இமயமலை பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்: வல்லுநர்கள்!
வெள்ளி, 2 மே 2008 (13:28 IST)
இமயமலைத் தொடரில் உருவாகும் ஆறுகளால் பயன்பெறும் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள், பருவநிலை மாற்றத்தினால் இமயமலையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தங்களிடம் உள்ள ஆராய்ச்சித் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இமயமலைத் தொடர் பற்றிய ஆதாரத்துடன் கூடிய விவரங்கள் போதுமான அளவில் இல்லாத காரணத்தால், அம்மலைத் தொடரில் உருவாகும் ஆறுகளை மேம்படுத்தும் திட்டங்கள், நீர்ப் பாசனத் திட்டங்கள், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கிடும் பணிகள் உள்ளிட்டவை முழுமையடைவது கேள்விக்குறியாகி உள்ளது என்று அவர்கள் கூறினர்.
இமயமலைத் தொடரில் உருவாகும் ஆறுகளால் பயன்பெறும் நாடுகள், இமயமலைப் பகுதிகள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதிலும் அவற்றைப் பகிர்ந்து கொள்வதிலும் ஒத்துழைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ''இமயமலையின் ஆறுகள்" என்ற தலைப்பில் புது டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற வல்லுநர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
பருவநிலை மாற்றத்தினால் அதிகளவில் பாதிக்கப்படும் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், சீனா, ஆஃப்கானிஸ்தான், பூடான் ஆகிய நாடுகள், இமயமலை பற்றிய தகவல்களைத் திரட்டுவதிலும் அவற்றைப் பகிர்ந்துகொள்வதிலும் ஒன்றுபட்டுச் செயல்படுவதற்கு உரிய காலம் இதுதான் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த மாநாட்டில் பேசிய உலக வங்கியின் சுற்றுச்சூழல் வல்லுநர் சஞ்சய் பகுஜா, இமயமலையில் உருவாகும் ஆறுகளை அதிகம் சார்ந்திருப்பது இந்தியாதான்- கங்கை மற்றும் பிரம்மபுத்திரா- கங்கையிடம் 40 விழுக்காடு பாசன நிலங்கள் உள்ளன, பிரம்மபுத்திராவிடம் 40 விழுக்காடு தாது வளங்கள் உள்ளன என்றார்.
ஆனால், இந்த ஆறுகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் எல்லாப் பாசனத் திட்டங்களும் முழுமையடைவதில்லை. எதிர்காலத் திட்டங்களை உருவாக்குவதும் கடினமாக உள்ளது. ஏனெனில், அவை பயணிக்கும் பகுதிகள் பற்றிய முழுமையான தகவல்கள் இல்லை என்றார் அவர்.
இமயமலைப் பகுதியில் ஒவ்வொரு 10,000 சதுர கிலோ மீட்டருக்கும் 10 முதல் 40 வானிலை ஆய்வு மையங்களை அமைக்க வேண்டும் என்று உலக வானிலை ஆய்வு மையங்களின் கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது என்ற பகுஜா, இந்தியாவில் வானிலை ஆய்வு மையங்களின் பற்றாக்குறையும், போதுமான தகவல்கள் இல்லாததற்குக் காரணம் என்றார்.
பருவநிலை மாற்றத்தினால் இமயமலையில் ஏற்படும் பாதிப்புகள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்று ஐ.பி.சி.சி. அமைப்பு கூறியுள்ளதைக் குறிப்பிட்ட அவர், வெப்பநிலை உயர்வு, பனிக்கட்டிகள் உருகுதல், வறட்சி அதிகரித்தல் போன்ற பொதுவான விவரங்கள் மட்டும் போதாது என்றார்.
உலக வங்கி சார்பில் பேசிய டேவிஸ் கிரே, இந்தியா, பாகிஸ்தான், பூடான், சீனா, நேபாளம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களின் எதிர்காலச் சந்ததியினருக்கு குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இமயமலை பற்றிய தகவல்களைச் சேகரித்துப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.
கெளகாத்தி ஐ.ஐ.டி. பேராசிரியர் சந்தன் மஹனட்டா பேசுகையில், பருவநிலை மாற்றத்தினால் கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிட முடியாததற்குக் காரணம் இமயமலை பற்றிப் போதுமான தகவல்கள் இல்லாததுதான் என்றார்.
மேலும், எரிசக்தி அமைச்சகச் செயலர் அனில் ரஷ்தான், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் உள்ளிட்ட பலர் இம்மாநாட்டில் பேசினர்.