தமிழ்.வெப்துனியா : வாழ்க்கையைப் பற்றி எப்படி ஒரு புரிதலை ஏற்படுத்துகிறீர்கள். நன்னடத்தை விதி, நன்னடத்தை கட்டுப்பாடு என்று சொல்லிக் கொடுக்கின்றீர்களா அல்லது நீங்கள் இப்படி சம்பாதித்தால் இப்படி வாழலாம், இப்படி செய்யலாம் என்று கற்றுத் தருகிறீர்களா?
இரண்டையும் செய்கிறோம்.
webdunia photo
WD
கிராமத்தில் வாழும் குடும்பங்களில் ஆண் வெளியில் சென்று வேலை செய்கிறான், ஆனால் வருமானம் வீட்டிற்கு வருவதில்லை, வழியிலேயே குடித்துவிட்டு வருகிறான், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அடியும் உதையும்தான் கிடைக்கிறது.
அந்த மாதிரி பெண்கள் சிறு சிறு வேலைகளுக்குச் சென்று சம்பாதித்து வரும் பணத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்துகிறார்கள்.
அவர்களுக்கு தையல், எம்ப்ட்ராயட்ரிங் போன்றவை கற்றுத் தருகிறோம். அதனால் அவர்களுக்கு துணி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் வேலை கிடைத்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றும் நிலைக்கு உயர்துள்ளனர்.
அதில்லாமல், ஒரு நிறுவனத்தை தாங்களே உருவாக்கி அதனை எப்படி செயல்படுத்துவது என்றும் கற்றுத் தருகிறோம். அதன்படி ஒரு சில பெண்கள் குழுக்களாக சேர்ந்து ஒரு தையல் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கும் காந்தி, விவேகானந்தர், பாரதியாரின் கருத்துக்களை கற்றுத் தருகிறோம்.
கிராமத்து இளைஞர்களுக்கு இலவசமாக ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி, கணினி பயிற்சி அளிக்கிறோம். இப்படி பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளோம்.
தமிழ்.வெப்துனியா : குடிப்பவர்களை திருத்தும் சேவையை செய்து வருகிறீர்களா?
ஆம் அதையும் செய்கிறோம். சேவாலயா அமைந்துள்ள பகுதியில் சாராயம் காய்ச்சும் தொழில் நடந்து வந்தது. அதை முற்றிலும் தடுத்துவிட்டோம். ஆனாலும், குடிப்பவர்கள் வெளியில் சென்று வாங்கி வந்து குடிக்கிறார்கள்.
சேவாலாயாவின் கலைக்குழுவினர் வாரத்திற்கு ஒரு முறை கிராமங்களுக்குச் சென்று பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். கொட்டு முரசு என்று ஒரு அமைப்பை வைத்துள்ளோம். அவர்கள் கிராமங்களுக்குச் சென்று குடியால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக் கூறி வருகிறார்கள்.
தமிழ்.வெப்துனியா : ஒரு பல்கலைக்கழகத்தைத் துவக்குவதுதான் உங்கள் இலக்கு என்று கூறினீர்கள்? அதில் எந்த இடத்தில் உள்ளீர்கள்?
எங்கள் பள்ளியில் படித்த மாணவர்களை கல்லூரியில் சேர்த்து விடுகிறோம். அப்படி எங்களது 100 மாணவர்கள் தற்போது கல்லூரியில் படித்து வருகின்றனர். 100 பேருக்கு கல்லூரியில் கட்டணம் செலுத்துவதை விட, ஒரு கல்லூரியையே துவக்குவது செலவு மிச்சமாகும் என்று தோன்றுகிறது.
அது பற்றி யோசித்து வருகிறோம். எங்கள் கல்லூரிக்கு என்று ஏற்ற பாடப் பிரிவுகளை தேர்வு செய்து வருகிறோம். எளிதான கணினி பயிற்சி, தேவையான கல்வி அறிவு இருக்க வேண்டும். மருத்துவத்தில், நம் நாட்டு மருத்துவம் பற்றி பாடப் பிரிவு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு சேவாலாயா பல்கலைக்கழகத்திற்கு சிவில் இன்ஜினியரிங் படிப்பிற்கு ஒரு திட்டத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு ஒரு பாடப்பிரிவையே உருவாக்கி உள்ளார்கள்.
