கெஜ்ரிவால் வீட்டில் அலைமோதும் கூட்டம்: வெற்று பந்தா அரசியல்வாதிகளின் காலம் முடிவுக்கு வருகிறதா?

திங்கள், 30 டிசம்பர் 2013 (15:09 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காசியாபாத் நகரில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகிறார். இன்னும் 2 நாட்களில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்கிறார்.
FILE

டெல்லியின் துணைக்கோள் நகரமாக திகழும் காசியாபாத் உத்தரபிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாகும். அங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிர்னர் குடியிருப்பை மத்திய வருவாய் துறை தன் அதிகாரிகளை குடியமர்த்த வாங்கியது.

அரவிந்த் கெஜ்ரிவால் ஐஆர்எஸ் அதிகாரி என்பதால் கவுசாம்பியில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க வீடு ஒதுக்கியது. அங்குள்ள 4-வது மாடியில் ஒரு வீட்டில் கெஜ்ரிவால் தன் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த குடியிருப்பில் வசித்து வரும் கெஜ்ரிவால், அந்த குடியிருப்பில் உள்ள அனைவருடனும் எளிமையாக பழகினார். இதனால்தான் ஆம் ஆத்மி கட்சி தொடங்கி பிரபலமான பிறகும் கூட அவர் தன் எளிய 4-வது மாடி வீட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் அந்த குடியிருப்பு முன்பு திரள்வது வழக்கம். கெஜ்ரிவால் முதலமைச்சராக மந்திரியாக பொறுப்பு ஏற்க போவதாக அறிவிக்கப்பட்ட நாள்முதல் அங்கு தினமும் மக்கள் வெள்ளம் போல திரண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே 15-க்கும் மேற்பட்ட தனியார் தொலைக்காட்சிகள் தங்களது நேரடி ஒளிபரப்பு வாகனங்களை அங்கு நிரந்தரமாக நிறுத்தியுள்ளன. இதனால் கெஜ்ரிவால் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
FILE

மூன்று மாதங்களுக்கு முன்பு வரை கெஜ்ரிவால் வசிக்கும் குடியிருப்புப் பகுதி அமைதிப்பூங்காவாக இருந்தது. தற்போது அதிகாரிகள் வருகை, போலீஸ் கெடுபிடி, தொண்டர்கள் படையெடுப்பு, போலீசார் குவிப்பு காரணமாக தினம், தினம் அந்த குடியிருப்பு சலசலப்பு கண்டு வருகிறது.

இதற்கிடையே நூற்றுக்கணக்கான மக்கள் கடந்த சில தினங்களாக கோரிக்கை மனுக்களுடன் திரண்டபடி உள்ளனர். மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் படை, கெஜ்ரிவால் பக்கத்தில் நின்று ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுக்கலாம் என்று ஆசையுடன் வருகிறார்கள். அவர் பயணம் செய்யும் சில ஆண்டு பழைய மாடல் காரான 'வேகன்-ஆர்' காரை படம் எடுத்துச் செல்கிறார்கள்.

இப்படி பல வகைகளில் குவியும் மக்களால் கவுசாம்பி குடியிருப்பு மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மக்கள் படையெடுப்பை தடுக்க அவர்கள் அந்த குடியிருப்பின் மெயின் கேட்-டை பூட்டி வைத்திருக்கிறார்கள். அந்த குடியிருப்பின் மற்ற சிறு நுழைவாயில்களை பயன்படுத்துகிறார்கள்.

வருவாய் துறை அலுவலகங்களில் பணியாற்றி வரும் அவர்கள் அனைவரும் கெஜ்ரிவாலின் பிரபலத்தால் அவதியை சந்தித்தாலும், அதை பொருட்படுத்தவில்லை. மாறாக கெஜ்ரிவால் தங்களுடன் இருப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறார்கள்.

இதுபற்றி ஐஆர்எஸ் அதிகாரி சலீல் மிஸ்ரா என்பவர் கூறியதாவது:

இந்த குடியிருப்பில் வசிக்கும் நாங்கள் எல்லாருமே அரசு ஊழியர்கள்தான். எங்களோடு இருக்கும் கெஜ்ரிவால் இந்த நாட்டுக்காக பொதுச் சேவையில் ஈடுபட்டு இருப்பதை நாங்கள் அறிவோம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கெஜ்ரிவால் எங்களோடு இருக்கிறார். ஒவ்வொருவருடனும் அவர் நல்லெண்ணத்துடன் பழகுவார். இப்போது அவர் முதல்-மந்திரி ஆகிவிட்டதால், அவரைப் பார்க்க நிறைய பேர் வருகிறார்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வருவதும், போவதுமாக உள்ளன. ஒருவகையில் இது எங்களுக்கு மிகவும் அசவுகரியமாகத்தான் உள்ளது. என்றாலும் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவர் எங்களோடு ஒருவராக இருக்கிறார். எங்களை போல சாமானிய கனாக இருந்து அவர் முதல் வராகி இருப்பது எங்களுக்கு பெருமை தருகிறது. அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.

இவ்வாறு சலீல் மிஸ்ரா கூறினார்.

கெஜ்ரிவாலின் குடியிருப்புக்கு பாதுகாப்பு கொடுக்க டெல்லி போலீசாரும், காசியாபாத் நகர போலீசாரும் முன் வந்தனர். இரண்டு வேன்கள் நிறைய போலீசாரை கொண்டு இறக்கினார்கள். அவர்கள் நேற்றும், இன்றும் கெஜ்ரிவால் வீடு அருகே திரண்டவர்களை சமாளிக்க திணறினார்கள்.

