புவி வெப்பமடைதலால் கடல் நீர் அமிலமயமாகிறது என்றும், அதனால் கடல் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அமெரிக்க கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியாகியுள்ள சயன்ஸ் இதழில் இது குறித்து இரண்டு ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளது.
புவி வெப்பமடைதலால், தினசரி மில்லியன் டன்கள் கணக்கில் புவி வெப்ப வாயுவை கடல்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால் பருவ நிலை மாற்றங்கள் மெதுவாக நடைபெறும் என்ற நன்மை இருந்தாலும் கடல் நீரில் இவை ஏற்படுத்தும் ரசாயன மாற்றம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், கடல் வாழ் உயிரினங்களின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் மிக வேகமாக நடைபெறுவதாகவும், கடல் நீர் அமிலமயமாதலால் ஏற்படும் விளைவுகளை துல்லியமாக கணிக்க முடியவில்லை என்றும் ஸ்டான்ஃபோர்டில் உள்ள சுற்றுச் சூழல் விஞ்ஞானி கென் கால்டெய்ரா கூறியுள்ளார்.
சயன்ஸ் இதழில் இதற்கு முன் வெளியான மற்றொரு கட்டுரையில் கடல் ரசாயன ஆய்வாளர் ரிச்சர்ட் ஃபீலி, 200 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தொழிற்புரட்சி முதற்கொண்டே கடல் நீர் அமிலமயமாகும் நடவடிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படாமல் இதே அளவு தொடருமானால் இந்த நூற்றாண்டில் அனைத்துக் கடல் நீரும் 150 விழுக்காடு அமிலமயமாகிவிடும் என்று ஃபீலி அந்த கட்டுரையில் எச்சரித்துள்ளார்.
கனடா முதல் மெக்சிகோ வரையிலான பசிபிக் கடலில் ஆழமான பகுதியிலிருந்து மேற்புறம் வரும் நீரில் இத்தகைய ரசாயன மாற்றம் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதனால் இப்பகுதி கடல் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுக்தல் ஏற்பட்டுள்ளது என்றும், கார்பன்டையாக்சைடால் அமில மயமாகும் கடல் நீரின் அரிப்புத் தன்மை கடுமையாக அதிகரித்துள்ளது என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.
கார்பன் டை ஆக்சைடு அதிகமுள்ள கடலின் ஆழ் பகுதிகளிலிருந்து நீர் மேற்புறம் வரும்போது மேற்புற கடல் நீர் அமிலமயமாகிறது. இது அளவுக்கு மீறி நிகழ்ந்தால் சிறு கடல் வாழ் உயிரினம் முதல் ராட்சத சுறா மீன்கள் வரை அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும் என்று ஆய்வாளர் ஃபீலி கூறுகிறார்.
கடல் நீர் அமிலமயமாதலால் அதில் உள்ள பவளப்பாறைகளுக்கு ஏற்படும் சேதங்கள் பற்றி விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளனர்.