அழிவிலிருந்து புவியைக் காப்போம்!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (14:20 IST)
இன்று புவி தினம்

நம்மையும், நமக்கு முன்னோடியாகத் திகழ்ந்த தாவரங்களையும், இதர ஜீவ ராசிகளையும் உருவாக்கி, வாழ வைத்துவரும் இயற்கையின் தொட்டிலாகத் திகழ்ந்துவரும் இப்புவியைக் காப்போம் என்று 1970 ஆம் ஆண்டு முதல் ஒரு சர்வதேச நாளாக புவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

webdunia photoFILE
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த அந்நாட்டு நாடாளுமன்ற (செணட்) உறுப்பினர் கேலார்ட் நெல்சன், நமது சுற்றுச் சூழலில் ஏற்பட்டுவரும் சிரழிவைத் தடுத்து நிறுத்த ‘சுற்றுச் சூழலைப் பற்றி கற்பிப்போம்’ எனும் பொருளுடன்தான் 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த இயக்கத்தைத் துவக்கினார்.

அன்றைக்கு சுற்றுச் சூழலைக் காப்போம் என்ற குறிக்கோளுடன் துவங்கிய அந்த இயக்கம், இன்று நாம் வாழும் இப்புவியைக் காப்போம் எனும் விரிவான நோக்கம் கொண்ட நாளாக ஐ.நா.வால் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நாளிற்கு இந்த அளவிற்கு சர்வதேச அளவில் முக்கியத்துவம் அதிகரிக்கக் காரணம்? புவி வெப்பமடைதலால் ஏற்பட்டு வரும் வானிலை மாற்றமும், அதன் காரணமாக அதிகரித்துவரும் பனிப்படல உருகலும், அதனால் ஏற்படும் நீர் பெருக்கு கடல் மட்டத்தை உயர்த்துதலும், மற்றொரு பக்கத்தில் பருவ நிலை மாற்றத்தால் காலம் தவறி மழை பொழிதலும், வெள்ளப் பெருக்கும் முன் எப்போதும் காணாத அளவிற்கு ஏற்படுத்திவரும் சிரழிவு மானுடத்தை ஒட்டுமொத்தமாக உலுக்கியுள்ளது.

வட, தென் அமெரிக்க கண்டங்களிலிருந்து ஆசியா வரை கடந்த சில ஆண்டுகளாக இயற்கையின் சுழற்சியில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் - பருவம் தவறிய மழைப் பொழிவும், அபரிதமான வெள்ளப் பெருக்கும் - மக்களின் முறை சார்ந்த வாழ்வை பெரிதும் பாதித்துள்ளது.

webdunia photoFILE
வட, தென் துருவங்களான ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிப் பாறைகள் உருகுவது சராசரி அளவுகளை விட அதிகரித்திருப்பது அங்கு வாழும் அரிய வகை உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதென்றால், பருவம் தவறி மழை பொழிவதும், எதிர்பாராத காலங்களில் ஏற்படும் வானிலை மாற்றத்தால் உருவாகும் புயல், மழையால் உண்டாகும் வெள்ளப்பெருக்கு விவசாயத்தை திக்குமுக்காடச் செய்துள்ளது.

இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சியுற்றுள்ள மானுடம், நமது வாழ்வாதாரமாக திகழும் இயற்கையைக் காக்க இப்புவியைக் காக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஒரு நூற்றாண்டில் புவி மேல் பரப்பின் வெப்ப அளவு 0.74 டிகிரி ஃபாரன்ஹீட் (0.18 டிகி‌ரி சென்டிகிரேட்) அதிகரித்துள்ளதென வானிலை மாற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறுகிறது. இந்த வெப்ப நிலை மாற்றமே இந்த அளவிற்கான பாரிய அழிவை ஏற்படுத்துமென்றால், புவியின் வெப்ப நிலை மேலும் அதிகரித்தால் அது இயற்கையை இல்லாமல் ஆக்கவிடும் என்கின்ற ஆபத்தை மானுடம் உணர்ந்துவிட்டது.

