ஆனால் விசாவை ரத்து செய்ததற்கு கூறப்பட்ட காரணம் அடிப்படையற்றது என்று கூறி பிரிஸ்பேன் நீதிமன்றம் அவருக்கு மீண்டும் விசா வழங்குமாறு உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பிரிஸ்பேன் ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ரேலிய அரசு மேல் முறையீடு செய்துள்ளதாக குடியேற்ற அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.
ஆஸ்ட்ரேலிய நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே ஹனீஃபின் விசாவை தான் ரத்து செய்ததாகவும், அம்முடிவிலேயே இன்னமும் உறுதியாக உள்ளதாகவும் ஆண்ட்ரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இப்பிரச்சனையில் சட்டத்தை சரியாக புரிந்துகொள்ள நீதிபதி ஸ்பென்சர் தவறிவிட்டதாகவும் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.