பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் நாடு திரும்ப அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 1999 ஆம் ஆண்டு நவாஷ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவ தளபதி முஷாரப் அதிபர் ஆனார். அதைத்தொடர்ந்து, நவாஷ் ஷெரீப் அவரது தம்பி ஷாபஸ் ஷெரீப் ஆகியோர் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் சவூதி அரேபியாவில் அடைக்கலம் புகுந்தனர்.
தற்போது பாகிஸ்தானில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளதால் நவாஷ் ஷெரீப் நாடு திரும்ப முடிவு செய்தார். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. நவாஷ் ஷெரீப்பும், அவரது தம்பியும் நாடு திரும்பலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நவாஷ் ஷெரீப் நாடு திரும்புவதை தடுக்க அரசுக்கு உரிமை இல்லை என்று அரசுக்கு தாக்கீது அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.