தட்ப வெப்ப மாற்றத்தால் மன நோய்- உலக சுகாதார அமைப்பு!

செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (19:19 IST)
பூமி வெப்பமடைந்து வருவதால் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்களால் மன நோய் ஏற்படுகிறது என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடும் வெள்ளம், தீவிர வறட்சி இன்னும் பிற இயற்கை பேரழிவுகளால் பல்வேறு நோய்கள் மக்களை தாக்கக்கூடும், இதில் மன நோயும் ஒன்று என்று உலகச் சுகாதார அமைப்பின் மண்டல உதவி இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.

பூமி வெப்பமடைவதால் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் என்ற எச்சரிக்கைகளுக்குப் பிறகு புயலால் பாதிக்கப்பட்ட ஒரிசா, இங்கிலாந்தில் வெள்ளம் சூழ்ந்த ஊர் ஒன்று, ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டபோது பாதிக்கப்பட்ட மக்களில் பலருக்கு மன அழுத்த நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் நடந்து முடிந்த ஓராண்டிற்கு பிறகும் பீதியால் பலருக்கு மனநோய் ஏற்படுவதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் வறட்சியால் ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளும் ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக விவசாயிகள் கடுமையான மன வாதைக்குள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்கள், பயிர் பாதுகாப்பு, விதை சேகரிப்பு ஆகியவற்றை திட்டமிடமுடியாமல் அவர்கள் அன்றாட வாழ்வு பாதிக்கப்படுகிறது, இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வறட்சியின் பாதிப்பால் குடும்ப உறவுகளில் முறிவுகள் ஏற்படுவதாகவும், இதனால் கவலை அதிகரிக்க தற்கொலைகள் அதிகம் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வறட்சியால் பாதிக்கப்படும்போது, அதிகம் பேர் செய்யவேண்டிய வேலை ஒரு சிலரால் மட்டுமே செய்யப்படுகிறது, இதனால் பணிச்சுமை அதிகரிக்கிறது. கடினமான வேலைகளில் ஈடுபட நேரிடுவதால் உடல் நலமும், மன் நலமும் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்