தமிழ்.வெப்துனியா.காம்: தமிழகத்தின் சமூகத் தளத்தில் மிகவும் அறியப்பட்டவர் நீங்கள். சிதம்பரநாதன் என்றாலே ஊனம் ஒரு பலவீனம் அல்ல, அதையும் தாண்டி மனிதன் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் நிறைய இருக்கிறது என்பதை நிரூபித்து, தற்பொழுது ஊனமுற்றோர் என்ற பெயரையே மாற்றி மாற்றுத்திறனாளிகள் - உங்களுக்குள் ஒரு திறன் இருக்கிறது என்றால், எங்களுக்குள்ளும் ஒரு திறன் இருக்கிறது, மற்றொரு திறன் அது என்று நிரூபித்துள்ளீர்கள். இதுபோன்று மாற்றுத் திறனாளிகளே என்கின்ற சொல், தன்னம்பிக்கையை நிறைய தன்னுள் அடக்கிய ஒரு சொல். இந்தச் சொல் உங்களுடைய வாழ்க்கையைப் பொறுத்தவரையில் எந்த அளவிற்கு நிறைவானதாக இருக்கிறது?
WD
சிதம்பரநாதன்: மாற்றுத்திறனாளிகள் என்று உடல் குறைபாடு உடையவர்களை அல்லது ஐம்பொறிகளில் குறைபாடு உள்ளவர்களை அழைக்கின்றனர். இன்றைக்கும் ஊனமுற்றோர்கள், அதைவிட மோசமாக நொண்டிகள், குருடர்கள், கிறுக்கர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். அவர்களும் மனிதர்கள்தான். மேலும், மதிப்புமிக்க மனிதர்கள். அவர்களிடத்திலும் சாதாரண மனிதனிடம் இருக்கிற எல்லா ஆற்றலும் இருக்கிறது. ஆனால் ஊனம் அல்லாதவர்கள் என்று சொல்லப்படுகிறவர்களிடமும் குறைபாடு இருக்கிறது. அதுபோன்றுதான் இவர்களிடம் குறைபாடுகள் இருக்கிறது. இது உடல், மனம் சார்ந்த விடயம்.
இதுபோன்று குறைபாடுகள் இருப்பதால், மாற்றுத் திறனாளிகள் என்று அழைப்பதற்கு முன்னாடி இருந்த சொற்களின் மூலம் அவர்களையெல்லாம் புறக்கணிப்பது போன்று இருக்கிறது. சமூகத்திலோ, குடும்பங்களிலோ அல்லது அக்கம் பக்கத்திலோ ஒதுக்குவது போன்றும், பலவீனமானவர்களாகவும், வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என்கின்ற அளவிற்கு கூட இருந்ததை மாற்றிதான் இந்தச் சொல் வந்திருக்கிறது. அவர்களுக்குள் நிறைய திறமைகள் இருக்கிறது. அது அங்கீகரிக்கப்படவில்லை. வள்ளுவர் சொல்லியிருப்பது போன்று,
உடல் அங்கங்களில் ஏற்படும் குறை ஒரு குறை அல்ல. அவர்களிடம் இருக்கும் திறமை, ஆளுமை அல்லது முயற்சி செய்து மாற்றுத் திறனை வளர்ப்பதற்கு ஒரு தூண்டு சக்தியாக சமுதாயமோ குடும்பமோ அல்லது அரசாங்கமோ இல்லாமல் இருப்பதுதான் குறை. ஒருவருடைய திறமையை அவனுடைய ஆசிரியர்களால், பெற்றோர்களால் கண்டுகொள்ள முடியும். அதுபோல, ஒன்றுமே முடியாது என்று இருப்பவனிடம், அவனுடைய செயல்பாடுகளை வைத்து பராமரிப்பவர்கள் அவனுடைய ஆற்றலைக் கண்டுபிடித்து வளர்க்க முடியும்.
ஹெலன் கெல்லர் போன்ற இரண்டு மூன்று குறைபாடுகள் உடைய, கண் தெரியாது, பேசுவதற்கு சிரமம், காது கேட்காது என்பன போனற மல்டிபிள் டிசெபிளிட்டி என்று சொல்லக்கூடிய அந்த அம்மையாரை அவருடைய குடும்பத்திலேயே ஒதுக்கி வைத்திருந்தார்கள். ஆனால் அவருடைய ஆசிரியை, தாதியாக இருந்த அந்த அம்மாவினுடைய ஆற்றலை மெதுவாக கண்டறிந்து அவர்களிடம் இருந்த மற்ற திறமைகளை இதயத்தை, மன ஆற்றலை வளர்த்து மற்றவர்களுக்கெல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷனாக, ஒரு முன்னுதாரனமாக உலகத்தில் உள்ள சிந்தனையாளர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக இருந்தார்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில். இதுபோன்று நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். மாற்றுத் திறனாளிகள் எடிசனில் இருந்து, பீத்தோவான், மெல்டனில் இருந்து இன்றைக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் வரை.