அவர்கள் ஒரு டாக்குமென்ட் உருவாக்கி கொடுத்துள்ளார்கள். தற்போது நிலமும், தேவையான அளவிற்கு நிதி உதவியும் தான் தேவை. எல்லாம் திட்டமிட்டு தயாராக உள்ளது.
தமிழ்.வெப்துனியா : உங்களுக்கு தேவையான நிதி உள்ளிட்ட மற்ற வசதிகளை நீங்கள் எப்படி பெறுகிறீர்கள்?
சேவாலயா அமைப்பை நடத்த ஒரு மாதத்திற்கு 8 லட்சம் தேவைப்படுகிறது. பலர் வழங்கும் நன்கொடை மூலமாக இதை செய்கிறோம். இது ஒரு மாதத்தில் கிடைக்கும். சில மாதத்திற்கு கிடைக்காமல் போகும். ஏற்றத்தாழ்வு ஏற்படும். கிடைத்தாலும், கிடைக்காமல் போனாலும் பள்ளிக்கான செலவை செய்துதான் ஆக வேண்டும்.
எனவே நன்கொடை மூலமாகவே இயங்குவதை விட, நாமே வருமானத்தை ஈட்ட வழி காண்கிறோம். அதாவது எங்களது சேவாலயா அமைப்பிற்கு என்று இருக்கும் 7 ஏக்கர் நிலத்தில் அரிசி, காய்கறி, பழம் பயிரிட்டு அதை பள்ளிக்கு பயன்படுத்திக் கொள்கிறோம்.
மேலும், பினாயில் போன்றவற்றை தயாரிக்கிறோம். உரம் தயாரித்து அதை எங்கள் நிலங்களுக்கு பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அதை விற்பனைக்கும் கொண்டு வந்துள்ளோம். இதேப்போன்று கைத்தொழில் செய்து பொம்மைகளையும் விற்பனைக்கு வைத்துள்ளோம். சிலர் ஓவியங்கள் வரைந்து எங்களிடம் கொடுத்து அதனை விற்று பணத்தை சேவாலயாவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இதுபோன்றவற்றை விற்பனை செய்ய ஒரு கடை வைத்துள்ளோம். அதனை விரிவாக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.
நன்கொடையையே முழுவதும் நம்பியில்லாமல், இதுபோன்றவற்றின் மூலம் எங்களது தேவையை நிறைவேற்றிக் கொள்ள முயன்று வருகிறோம்.
தமிழ்.வெப்துனியா : உங்களது குடும்ப வாழ்க்கை பற்றி கூறுங்கள்?
எனக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகன் பொறியியல் 3ஆம் ஆண்டு பயின்று வருகிறான். அடுத்து இரட்டையர்கள். அவர்கள் 8ம் வகுப்பில் இருந்து 9ம் வகுப்பிற்கு போகிறார்கள்.
தமிழ்.வெப்துனியா : சேவாலயாவின் பணிகளால் உங்களது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படவில்லையா?
webdunia photo
WD
இது ஒரு பணி, அது ஒரு குடும்பம் என்று பார்த்தால்தான் ஒன்றால் மற்றொன்று பாதிக்கப்படும். இரண்டையுமே சேர்த்து ஒரு குடும்பமாகத்தான் நான் பார்க்கிறேன். எனது மனைவி அப்படி அமைந்தார்கள். அவர் திருமணத்திற்கு முன்பு பணிக்குச் சென்று கொண்டிருந்தார். திருமணமாகி 1 ஆண்டில் வேலையை விட்டுவிட்டு சேவாலயாவில் முழு நேரமும் சேவையாற்ற விரும்பினார். அவரும் முழு நேரத்தையும் சேவாலயாவிற்கு செலவிடுவதால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. தற்போது நானும் எனது பணியை விட்டுவிட்டு சேவாலயாவிற்கு முழு நேரத்தையும் செலவிடுகிறேன்.
உங்களது வாழ்க்கையில் பொழுதுபோக்கு என்பது உள்ளதா? உங்களது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது போன்றவை...?