இந்த நிலையில் டெல்லி மற்றும் காசியாபாத் நகர போலீசாரின் பாதுகாப்பை ஏற்க கெஜ்ரிவால் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். எந்த வகையிலும் தனக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று அவர் கூறி விட்டார். தன்னிடம் மனு கொடுப்பவர்களை ஒழுங்குபடுத்த மட்டும் போலீசார் உதவி செய்தால் போதும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்- மந்திரியாக பதவி ஏற்க சம்மதம் தெரிவித்த உடனே கெஜ்ரிவால் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ‘‘டெல்லியில் உள்ள விஐபி கலாச்சாரத்தை நாம் ஒழித்துக் காட்ட வேண்டும். எனவே எனக்கு அரசு பங்களா, அரசு கார் உள்ளிட்ட எந்த சிறப்பு சலுகைகளும் வேண்டாம் என்று அறிவித்தார்.

2006-ம் ஆண்டு ஐஆர்எஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் தொடர்ந்து கவுசாம்பியில் உள்ள குடியிருப்பிலேயே தங்கி இருக்க அவர் திட்டமிட்டார். அவரது மனைவி சுனிதா இப்போதும் ஐஆர்எஸ் அதிகாரியாக வருவாய் துறையில் பணியாற்றி வருவதால், அரசு கொடுத்துள்ள அந்த வீட்டிலேயே இருந்து கொண்டு முதல்வர் பணியை தொடரலாம் என்று நினைத்தார்.

ஆனால் பெரும் எதிர்பார்ப்புகளுடன், கோரிக்கை மனுக்களை எழுதி எடுத்துக் கொண்டு, கெஜ்ரிவால் வீட்டை நோக்கி வரும் சாதாரண மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நம்பிக்கையோடு வரும் அவர்களில் பெரும்பாலனவர்கள் கவுசாம்பியில் கடும் அவதிக்குள்ளாகிறார்கள்.

தன் ஒரு நபரால் குடியிருப்பு வாசிகளும், தன்னைப்பார்க்க வருபவர்களும் தினம், தினம் கடும் அவதிக்குள்ளாவதை கெஜ்ரிவால் விரும்பவில்லை. எனவே அவர் வீடு மாற முடிவு செய்துள்ளார்.

4 அறை, காரை நிறுத்த ஒரு இடம், பொது மக்களை சந்தித்து பேச வீட்டின் முன்பு விஸ்தாரமான இட வசதி ஆகியவற்றை கொண்ட வீட்டை வாடகைக்கு பெற கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகம் உள்ள இடத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் வாடகைக்கு வீடு கிடைத்தால் வசதியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அப்படி ஒரு வீடு கிடைக்குமா என்று ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி செகரட்டரியேட் பகுதியில் 5 அறைகள் கொண்ட வீடு, தற்போது ஒரு லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு விடப்படுகிறது.

ஆனால் கொஞ்சம் குறைவான வாடகையில் வீடு பார்க்கும்படி கெஜ்ரிவால் கூறியுள்ளார். அவர் விருப்பத்துக்கு ஏற்ப வீட்டை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தற்போது டெல்லி மாநில அரசு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

வாடகைக்கு வீடு கிடைக்க சிறிது நாள் ஆகும் என்று தெரியவந்துள்ளது. எனவே கெஜ்ரிவால் முதலில் சில நாட்கள் விருந்தினர் மாளிகையில் தங்கி விட்டு பிறகு வாடகை வீட்டுக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

டெல்லியில் இந்திர பிரஸ்தா பகுதியில் மாநில அரசுக்கு சொந்தமான, அனைத்து வசதிகளுடன் கூடிய விருந்தினர் மாளிகை உள்ளது. இன்னும் இரு நாட்களில் கவுசாம்பி அடுக்குமாடி குடியிருப்பை காலி செய்துவிட்டு, கெஜ்ரிவால், இந்த விருந்தினர் மாளிகைக்கு வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகம் அனுமன் சாலையில் உள்ள 41-ம் எண் கொண்ட பங்களாவில் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான அந்த பங்களாவை அவர் மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வாடகைப் பெற்றுக் கொண்டு கட்சிக்காகக் கொடுத்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி அந்த பங்களாவை 6 மாத லீசுக்கு எடுத்துள்ளது. மத்திய டெல்லியில் அமைந்துள்ள அந்த பங்களாவில் கெஜ்ரிவால் குடியேறக் கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் கட்சி அலுவலகத்தில் தங்கமாட்டேன் என்று கெஜ்ரிவால் மறுத்துவிட்டார்.

இதற்கிடையே ஷீலா திட்சித்தும் அவரது மந்திரி சபையில் இருந்த அமைச்சர்களும் தங்களது பங்களாக்களை காலி செய்து விட்டனர். அவற்றில் ஷீலாதிட்சித் வசித்து வந்த மோதிலால் சாலையில் உள்ள பங்களாவை அரசுத்துறை செயலாளர்களுக்கு கொடுக்க கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதுபோல இதுவரை மந்திரிகள் வசித்து வந்த பங்களாக்களை உயர் அரசு அதிகாரிகளுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் கொடுக்கும்படி கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார். பெரிய பங்களாக்களை அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் சிறிய வாடகை வீட்டை கெஜ்ரி வாலுக்காக கண்டுபிடிப்பது அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. வாடகை வீட்டை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

கெஜ்ரிவால் பாணியில் அவரது 6 அமைச்சர்களும் வாடகை வீடுகளில் குடியேற விருப்பம் தெரிவித்தனர். ஆனால் 6 மந்திரிகளுக்கும் வாடகைக்கு வீடு தேடுவது கடினம் என்று கூறப்பட்டது.

இதையடுத்து 6 மந்திரிகளுக்கும் அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் சிறு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்