இலங்கையின் வட பகுதியில் உள்ள மன்னாரில் சிறிலங்க ராணுவத்தின் முகாம் மீது விடுதலைப் புலிகள் தாக்கியதை அடுத்து நடந்த மோதலில் இருதரப்பிலும் 16 பேர் கொல்லப்பட்டனர்!
சிறிலங்க ராணுவத்தின் சிறிய முகாம் ஒன்று நீலச்சேனை என்ற இடத்தில் உள்ளது. இந்த முகாம் மீது இன்று அதிகாலை பீரங்கித் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் பெரும் படையுடன் தாக்குதல் நடத்தியதாகவும், இத்தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தினர் 10 பேரும், தங்கள் தரப்பில் 4 பேரும் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் கூறியுள்ளதாக தமிழ்நெட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தினரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும், தங்களுடைய பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் எதிரியின் படை பலத்தை அழித்துவிட்டதாகவும் இளந்திரையன் கூறியுள்ளார்.
இந்தப் போரில் தங்கள் தரப்பில் 3 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், புலிகள் தரப்பில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்க ராணுவப் பேச்சாளர் சமரசிங்கே கூறியுள்ளார்.