தெற்காசிய வெள்ளம் : 2 கோடி பேர் பாதிப்பு - யூனிசெ·ப்!

Webdunia

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2007 (13:29 IST)
இந்தியா, நேபாள், வங்கதேச நாடுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா.வின் யூனிச·ப் அமைப்பு கூறியுள்ளது!

பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தது மட்டுமின்றி, தாங்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகளையும் இழந்துள்ளனர் என்று கூறியுள்ள யூனிசஃப் அறிக்கை, அவர்களுக்கு இருப்பிடமும், தூய குடிநீரும், உணவும் அவசர மருத்துவ உதவியும் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.

நேபாளில் பாதிக்கப்பட்டுள்ள 60,000 பேருக்கு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இம்மூன்று நாடுகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் அடித்த புயல், மழை, வெள்ளத்தில் மேலும் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யூனிச·ப் கூறியுள்ளது.

இந்தியாவில் பீகாரில் மட்டும் 5,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வீடிழந்துள்ளனர். அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்களும், குடிநீரும் அளிக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட வெள்ளம் இதற்குமுன் ஏற்பட்டதில்லை என்று யூனிச·ப் செய்தி கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்