ஆபத்தான நாடுகள்: ஆசியாவில் இந்தியாவுக்கு 9வது இடம்!

வெள்ளி, 18 ஜூலை 2008 (17:16 IST)
உலகளவில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் 36வது இடத்தில் உள்ள இந்தியா, ஆசிய அளவில் 9வது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக பேரிடர் மேலாண்மை திட்டங்களில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும் என உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக உலக வங்கி இன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்திய துணைக் கண்டம் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் வகையில் அமைந்துள்ளதாகவும், நாட்டில் உள்ள 633 மாவட்டங்களில், 199 மாவட்டங்கள் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்படும் காற்றழுத்தம் சூறாவளியை உருவாக்கும் வகையில் உள்ளதாலும், இமயமலையின் வடக்கு எல்லைப் பகுதிகளுக்கு அதிக நிலநடுக்க அபாயம் உள்ளதாலும் பேரிடர் நடவடிக்கைகளை இந்தியா மேம்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய காலத்தில் கங்கை நதிப்படுகைகளில் மட்டும் அதிகளவில் ஏற்பட்ட வெள்ளம், தற்போது ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் அடிக்கடி ஏற்படுவதாகவும், இதற்கு மண்ணின் தன்மை மாறியதும், போதிய வெள்ள வடிகால் கட்டமைப்பும் இல்லாததே காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது.

காடுகளை அழிப்பதால் மண்ணின் தன்மை குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் கண்டுள்ளதாகவும், இதன் காரணமாக மிதமான, பெருமழைக் காலங்களில் வெள்ள நீரை மண் உறிஞ்சுவதில்லை என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது.

கடந்த 1984 முதல் 2003 வரை இந்தியாவில் 85 வெள்ளப் பெருக்கு, 51 சூறாவளி, 10 நிலநடுக்கங்கள் (5 ரிக்டருக்கு மேல்), 8 கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2004 டிசம்பர் 26ம் தேதி இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 0.18 சதவீதம் பாதிக்கப்பட்டதாகவும், இந்தியாவில் மட்டும் 10 ஆயிரம் பேர் உயிரிழந்ததுடன், 5 ஆயிரம் பேரின் நிலை குறித்த தகவல் இல்லை என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டி உள்ளது.

இந்த அறிக்கையை செய்தியாளர்களிடம் வழங்கிப் பேசிய உலக வங்கியின் மூத்த அதிகாரி வினோத் தாமஸ், பேரிடர்களை சமாளிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்றாலும், பேரிடர் மேலாண்மைக்காக ஒதுக்கப்படும் நிதி குறைவாக உள்ளதாலும், அதற்கான திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்தாத காரணத்தாலும் அதிகளவில் சேதம் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்