டிக்கெட் எடுக்க ஆள் போயிருக்கும் நிலையிலும் அவர்களை நம்பாமல் எப்படி டிக்கெட் எடுக்காமல் இங்கு வரலாம் என்று சென்னை எழும்பூர் ரெயில் நிலைய ரெயில்வே போலிஸ் மற்றும் டிக்கெட் பரிசோதக கும்பல் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் 5 பேரை நிற்க வைத்து மிரட்டி, அழ வைத்து அபராதத் தொகையைப்பறித்துள்ளனர்.
FILE
பிடிபட்ட 5 பேரும் வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 5 பேரும் சென்னையை அடுத்த திரிசூலத்தில் தங்கி கட்டிட வேலை பார்ப்பவர்கள்.
நேற்று வேலை இல்லாததால் ஜாலியாக மெரீனா கடற்கரைக்கு வந்துள்ளனர்.இந்த 5 பேரில் இருவர் கணவன் மனைவியாக வந்துள்ளனர். இவர்கள் நால்வரைத் தவிர ஒரு பெண் இவர்களுடன் வந்தவர்தான்.
மெரீனா கடற்கரையில் ஜாலியாக பொழுதைக் கழித்து விட்டு எழும்பூர் வந்துள்ளனர். நேராக 10வது பிளாட்பாரத்திற்கு இவர்கள் வந்துள்ளனர். ஆண்கள் இருவரும் டிக்கெட் கவுண்டருக்குச் டிக்கெட் எடுக்கச் சென்றனர். அப்போதுதான் பறக்கும்படையிடம் இவர்கள் பரிதாபமாக சிக்கினார்கள்.
பறக்கும்படை அதிகாரிகள் அனைவரும் பெண்கள். பிளாட்பாரம் டிக்கெட் எடுக்காமல் எப்படி இங்கு வரலாம் உடனே 1250 ரூபாய் அபராதம் கட்டவும் என்று மிரட்டினர்.
அந்தப் பெண்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கெஞ்சிக் கூத்தாடினார்கள், ஆனால் அதிகாரிகள் மனம் இரங்கவில்லை. 2 பேருக்காவது அபராதம் கட்டு இல்லையேல் இரவு முழுதும் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்து நாளை காலை கோர்ட்டுக்கு கூட்டிச் செல்வோம் என்று இன்னொரு மிரட்டல்! மேலும் ஸ்டேஷனில் கொசுக்கடியில் இருந்தால்தான் புத்தி வரும் என்று ஒரு அட்வைஸையும் உதிர்த்துள்ளனர் பெண் அதிகாரிகள்.
கடைசியாக கெஞ்சிக் கூத்தாடி 250 ரூபாய் அபராதம் செலுத்தி கையில் காசு இல்லாமல் திரிசூலம் திரும்பியுள்ளனர். அந்தக் கூலித்தொழிலாளிகள்.
இருக்கிற 250 ரூபாயையும் பிடுங்கிக் கொண்டதால் சாப்பாட்டுக்கே வேலை செய்து கூலியை பெற வேண்டிய பரிதாபமான நிலையில் அவர்கள் புலம்பியபடியே சென்றது பார்த்தவர்களின் மனதை என்னவோ செய்தது. பார்வையாளர்களும் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால் அதிகாரிகளுக்கு கோபம் அதிகரிக்கத்தான் செய்ததே தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை.
ஒழுங்கைக் கடைபிடிக்கவே சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அதனை திறம்பட செயல்படுத்துவதே போலீஸின் வேலை, ஆனால் நம் அமைப்பில் போலீஸ் துறைக்கே டார்கெட் உண்டு மாதம் இவ்வளவு அபாரத் தொகை வசூலித்தாக வேண்டும் என்ற இலக்கு உள்ளது.
இந்த டார்கெட் அநீதியால்தான் அப்பாவிகள் பலரை ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் பதம் பார்த்து வருகின்றனர்.
சட்டம் ஒழுங்குத் துறைக்கு டார்கெட் நிர்ணயிக்கும் அபத்தம் என்றுதான் ஒழியுமோ?