எரிபொருள் திறனை அதிகரிக்க புதிய கருவி!

சனி, 27 செப்டம்பர் 2008 (17:41 IST)
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்து கொண்டு வருவது குறித்து நாம் கவலையடைந்திருக்கலாம். ஆனால் கவலையை சற்றே ஒதுக்கி வைக்க அமெரிக்க டெம்பிள் பல்கலைக் கழக ஆய்வுக் குழு, வாகனங்களில் எரிபொருள் திறனை அதிகரிக்கும் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்த முழு விவரங்களை "எனர்ஜி அன்ட் ஃபியூயெல்ஸ்" (Energy and Fuels) இதழில் காணலாம்.

மின்சக்தி ஏற்றப்பட்ட சிறு குழாய்தான் இந்தக் கருவி. வாகனங்களின் எரிபொருள் இஞ்செக்டருக்கு அருகில் இருக்கும் இஞ்சினின் எரிபொருள் பாதையில் இந்தக் கருவி இணைக்கப்படும்.

வாகனத்தில் உள்ள பேட்டரியிலிருந்து கிடைக்கும் மின்சக்தி மூலம் இந்த கருவி மின்புலத்தை (Electric Field) உருவாக்கிக் கொள்கிறது. இது எரிபொருளின் அடர்த்தியை குறைக்கிறது அல்லது அதன் திட்ப நிலையை (viscosity) இலகுவாக்குகிறது.

இதனால் வாகனத்தில் உள்ள இஞ்சினுக்குள் சிறு சிறு துளிகளாக பெட்ரோல் அல்லது டீசல் செல்லும்.

"இதனால், ஏற்கனவே உள்ள எரிபொருள் இஞ்செக்டரைக் காட்டிலும் இதில் எரிப்பு நடவடிக்கை திறன் மிக்கதாகவும், சுத்தமாகவும் நடைபெறுகிறது" என்று டெம்பிள் பல்கலைக் கழக பௌதிகவியல் பேராசிரியரும், விஞ்ஞானியுமான ரோஞ்ஜியா தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கருவியைக் கொண்டு டீசல் மெர்சிடஸ் பென்ஸ் வாகனத்தை ஆறு மாத காலத்திற்கு நெடுஞ்சாலையிலும், நகர போக்குவரத்திலும் பரிசோதித்துள்ளனர் இந்த ஆய்வாளர்கள். நெடுஞ்சாலையில் ஒரு கேலன் ( ) டீசலுக்கு 32 மைல்கள் (1 மைல் = 1.6 கி.மீ.) கொடுக்கும் அந்த வாகனம் இந்தக் கருவியை பொருத்திய பிறகு தொடர்ந்து சீராக 38மைல்கள் கொடுத்ததாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே போல் நகரத்தின் உள்ளே, நெடுஞ்சாலை அளவிற்கு எரிபொருள் சிக்கனம் செய்யமுடியாவிட்டாலும், வழக்கத்தைக் காட்டிலும் 12 அல்லது 15 விழுக்காடு வரை அதிக மைலேஜ் கொடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கருவி அனைத்து வகையான இஞ்சின்களுக்கும் பொருந்தும் என்று கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்