டெல்லி கற்பழிப்பு போலவே... ராஜஸ்தானிலும்... உயிருக்கு போராடும் 11 வயது சிறுமி

வியாழன், 17 ஜனவரி 2013 (13:17 IST)
FILE
டெல்லி மருத்துவ மாணவி பேருந்தில் மிக கொடூரமான முறையில் சித்தரவை செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டு பின்பு அந்த பெண் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிர்விட்டதை அடுத்து நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் கொந்தளித்துக் கொண்டுதானிருக்கிறது.

இந்த வேளையில் ராஜஸ்தானில் ஜெய்பூர் மருத்துவமனையில் இதுவரை வெளியே வராத கற்பழிப்பு சம்பவம் ஒன்றில் சிக்கி சின்னாபின்னமாகிய மற்றொரு 11 வயது சிறுமி உயிருக்குப் போராடி வருவதாக செய்தி இணையதளம் ஒன்று கூறியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சிகார் என்ற ஊரில் இதேபோல் பேருந்தில் நடந்த கொடூர கற்பழிப்பு சம்பவமே. டெல்லி சம்பவத்திற்கு முன்பே இது நடந்துள்ளது ஆனால் இது வரை வெளியே வரவில்லை.

இந்த கற்பழிப்பிலும் 6 பேர் ஈடுபட்டுள்ளனர். 11 வயது சிறுமியைக் பேருந்து நிலையத்திலிருந்து கடத்திச் சென்றதாக தெரிகிறது.

மிகவும் கொடூரமான முறையில் இந்த சிறுமி கற்பழிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுமியின் அந்தரங்க உறுப்புகள் கடும் சேதமடைந்துள்ளதால் 6 பெரிய அறுவை சிகிச்சையும், 8 சிறு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 22ஆம் தேதி ஜெய்பூரில் உள்ள ஜேகே லோன் ஆஸ்பத்திரிக்கு அந்தப் பெண்ணை சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட நிலையை மருத்துவர்கள் விளக்கினர். இந்தச்சிறுமிக்கு பல பெரிய ஆபரேஷன்களைச் செய்து கடந்த நான்கரை மாதங்களாக போராடி வருகிறோம், இந்தப் பெண் கற்பழிக்கப்பட்ட விதம் எங்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்று தலைமை மருத்துவர் டாக்டர் எல்.டி. அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்த சிறுமி பீகாரைச் சேர்ந்தவர், தார்பங்காவில் வசிக்கும் பெரிய குடும்பத்தில் 7வது குழந்தை இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிகாருக்கு இந்தக் குடும்பம் குடியேறியது. ஏனெனில் தந்தை மரணமடைந்து விட்டார்.

தற்போது இந்தச் சிறுமியின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இவ்வளவு கொடூரம் நடந்தும் போலீஸ் ஒரு வழக்கைக் கூட பதிவு செய்யவில்லை. பிறகு போராட்டத்திற்குப் பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிதிஷ் குமார் இது குறித்து ராஜஸ்தான் பிரதமர் அசோக் கெலாட்டிடம் பேசிய பிறகே நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கற்பழிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதில் 2 பேர் ஏற்கனவே ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இவர்கள் ஜாமீனில் வெளிவருவதற்கு காரணம் போலீஸ் இவர்கள் மீது கறாரான வழக்கைப் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

கற்பழிப்புக் கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு அரசியல் தொடர்பு இருக்கலாம் என்றும் இதனால் போலீஸ் இதில் அசிரத்தை காட்டுகின்றனர் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்