எங்கள் குடும்பத்தில் அனைவருமே இந்த சேவாலயாவின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். பொது நலத்திற்காக சுயநலத்தை விடுவதா அல்லது சுய நலத்திற்காக பொது நலத்தை விடுவதா என்பதைப் பொருத்ததுதான் நமது வாழ்க்கை. நாங்கள பொது நலத்திற்காக சுய நலத்தை விட்டுவிட்டோம்.
எப்போதாவது எங்கள் குடும்பத்தாருடன் வெளியே சென்று வருவோம். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஆனால் அது குறைந்தபட்சமாகவே இருக்கும்.
எனது மகனுக்கும் சேவையில் ஆர்வம் உள்ளது. சமீபத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் 6 பார்வையற்ற மாணவர்கள் கட்டணம் செலுத்தாத காரணத்தால் தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அவர்களது மொத்த கட்டணம் ரூ.1லட்சம் இருக்கும். இதனை அறிந்த எனது மகன், அவனது கல்லூரியில் உள்ள ஒவ்வொரு வகுப்பாகச் சென்று இது குறித்து விளக்கினான். மேலும் ஒரு சில கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களிடம் பேசி நிதி திரட்டினான். இரண்டே நாளில் 1 லட்ச ரூபாயை திரட்டி அந்த கல்லூரியில் கொண்டு போய் கட்டணத்தை கட்டி மாணவர்கள் தேர்வெழுத உதவினான். எனவே அவர்களும் இந்த சேவையில் ஈடுபடுவதால் இதுவே அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
தமிழ்.வெப்துனியா : 12ஆம் வகுப்பு வரை தாய்மொழியிலேயே படித்துவிட்டு பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்தில் படிக்கும்போது அவர்களுக்கு சிரமமாக இருக்குமே?
ஆமாம், நிச்சயமாக. எங்கள் பள்ளியில் முதல்நிலையில் தேர்வு ஆகும் மாணவர்கள், பொறியியலில் சேர்ந்ததும் முதல் ஆண்டு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஏன் சில தேர்வுகளில் தோல்வியும் அடைகிறார்கள். அவர்களுக்கு, ஆங்கிலம் தெரிந்த ஆர்வம் உடையவர்கள் இந்த பள்ளிக்கு வந்து அவர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அதுபோன்றவர்கள் இன்னும் நிறைய பேர் தேவைப்படுகிறார்கள்.
இந்த சிறப்பு வகுப்புகளின் மூலம் அவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறப்பாக படிக்க வழி செய்யப்படுகிறது.
தமிழ்.வெப்துனியா : அந்த மாணவர்களுக்கு தமிழ் மொழியிலேயே பாடங்கள் சொல்லிக் கொடுப்பது பற்றி கூறுங்கள்?
அவர்களால் தமிழ் மொழியில் மட்டுமே படிக்க முடியும். ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்தால் படிக்க முடியாமல் போய்விடும். எத்தனையோ ஆங்கிலப் பள்ளிகளைப் பார்க்கிறோம். அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலமும் சரியாக தெரியாது, தமிழும் தெரியாது. குறைந்தபட்சம் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் நன்றாகத் தெரியும் என்று சந்தோஷப்படலாமே.
தமிழ்.வெப்துனியா : உங்கள் பள்ளியில் கோசாலை அமைத்துள்ளது பற்றி கூறுங்கள்?
webdunia photo
WD
கோசாலை அமைத்ததன் நோக்கமும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றுதான். பசு பால் கறக்கும் வரை அதை வைத்திருந்துவிட்டு, பால் நின்றதும் கசாப்புக் கடைக்கு அனுப்பிவிடுவார்கள். அதனை தடுத்து அவற்றை வாழ வைக்கிறோம். அவை சும்மா சாப்பிடுவதில்லை, பசுவின் சாணத்தை எரிவாயுவாகவும், உரமாகவும் மாற்றிக் கொள்கிறோம், பசுவின் கோமியத்தையும் கிருமி நாசினியாகப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
அதுபோலத்தான் முதியவர்களையும் அங்கு வைத்துள்ளோம். ஒவ்வொரு முதியவர்களுக்கும் 5 குழந்தைகளை ஒப்படைத்துவிடுகிறோம். இவர்கள்தான் உங்களது தாத்தா, பாட்டி என்றும், அவர்களுக்கு இந்த 5 மாணவர்களும்தான் பேரப்பிள்ளைகள் என்று கூறிவிடுவோம்.
