2050க்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க ஜி-8 ஒப்புதல்!

Webdunia

வெள்ளி, 8 ஜூன் 2007 (13:18 IST)
காற்று மண்டலம் வெப்பமடைதலால் வானிலையில் ஏற்பட்டு வரும் ஆபத்தை ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தை தற்பொழுதுள்ள அளவில் இருந்து 2050 ஆம் ஆண்டிற்குள் பாதியாகக் குறைப்பதென ஜி-8 மாநாடு உறுதிபூண்டுள்ளது!

ஜெர்மனி தலைநகர் பெர்லினிற்கு அருகில் உள்ள ஹெல்லிஜெண்டம் என்ற இடத்தில் நடைபெற்று வரும் உலகின் முன்னேறிய 8 நாடுகளின் உச்சி மாநாட்டில் வானிலையில் ஏற்பட்டுவரும் மாற்றத்தைத் தடுக்க கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதுவரை கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பான எந்த உடன்பாட்டிற்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளாத அமெரிக்கா, 2050 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தை பாதியாகக் குறைக்கும் கொள்கை முடிவிற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

இதனை செய்தியாளர்களிடம் ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்க்கல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளில் இருந்தும், வாகனங்கள் வெளியேற்றும் புகையினாலும் காற்று மண்டலம் மாசடைந்து அதன் காரணமாக புவியின் காற்று மண்டலத்திற்குள் வரும் சூரியக் கதிரால் ஏற்படும் வெப்பம் மீண்டும் வெளியேறும் வாய்ப்பற்று கி்ரீன் ஹவுஸ் என்றழைக்கப்படும் வெப்பச் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக துருவப் பகுதிகளில் பனி மலைகள் உருகுவது அதிகரிப்பது, கடல் மட்டம் உயர்வது, வானிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை, வெப்பம் இரண்டும் அதிகரிப்பது, உலகத்தின் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஆகியன ஏற்பட்டு வருவதை சுட்டிக்காட்டி எச்சரித்த விஞ்ஞானிகள், காற்று மண்டலம் மாசுபடுவதை பெருமளவிற்குக் குறைக்க வேண்டும் என்று கூறினர்.

அதன் அடிப்படையில் கியோட்டோ பிரகடனம் செய்யப்பட்டது. தற்பொழுது கியோட்டோ உடன்படிக்கையின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி ஜி-8 நாடுகள் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

ஜி-8 மாநாட்டில் இது தொடர்பாக வெளியிடப்படும் கொள்கை முடிவை ஐ.நா.வுடன் இணைந்து நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று முடிவெடுக்கப்பட்டதாகவும் ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்