புவி வெப்பமடைதலை அதிகரிக்கும் மேலும் 2 வாயுக்கள்!

வாஷிங்டன்: புவி வெப்பமடைதல் நடவடிக்கையை துரிதப்படுத்துவதில் மனித உற்பத்தி முறைகளால் பெருகிய கரியமில வாயுப் பிரச்சனைகளைத் தவிர மேலும் இரண்டு வாயுக்களின் வெளியேற்றமும் புதிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளதாக புதிய ஆய்வுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

webdunia photoWD
மீத்தேன், நைட்ரஜன் ட்ரைஃப்ளோரைடு என்ற இந்த இரண்டு வாயுக்களும் காற்றில் அதிகமாக கலந்து புவி வெப்பமடைதல் நடவடிக்கையில் கரியமில வாயுவிற்கு சளைத்ததல்ல என்று நிரூபித்து வருவதாக தட்பவெப்ப ஆராய்ச்சி விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கிரீன் ஹவுஸ் வாயுக்கள் என்று அறியப்படும் இத்தகைய வாயுக்களில் மீத்தேன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது இயற்கை எரிவாயு, நிலக்கரி சுரங்கம் தோண்டும் நடவடிக்கைகள், விலங்குகளின் கழிவுகள், மற்றும் முக்கியமாக அழியும் தாவரங்கள் ஆகியவற்றிலிருந்து மீத்தேன் பெருமளவு வெளியேறுகிறது.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ட்டிக் பகுதியில் அழிந்த தாவரங்கள் பில்லியன் டன்கள் அளவில் மீத்தேனை உற்பத்தி செய்துள்ளது. இவை கடலின் அடியாழத்தில் படிவுற்றது. ஆர்ட்டிக் கடல் பகுதியில் உஷ்ணம் அதிகரிக்க அதிகரிக்க இந்த மீத்தேன் வெளியேறத் துவங்கி புவி வெப்பமடைதலை மேலும் மோசமடையச் செய்யும் என்று சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதே போல் அண்டவெளியில் மீத்தேன் வாயுவின் இருப்பு ஒவ்வொரு 40 நிமிடங்களிலும் கணக்கிடப்பட்டு வருகிறது. ஜூன் 2006 முதல் அக்டோபர் 2007-வரை விண்வெளியில் மிதக்கும் மீத்தேன் வாயுவின் அளவு 28 மில்லியன் டன்கள் அதிகரித்துள்ளது. தற்போது காற்றில் 5.6 பில்லியன் டன்கள் மீத்தேன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுச்சூழலில் மீத்தேனின் பாதிப்பு குறித்து பிரதேயக ஆராய்ச்சிய்ல் ஈடுபட்டு வரும் எம்.ஐ.டி. சுற்றுச்சூழல் விஞ்ஞானி ரோன் பிரின் இது குறித்து கூறுகையில் "எப்போதெல்லாம் மீத்தேன் அளவுகள் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் நாம் வானிலை மாற்றங்களை அதிகரிக்கிறோம்" என்கிறார்.

இந்த மீத்தேன் அளவு அதிகரிப்பு குறித்து விஞ்ஞானிகள் பலரும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களும் தங்களது அச்சங்களை வெளியிட்டுள்ளனர்.