கெஜ்ரிவால் அராஜகவாதியா, ஜனநாயக வாதியா? ஒரு அலசல்!

சனி, 1 பிப்ரவரி 2014 (14:23 IST)
ஜனநாயகம் தனது கடமைகளைச் செய்ய தவறும்போது அல்லது ஜனநாயகத்தின் காவலர்களாக தங்களை வரித்துக் கொள்ளும் அரசியல் தலைகள் அதிகாரத்தை வைத்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கி ஆட்டிப்படைக்கும்போது அவ்வப்போது சில சக்திகள் அதனை எதிர்க்க வெளிவரும் என்பதுதான் மனித நியதி, அரசியல் நியதி, அறத்தின் நியதி.
FILE

ஆம் ஆத்மி கட்சி நம்மை ஜனநாயகம் பற்றி சிந்திக்க அழைக்கிறது. இன்னும் ஜனநாயகம் வேண்டும் என்கிறது. ஜனநாயகத்தின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ள நம் ஆட்சியில் அது ஜனநாயகம் அல்ல என்று எதிர்ப்புக் குரல் எழுப்புவர்களை அராஜகவாதி என்று அழைப்பது ஜனநாயக மறுப்புவாதிகளின் வழக்கமான பாவனை.

நிற்க. கெஜ்ரிவாலை 'அனார்கிஸ்ட்' என்று அவரது நடு ரோடு தர்ணா போராட்டத்திற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் பத்திரிக்கை வட்டங்களில் சிலரும் வர்ணித்துள்ளனர்.

முதலில் அனார்கிஸம் என்றால் என்ன என்பதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்:

அதாவது ஆட்சியமைப்பு, ஆட்சியாளர், அரசு இவை தேவையில்லை. அரசு தேவையில்லை, அது கேடு விளைவிக்கக்கூடியது. வெறும் அரசு கூடாது என்பது மட்டுமல்ல சுரண்டல்வாத படிமுறை ஏற்றத்தாழ்வுகள் அமைப்புகளை தகர்ப்பது இதன் மற்றொரு நோக்கம். சுயாட்சித் தன்மை கொண்ட தன்னார்வ குழுக்களே ஆட்சிக்குப் போதுமானது என்பது இதன் நிலைப்பாடு. இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என்பது வேறு விவாதம். ஆனால் அனார்கிசம் என்பதில் நன்மைக்கான சிந்தனைகள் பொதிந்துள்ளன. ஆட்சியமைப்புக்கு எதிரான அதன் விமர்சனங்கள், சுரண்டல், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றிற்கு எதிரான விமர்சனங்கள் இன்றளவும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

இதன் தமிழாக்கமான அராஜகம் என்ற வார்த்தை நமக்குள் ஏற்படுத்தும் எண்ணப்போக்குகள், சிந்தனை, உணர்வு அது தீங்கானது என்பதையே விதைத்துள்ளது. அவன் அராஜகம் செய்கிறான். இது அராஜகம் என்று நாம் அந்த வார்த்தையை பல்வேறு அர்த்தச் சூழல்களுக்கு நகர்த்தியுள்ளொம், நாம் நகர்த்திய அந்தச் சூழல்களையெல்லாம் அனார்கிஸம் என்ற தத்துவத்தின் மீது நடைமுறையின் மீது ஏற்றி புரிந்து கொள்ளுதல் கூடாது. இது முதல்படி. இருந்தாலும் அராஜ்கம் என்பதை அ-ராஜ்ஜியம், அல் - அரசு என்பதாக புரிந்து கொண்டு அரசாங்கம் இல்லாத சமுதாய நிலையே மேம்பட்டது என்ற அனார்கிசத்தின் தத்துவ புரிதலுடன் இந்த வார்த்தையைப் புரிந்து கொள்வதுதான் முறை.

கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே சீனாவின் தாவோ தத்துவவாதியான லாவோ ஸீ என்பவரின் கொள்கைகள் அனார்கிஸம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

வில்லியம் காட்வின் என்ற 18ஆம் நூற்றாண்டு அரசியல் தத்துவவாதி, 'அரசியல் நீதி' என்ற தனது நூலில் சமூகத்தின் மீது அரசு என்பது தீயதான, கேடு விளைவிக்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் மக்களை அரசை நம்பியே இருக்கவேண்டிய கட்டாயத்தையும் அறிவின்மையையும் வளர்த்து விடுவது என்றும் கூறினார் இதைத்தான் தத்துவார்த்த அனார்கிசம் என்று அழைக்கலாயினர்.