FILE
ஸ்டீஃபன் ஹாக்கிங் எடுத்துக்கொண்டால், அவரால் நடக்க முடியாது, கை இயங்காது, வாய் பேச முடியாது. கண் இருக்கிறது, மனம் இருக்கிறது. இது இரண்டுதான், மற்ற எல்லாம் முடங்கப்பட்ட பன்முகப்பட்ட ஊனமுடையவர். இவர்தான் பிரபஞ்சத்தினுடைய இயக்கம் குறித்தான, ஐன்ஸ்டீனுக்குப் பிறகு, நியூட்டனுக்குப் பிறகு, இன்றைய நவீன விஞ்ஞானத்தில் அவருடைய கண்டுபிடிப்புதான், பிரபஞ்சம் இறைவனால் படைக்கப்படவில்லை, இயற்கையாக உருவாகி அதன் விதியால் அது இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது. எந்தவொரு வெளி சக்தியும் அதனை இயக்கி, பராமரித்து நடத்தவில்லை என்பதை உலக விஞ்ஞானிகள் மாநாட்டில் கூறி, அவருடைய கூற்றை எல்லா விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொண்டனர். இத்தாலியில் உள்ள போப் ஆண்டவர் அவரை அழைத்து கவுரப்படுத்தியது மட்டுமல்லாமல், போப் ஆண்டவர் காலில்தான் எல்லோரும் மண்டியிட்டு வணங்குவார்கள். ஆனால், அவர் இவர் காலில் மண்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்.வெப்துனியா.காம்: இவ்வளவு பெரிய சிந்தனைக் செரிவு, பரந்து விரிந்த பார்வை எல்லாமே இன்றைய சிதம்பரநாதன். ஆனால், வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் சிறு பிள்ளையாக நீங்கள் இருந்தபோது, மற்றப் பிள்ளைகள் ஓடும் நேரத்தில் உங்களால் ஓட முடியாத ஒரு நிலை. ஏனென்றால், 2 வயதில் போலியோ தாக்கி உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு பள்ளி மாணவனாய் வளரும் போது, பிறகு கல்லூரி என அந்தக் காலகட்டத்தில் உங்களுடைய சிந்தனை எப்படி இருந்தது?
சிதம்பரநாதன்: என்னுடைய வாழ்க்கையின் ஆரம்பக் காலம். எங்களுடையது நடுத்தர விவசாயக் குடும்பம். கூடப்பிறந்தவர்கள் நிறைய பேர். ஆறு, ஏழு பேர். விவசாயக் குடும்பத்தில் எப்படி நிறைய ஆடுகள், மாடுகள், நிறைய விவசாயப் பண்ணைகள், ஆட்கள் இருக்கும் ஒரு கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவன். 1947இல் பிறந்தவன். மிகவும் பஞ்சக் காலத்தில் பிறந்தவன் என்று சொல்வார்கள். ஆனால், பார்ப்பதற்கு வட்டாரத்திலேயே தோற்றத்தில் கொஞ்சம் நன்றாகவே இருந்திருக்கிறேன். அதனால், என்னை எல்லோரும் விரும்பி எடுத்துக்கொள்வார்கள். அதாவது, இவனும் ஒரு குழந்தை இவனும் இருந்துவிட்டுப் போகட்டும் என்றுதான் இருந்தார்கள். ஏனென்றால், இவன் பயன்படுவான், வளர்ந்து ஆளாவான் என்ன எண்ணமெல்லாம் இல்லை. அந்தக் காலத்தில் சித்த வைத்தியம், இயற்கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்திருக்கிறார்கள். அதிலெல்லாம் தோல்வி. நிறைய பணமெல்லாம் செலவிட்டிருக்கிறார்கள்.
தவிர, 7 வயதில்தான் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறார்கள். வேலையாட்கள் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள். 3வது வரை படித்திருக்கிறேன். அதன்பிறகு குச்சி தயார் செய்து கொடுத்து நானே நடக்க பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், என்னை தனியாகப் பராமரிக்கவில்லை.
எங்களுடைய குடும்பத்தில் மங்களசாமி என்கின்ற அண்ணன் எனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருந்தார். அவர் ஒரு கம்யூனிஸ்ட். முதலில் திராவிட இயக்கத்தில் அண்ணாதுரையுடன் இருந்துவிட்டு, அதன்பிறகு இராமமூர்த்தி, மணலி கந்தசாமி இவர்களுடன் சேர்ந்து பிரசிடென்சியில் படித்தார். அவர் நன்றாகப் படிக்கக்கூடியவர். மாமா ஒருவர் செயின்ட் தாமஸ் மவுண்டில் இராணுவத்தில் கம்பவுண்டராக இருந்தார். என்னை அவருடைய பராமரிப்பில் விட்டார்கள். இயல்பாக எனக்கு ஆங்கிலத்தில் - இராணுவத்தினர் பேசும் போது அதில் ஆர்வம் இருந்திருக்கிறது. 3, 4 வயதிலேயே அப்படி இருந்தாகச் சொல்வார்கள். ஆனால், மீண்டும் ஒரு சூழலில் ஊரிலேயே கொண்டு வந்து விட்டுவிட்டார்கள்.
தமிழ்.வெப்துனியா.காம்: ஆனால், எப்பொழுது உங்களுடைய இந்தக் குறை நம்முடைய முன்னேற்றத்தை அல்லது சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் விஷயத்திற்கு தடையாக இருக்கிறது என்று நினைத்தீர்கள்?