புவி வெப்பமடைதலால் வறுமை அதிகரிக்கும் அபாயம்

திங்கள், 12 ஜனவரி 2009 (14:12 IST)
webdunia photoWD
புவி வெப்பமடைதலால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் வெப்ப மண்டல நாடுகளில் பயிர் விளைச்சல் பெரும் பாதிப்புக்குள்ளாகி உலக மக்கள் தொகையில் பாதி பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

வெப்ப மண்டல நாடுகள், துணை வெப்ப மண்டல நாடுகளில் தற்போது 3 பில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இப்பகுதிகளில் மக்கள் தொகை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு அமெரிக்கா முதல் வடக்கு அர்ஜெண்டினா, தெற்கு பிரேசில் வரையிலும், வட இந்தியா முதல் தெற்கு சீனா, தெற்கு ஆஸ்ட்ரேலியா, மற்றும் ஆப்பிரிக்காவின் அனைத்துப் பகுதிகளும் இதனால் வறுமையில் தள்ளப்படும் என்று இந்த புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழலுக்கான ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில், வாஷிங்டன் பல்கலைக்கழக வானிலை விஞ்ஞான பேராசிரியர் டேவிட் பாட்டிஸ்டியும் இணைந்துள்ளார். இவர் இது பற்றி கூறுகையில் "புவி வெப்பமடைதலின் தாக்கம் உலக உணவு உற்பத்தியில் செலுத்தும் எதிர்மறை விளைவுகள் அபரிமிதமானது" என்கிறார்.

webdunia photoWD
வரலாற்றில் இதுவரை ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறை வரலாற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அதனடிப்படையில் புவி வெப்பமடைதலால் உணவுப் பாதுகாப்பிற்கு ஏற்படும் நெருக்கடிகளையும் இந்த ஆய்வு மேற்கொண்டுள்ளது.

வரலாற்று ரீதியான உணவுப் பற்றாக்குறையில் இவர்கள் 2003ஆம் ஆண்டு பிரான்சிலும், 1972ஆம் ஆண்டு உக்ரய்னிலும் ஏற்பட்ட உணவு நெருக்கடியை ஆய்விற்கு எடுத்துக் கொண்டனர்.

கடுமையான வெப்ப அலைகளால் கோதுமை விளைச்சலில் ஏற்பட்ட பெரும் நெருக்கடி உலக கோதுமை சந்தையில் 2 ஆண்டுகளுக்கு தாக்கம் செலுத்தியதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்ப மண்டல நாடுகள் மட்டுமல்லாது, 2003ஆம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப நிலை உயர்வால் 52,000 பேர் உயிரிழந்தனர்.

webdunia photoWD
இந்த காலக் கட்டங்களில் பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் இருந்து வந்த வெப்பத்தின் அளவால் கோதுமை விளைச்சல் மூன்றில் ஒரு பங்கு குறைந்தது.

இந்த புவி வெப்பமடைதல் நடவடிக்கைக்கேற்ப நம் பயிர் முறைகளை மாற்றி அமைக்கும் புதிய திட்டம் தேவை என்று கூறும் இந்த ஆய்வாளர்கள். புவி வெப்பமடைதலைப் பொறுத்தவரை இந்த நிலையே நீடிக்கும் என்பதாலும் பெரிய மாற்றங்கள் நிகழ சாத்தியங்கள் குறைவு என்பதாலும், புதிய தானியங்களை பயிர் செய்யும் முறையை கண்டுபிடித்து வெப்பத்தின் வீச்சிலிருந்து உணவைக் காக்க வேண்டும் என்றும் இவர்கள் புதிய யோசனை தெரிவித்துள்ளனர்.