தன்னைத்தானே அனார்கிஸ்ட் என்று அழைத்துக் கொண்ட பிரெஞ்ச் பொருளாதார தத்துவ நிபுணர் புரூதோன் தனது 1840ஆம் ஆண்டு புத்தகமான 'What is Property?' என்ற நூலில் சொத்து என்பது திருட்டு அதாவது Property is Theft என்றார். இவர் எழுதிய வறுமையின் தத்துவம் என்ற நூலை விமர்சித்துதான் காரல் மார்க்ஸ் 'தத்துவத்தின் வறுமை' என்று எள்ளினார். ஏனெனில் புரூதோன், தனிமனிதன் ஒருவரின் நோக்கம், ஆசை, கொள்கையை ஒரு ஒழுங்கின் மீது திணிக்கும் முறைக்கு எதிராக உடனடியாக தானாகவே எழும் சமூக ஒழுங்கு என்றார். உடனடியாக உருவாகும் திடீர் அமைப்புகளை மார்க்ஸ் கடுமையாக சந்தேகித்தார். புரட்சி விதைகள் விதைக்கப்பட்டுக்கொண்டே யிருக்கவேண்டும், அதற்கு உரமிட்டு பாதுகாத்து வளர்த்து வரவேண்டும், பிறகு அது விளைச்சலைக் கொடுக்கும் என்ற அணுகுமுறை காரல் மார்க்சுடையது. ஆனால் புருதோனோ 'சுதந்திரம் என்பது ஒழுங்கின் தாயே தவிர மகள் அல்ல' என்றார். சொத்துடையோர்கள் தங்கள் சொத்துக்களை தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்துவது அல்லது துஷ்பிரயோகம் செய்வது என்பதை புரூதோன் கடுமையாக எதிர்த்தார். இவையெல்லாம் கடுமையாக விமர்சனத்திற்குட்படுத்தப்பட்ட ரேடிகல் அனார்கிசம். எதற்கு இதையெல்லாம் கூறுகிறோம் என்றால் அனார்கிசம் என்பது ஒரு சமூகத் தத்துவம், வேறொரு மாற்று சமூக ஒழுங்கு. அனார்கிஸத்தை நாம் இன்றைய வாக்கு அரசியலின் நீதி நெறியற்ற, அதர்மத் துஷ்பிரயோகங்களுக்குக் குறுக்க முடியாது என்பதே நாம் கூறவருவது.

அனார்க்கிசத்தின் வகைகள் பலப்பல. இவை ஒவ்வொன்றும் தங்களிடையே வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் முரண்பாடுகள் இல்லாதது. இதன் தத்துவ-சமூக- அரசியல் வரலாறு மிக நீண்டது பல் படித்தனது. அதனை முழுதுமாக விவரிக்கதனி நூலே தேவைப்படும்.

சரி அனார்க்கிஸம் பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம், நாம் கெஜ்ரிவால் விவகாரத்திற்கு வருவோம்.

கெஜ்ரிவாலின் இயக்கத்திற்குப் பின்னால் மேற்சொன்ன அரசியல் தத்துவம் இருக்கிறதா என்பதையும் அவர் உண்மையான நோக்கத்திற்காக தர்ணா போன்ற போராட்டங்களில் ஈடுபடுகிறாரா அல்லது துக்ளக் சோ போன்ற பாஜக, அதிமுக கொள்கைப் பரப்பு செயாளர் கூறுவது போல் கேமரா ஸ்டண்டா என்பது பற்றியெல்லாம் இப்போதைக்கு எதையும் கூறிவிட முடியாது.

குடியரசு தின உரையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுவது அராஜகம் அல்லது அனார்கிசம் என்று கூறி ஆம் ஆத்மியை சூசகமாக இடித்துரைத்தார்.

ஒரு முதல்வராக ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு புகார் வருகிறது. அதனை தடுத்து நிறுத்த உத்தரவு பிறப்பிக்கிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம், சாட்சியம் இல்லாத நடவடிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம் என்று டெல்லி போலீஸ் கூறுகிறது. இவர் டெல்லி போலீஸ் யாருக்காக இருக்கிறது என்று கேட்டு தர்ணா போராட்டத்தில் குதிக்கிறார். இதுதான் விஷயம்.

போலீஸ் என்ற வார்த்தையின் வேர் 'அரசு' என்பதில் உள்ளது. போலீஸ் செயல்பட மறுக்கிறது என்றால் அதுதான் அனார்கிசம் அல்லது இவர்கள் பாஷையில் அராஜகம்! அதனை எதிர்த்துப் போராடுவது எப்படி அனார்கிசம் ஆகும். அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருந்தாலுமே கூட, நமது சீரழிந்துபோன கட்சி அரசியல் போலி ஜனநாயக நிறுவனக்களின் போலி மரபுக்கு எதிராக இருந்தாலும் கூட எப்படி அராஜகமாகும்?

முதல்வரே தெருவுக்கு வந்து போராடினால் அது அராஜகம் என்றால் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்சுவா மித்தரண்ட் 1980ஆம் ஆண்டு சோசலிச கட்சியின் தலைவராக யூத மக்களுக்கு எதிராக நடந்த வன்முறையைக் கண்டித்து தெருவில் இறங்கி போராடியதை அராஜகம் என்று கூறி ஊற்றி மூடி விட வேண்டியதுதானா?

