புவி வெப்பம் மீதான ஜி-8 ஒப்பந்தம் ஐ.நா. அதிருப்தி!

வியாழன், 10 ஜூலை 2008 (14:29 IST)
பெர்லின்: புவி வெப்பமடைதல் நடவடிக்கையை அதிகரிக்கும் கரியமில வாயு வெளியேற்ற கட்டுப்பாடு நடவடிக்கைகளில் ஜி-8 நாடுகள் ஒப்புக் கொண்டுள்ள விஷயங்கள் போதுமானதாக இல்லை என்று ஐ.நா. சுற்றுச்சூழல் தலைவர் குறை கூறியுள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற ஜி-8 மாநாட்டில் வானிலை மாற்ற விவாதங்களுக்கு பிறகு முன்னணி தொழிற்துறை நாடுகளான ஜி-8 நாடுகள் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டன.

இந்த ஒப்பந்தம் குறித்து ஐ.நா. சுற்றுச்சூழல் இயக்கத் தலைவர் ஆச்சிம் ஸ்டெய்னர் கூறுகையில் அது எந்த விதத்திலும் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார்.

குறைந்தது அவர்கள் பின்னோக்கிச் செல்லாமல் இருந்தனர். ஆனால் இந்த விஷயத்தில் நடவடிக்கை என்ற அளவில் இன்னமும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது என்றார் அவர்.

2050 ஆம் ஆண்டிற்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 50 விழுக்காடு குறைத்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜி- 8 நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளது, ஆனால் இடைப்பட்ட காலத்தில் இதற்காக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்பதை தெரிவிக்கவில்லை என்று ஸ்டெய்னர் கூறுகிறார்.

ஜி-8 நாடுகளின் இந்த ஒப்பந்தம் குறித்து சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் தங்களது அதிருப்திகளை வெளியிட்டுள்ளனர். அதாவது வானிலை மாற்ற பிரச்னைகளுக்கு உடனடி செயல் திட்டங்கள் தேவை என்றும், இந்த நாடுகள் 2050 ஆம் ஆண்டிற்குள் 50 விழுக்காடு கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவோம் என்று கூறுவது எந்த விதத்திலும் போதாது என்று கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்