அதன் விளைவே, பொதுவாக உலகத்தைப் பற்றிக் கவலைப் படாமல் தங்களுடைய பொருளாதார, வல்லா‌ண்மை ஆதிக்கத்தைத் தக்கவைக்கும் நடவடிக்கையிலேயே எப்போதும் ஈடுபடும் உலகின் பணக்கார 8 நாடுகளின் அமைப்பும் இப்பிரச்சனையை சிரத்தையுடன் ஏற்று செயலாற்ற முன்வந்துள்ளது.

இதுவரை வெறும் அச்சுறுத்தல் பிரச்சாரமாக மட்டுமே இருந்த புவி வெப்பமடைதலும், வானிலை மாற்றமும், தற்பொழுது அதனை எதிர்கொண்டு சமாளிக்கவும், அந்த மாற்றங்களுக்குத் தக்கவாறு விவசாயம் உள்ளிட்ட இயற்கை சார்ந்து பாரம்பரியத் தொழில்களை மாற்றியமைத்துக்கொள்ள முன்வந்திருப்பது மிகப் பெரிய முன்னேற்றமாகும்.

webdunia photoWD
உரிய காலத்தில் பொழியும் பருவ மழையை மட்டுமே முழுமையாக நம்பி சாகுபடிச் செய்யப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றிலிருந்து மாறி கம்பு, கேழ்வரகு, சோளம் போன்றவற்றை அதிக அளவிற்கு சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி ம.சா. சுவாமிநாதன் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

வானிலை மாற்றத்தை நன்கறிய ஆய்வு மேம்படுத்தப்பட வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாகும்.

இந்தியா போன்று, விவசாயம் உள்ளிட்ட இயற்கை சார்பு பாரம்பரியத் தொழிலில் பெரும்பான்மை மக்கள் ஈடுபடும் நாடுகளில்தான் பருவ மாற்றத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கின்ற நிலையில், வானிலை மாற்றங்கள் குறித்த தெளிவான முன்னறிவிப்பைத் துல்லியமாக அளிக்கும் அளவிற்கு அது தொடர்பான ஆய்வுகளை மேம்படுத்த வேண்டும்.

2004 ஆம் ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்த ஆழிப் பேரலைத் தாக்குதலிற்குப் பிறகு, அப்படியொரு அச்சுறுத்தலை முன் அறிந்து காத்துக்கொள்ளும் ஆய்வுகளுக்கு மத்திய அரசு முன்னுரிமையளித்து நிதி ஒதுக்கீடு செய்ததுபோல, வானிலை ஆய்வை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இந்த ஆண்டில் தென் மேற்குப் பருவ மழை சராசரி அளவிற்குப் பெய்யும் என்றுதான் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் சொல்ல முடிகிறதே தவிர, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் எந்த அளவிற்கு மழை மாற்றம் இருக்கும் என்று அருதியிட்டுக் கூற முடியவில்லை. ஏனென்றால் அதற்கான காரணிகள் ஏராளம் உள்ளன. மழை பொழிதலை நன்கு முன்னறியாமல் சாகுபடியில் ஈடுபடும் பொழுது இயற்கையின் எதிர்பாரா மாற்றங்கள் விவசாயத்திற்கு பேரழிவாக முடிகின்றது. இப்படி தொடர்ந்து நிகழுமானால் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும்.

நமது நாட்டின் ஒட்டு மொத்த உணவுத் தேவையை உள்நாட்டு உற்பத்தியின் மூலம் நிறைவு செய்வதே உண்மையான உணவுத் தன்னிறைவு ஆகும் என்று விஞ்ஞானி சுவாமிநாதன் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். இறக்குமதியின் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிப்பது விபத்தில் முடியும் பேராபத்து உள்ளது.

webdunia photoFILE
தனி மனித அளவிலும், தேச, மாநில, உள்ளூர் அளவிலும் இயற்கையில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கேற்றவாறு வாழ்கையை மாற்றியமைத்துக் கொள்வதும், புவி இயற்கையின் செழுமையை அழியாமல் காப்பதும் ஒரே திக்கில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கையாகும்.

மானுடம் இணைந்து செயல்படும் ஒரு வாய்ப்பை இயற்கை அளித்துள்ளது என்று ஏற்று, எல்லைகளைக் கடந்து ஒன்றிணைந்து செயல்பட்டு நம்மை வாழ வைக்கும் இயற்கையை காத்திடுவோம்.