பெர்ட்ரண்ட் ரசல் என்ற தத்துவ ஞானி அணுகுண்டுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டார் அவரை அரஜாகவாதி என்பதா, ஜனநாயகவாதி என்பதா?

காந்தியையும், நெல்சன் மன்டேலாவையும் அப்போதைய அராஜக ஆட்சி அனார்கிஸ்டுகள் என்றே பெர்யர் சூட்டியது. அப்போது வெள்ளையனின் காலனியாதிக்கம் என்றால் இப்போது ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளுடன் அயல்நாட்டு சக்திகள் புதிய வகையில் கைகோர்த்து புதிய காலனியாதிக்கம் செய்து வருகிறது. இதனை எதிர்ப்பது அரஜாகவாதமாகுமா?

ஓட்டுப்பொறுக்கி அரசியல் ஒழுங்காக நடந்தால் ஏன் முதல்வர்களே கூட சாலைக்கு வந்து போராடவேண்டும்? பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்து தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுப்பது அதனை எதிர்த்தால் சல்வா ஜுடூம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதை அந்த மக்களே ஏற்படுத்திக் கொண்டதாக புருடா விடுவதுதான் அனார்கிசம், அரசால் ஒன்றும் செய்ய முடியாத கையாலகத்தனம் மக்களையும் பொறுக்கி அரசியல் செய்ய தூண்டு கோலாக அமைந்துள்ளது.

பிடல் கேஸ்ட்ரோவின் ஆட்சியை ஒழிக்க கென்னடி போன்ற 'ஆகச்சிறந்த' அதிபர்களும் முழு மூச்சாக சதிகளில் ஈடுபட்டனர். காண்ட்ரா ரிபல்ஸ் என்பவர்களை உள்ளிருந்தே பொறுக்கி கேஸ்ட்ரோ ஆட்சியின் அதிருப்தியாளர்கள் இவர்கள் என்ற ஒரு போர்வை இவர்களுக்குப் போர்த்தப்பட்டது. இவர்களுக்கு ஆயுத உதவி வழங்கியது அமெரிக்கா, இதுதான் அனார்கிசம் அதாவது அனார்கிசம் என்பதன் தீய வடிவம்.

பாபர் மசூதியை இடித்தவர்கள் அனார்கிஸ்ட்கள் அல்லது அராஜகவாதிகள் இல்லையா? மத/இன தீவிரவாதங்களில் ஈடுபடும் அமைப்பு அராஜக அமைப்பு கிடையாதா? சோனியா மருமகன் ராபர்ட் வதேராவின் சொத்துக் குவிப்பு முறைகளுக்கு எதிராக செயல்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியை ஓட ஓட விரட்டியது, அவரை செயல்படவிடாமல் செய்வது அரசாங்கத்திற்கு எதிரான அராஜகம், அ-ராஜகம் இல்லையா?

கெஜ்ரிவால் என்ற நிகழ்வு ஏதோ தனி மனித ஸ்டண்டோ, அல்லது விளம்பர விருப்பமோ அல்ல. இந்த அமைப்பின் மீதான மக்களின் வெறுப்பே ஆம் ஆத்மிக்கு பெரும் வரவேற்பாக அமைந்துள்ளது.

ஆம் ஆத்மி ஒரு கட்சியாக தேறுமா, அல்லது அதுவும் இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் போல் சீரழியுமா என்பதையெல்லாம் இப்போது தீர்மானிக்கவியலாது.

இருப்பினும் மக்களின் கோபங்களுக்கும், அன்றாடம் ஊழலையும் சுரண்டலையும் எதிர்கொண்டு வரும் பொது மக்களுக்கும் ஒரு வடிகாலாக ஆம் ஆத்மி ஒரு பெயராக இருந்து வருகிறது.

இதில் அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனிமனிதர் முக்கியமல்ல அந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கும் இந்த மக்கள் திரள்தான் முக்கியம்.

இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி, போலிப் பொருளாதார கொள்கையான 'தாராளமயமாக்கல்' உலகமயமாதல் என்ற புதிய காலனியாதிக்கத்தின் அராஜக நிபந்தனைகள் என்ற நூலில் கட்டப்பட்டு ஆட்டம் காண்பிக்கப்படும் பொம்மலாட்ட அரசாக ஆன பின்பு, அரசு எந்த ஒரு தீவிர மக்கள் பிரச்சனையிலும் ஒன்றுமே செய்ய முடியாது அனைத்தையும் தனியார் மூலதனத்திற்கு கைகழுவும் முறையை ஆட்சியாக கொண்ட பிறகு இந்த அரசே அ-ராஜகமாகிவிட்டது. இந்த அ-ராஜகத்தில் சீர்திருத்தம் செய்து விடுவோம் என்று பாஜக 'மோடி' மஸ்தானாக கொக்கரிக்கிறது. இந்த அ-ராஜகத்தை எதிர்ப்பது ஒரு போதும் அராஜகமாகாது ஆனால் நல்ல பொருளில் அனார்கிசம் ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்