காங்கிரஸ் பக்கம் சாய்கிறார் விஜயகாந்த்?

திங்கள், 26 ஆகஸ்ட் 2013 (12:03 IST)
FILE
நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள்! காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியுள்ளமை இப்போது லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்த திருப்பத்தை எதிர்பார்க்கத் தூண்டியுள்ளது.

2011ஆம் ஆண்டு அதிமுக-வுடன் விஜயகாந்த் கூட்டணி மேற்கொண்டார். ஆனால் அது சடுதியில் முறிந்தது. தற்போது ஆளும் ஜெயலலிதா அரசு மீது கடும் விமர்சனங்களைச் செய்து, அதற்காக அவதூறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார் விஜயகாந்த்.

மேலும் தேமுதிக.வும் பலவீனமடைந்து வருவதாக தெரிகிறது. 7 எம்.எல்.ஏ.க்கள் தேமுதிகவிலிருந்து அதிமுகவிற்கு மாறினர்.

ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் ஆதரவைப்பெற தேமுதிக முயற்சி செய்ததும் பலனளிக்கவில்லை. காங்கிரஸ், திமுகவையே ஆதரித்தது.

இந்த நிலையில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து உத்ராகண்ட் வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

இந்த நிலையிலேயே ராகுல் காந்தி விஜயகாந்திற்கு வாழ்த்து அனுப்பியுள்ளார். மேலும் பல காங்கிரஸாரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனால் தேமுதிக, காங்கிரஸ் கூட்டணி ஏற்படலாம் என்று அரசியல் தரப்பு வட்டாரங்கள் ஊகங்களை வெளியிட்டு வருகின்றன.

விஜயகாந்த் பிறந்த நாளுக்கு திமுக தரப்பில் சிவா மட்டுமே வாழ்த்து தெரிவித்தார். பாஜக தரப்பில் வாழ்த்துக்களை யாரும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்