பெரு நிலநடுக்கம்: 337 பேர் பலி

Webdunia

வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (18:04 IST)
தென் அமெரிக்க கண்டத்தில் மேற்குப் பகுதியில் பசுபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பெரு நாட்டை தாக்கிய கடும் நிலநடுக்கத்தில் 337 பேர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கோனார் காயமுற்றனர்.

பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து 250 கி.மீ. தூரத்தில் உள்ள ஐகா என்ற மாகாணத்தில் நிலநடுக்கத்தின் தாக்கம் பயங்கரமாக இருந்தது. அங்குள்ள கட்டடங்களும், வீடுகளும் இடிந்தன.

அந்நாட்டில் அது மாலை வேலை என்பதால் அலுவலகங்களில் பணியாற்றுவோர் வெளியேறிவிட்டதால் உயிரிழப்பு குறைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பசிபிக் பெருங்கடலில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.9 புள்ளிகள் அளவிற்கு பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வுத் துறை கூறியுள்ளது.

ஆன்டிஸ் மலைத் தொடரை ஒட்டி அமைந்துள்ள சிலி, பெரு நாடுகள் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதிகளாகும்.

1974ஆம் ஆண்டு ஆன்டிஸ் மலைப் பகுதியில் மையம் கொண்டு தாக்கிய 7.5 நிலநடுக்கம் யுன்காய் என்ற நகரையே சுவடற்றதாக்கி 66,000 பேர் உயிரிழக்க காரணமானது.

அந்த அளவிற்கு எந்தவிதமான பேரழிவு ஏற்படாததற்கு இறைவனுக்கு தான் நன்றி கூறுவதாக பெரு அதிபர் கூறியுள்ளார். பெரு நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்