முதியவர்களும், குழந்தைகளும் உறவுகள் இல்லாமல் வாடுகின்றனர். அவர்களுக்கு உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.
தமிழ்.வெப்துனியா : உங்களது இந்த சேவையில் சமூகத்திடம் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
இரண்டு விஷயம் இருக்கிறது. ஒன்று பணம். பணம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. எத்தனையோ பெரிய ஆட்களிடம் எங்களது சேவாலாயாவிற்கு வாருங்கள் என்று கூறினால் அவர்களால் வர முடியாது. ஆனால் நன்கொடை அளிப்பார்கள். அவர்களது தொழில் அப்படி. முடிந்தவர்கள் நன்கொடை அளிக்கலாம்.
அடுத்தது பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் வாரத்தில் ஒரு நாளோ அல்லது மாதத்தில் 2 நாட்களோ தங்களது நேரத்தை எங்கள் மாணவர்களுடன் செலவிட வேண்டும். நடனம் தெரிந்தவர்கள், பாடல் தெரிந்தவர்கள், குறிப்பாக கணக்கு ஆசிரியர்கள் எங்களது மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தன்னார்வத்துடன் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
விளையாட்டு, இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக் கொடுத்து சேவையாற்றலாம்.
முன்பெல்லாம் பிறந்தநாள் என்றால் வீட்டிலோ அல்லது ஹோட்டலில் விருந்து வைப்பார்கள். இப்போதெல்லாம் அதுவும் கொஞ்சம் மாறி, சேவாலயாவிற்கு வந்து அவர்களுக்கு ஒரு நாள் உணவு வழங்கி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். முன்னோர்களின் நினைவு நாளையும் இதுபோல் செய்கின்றனர். இதுவும் ஒரு நல்ல மாற்றம்தான்.
அப்படி பிறந்த நாள் விழாவிற்கு ஒரு நாள் உணவு வழங்க எவ்வளவு தொகை தேவைப்படும்?
ரூ.8,000. அங்குள்ள மாணவர்கள், முதியவர்கள், பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் காலை, மதியம், இரவு உணவளிக்க ரூ.8,000 ஆகும்.
சேவாலயாவிற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டா?
100 சதவீத வருமான வரி விலக்கு உண்டு. 80ஜி என்று சொல்வார்கள். அது 50 விழுக்காடுதான். அதுவும் இருக்கிறது. சேவாலயாவின் சில சிறப்பு சேவைகளாக கல்வி செலவு, குழந்தைகள் இல்ல செலவு, பள்ளிக் கட்டிடம் கட்ட செலவு ஆகியவற்றுக்கு நன்கொடை அளித்தால் 35ஏசி பிரிவின் கீழ் 100 விழுக்காடு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
வையத் தலைமை கொள் என்ற லீடர்ஷிப் பற்றி நீங்கள் எழுதிய புத்தகம் பற்றி கூறுங்கள்?
கல்கி நிர்வாகி சீதா ரவியை, எங்கள் சேவாலயாவின் விழா ஒன்றுக்கு அழைத்திருந்தோம். அப்போது, அவர், இந்த சேவாலயாவின் அனுபவங்கள் பற்றி நீங்கள் கல்கியில் கட்டுரை எழுதுங்கள் என்று கூறினார்.
தலைமைப் பன்பு பற்றி காந்தி, பாரதி, விவேகானந்தர் கூறியதைத்தான் நான் கூற முடியும். அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். இந்த காலத்தில் கருத்தரங்கு வைத்துக் கூறுவதைத்தான் அந்த காலத்திலேயே அவர்கள் வாழ்ந்து காட்டிவிட்டார்கள். நானும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளேன். அதையும், இவர்கள் கூறியதையும் சேர்த்து 15 வாரம் கட்டுரை எழுதினேன். அதன்பிறகு அவர்களே இதனை தொகுத்து ஒரு புத்தகமாகவும் வெளியிட்டனர்.