பனிச் சிகரங்கள் உருகுவது இருமடங்கு அதிகரிப்பு!!

திங்கள், 17 மார்ச் 2008 (14:00 IST)
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட தகவலின் படி, உலகில் உள்ள பனிச் சிகரங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உருகிக் கொண்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கத்தைவிட பனிச் சிகரங்கள் உருகுவது இரட்டிபாகியுள்ளது என்று ஐ.நா ஆதரவில் செயல்பட்டு வரும் உலக பனிப்பாறை கண்காணிப்புச் சேவை எச்சரித்துள்ளது.

இமாலயம் உட்பட உலகின் 9 மலைத் தொடர்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பனிச் சிகரங்கள் அடர்த்தி குறைந்து வருகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளான ஆஸ்ட்ரியா, நார்வே, ஸ்வீடன், இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய நாட்டு மலைத் தொடர்களின் 100 பனிச் சிகரங்கள் குறிப்பிடத் தகுந்த அளவு சுருங்கியிருப்பதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

1980ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டுவரை ஆண்டொன்றுக்கு 30 செ.மீ வரை உருகி வந்துள்ள பனிச் சிகரங்கள் 2006ஆம் ஆண்டு கணக்கின்படி 1.5 மீட்டர்கள் வரை உருகி வருகிறது. குறிப்பாக ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆல்ப்ஸ் மற்றும் பைரெனீஸ் மலைத் தொடர்களில் பனிச் சிகரங்கள் குறிப்பிடத் தகுந்த அளவு குறைந்துள்ளதாக பி.பி.சி செய்தி ஏற்கனவே தெரிவித்திருந்தது.

1980ஆம் ஆண்டு முதல் உருகிய பனிச் சிகரங்களின் தண்ணீர் சமவிகிதம் 10.5 மீட்டர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் வானிலை தாறுமாறாக மாறுவதற்கு இதுவே காரணம் என்று உலகப் பனிப்பாறைகள் கண்காணிப்புச் சேவை அமைப்பு எச்சரிக்கை செய்கிறது.

பனிமலைகள் உருகுவது இன்னமும் தடுக்க முடியாத நிலைக்குச் சென்றுவிடவில்லை என்று கூறும் ஸ்காட் துருவப்பகுதி ஆய்வு அமைப்பின் டாக்டர் இயன் வில்லிஸ், உடனடியாக நடவடிக்கையில் இறங்கினால் பனிப்பாறைகள் உருகும் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்