''திருமண உதவி கேட்கும் ஏழைப் பெண்களும், இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்'' என்று தமிழக அரசு புதிய நிபந்தனையை விதித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிபடி படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
மேலும் ஒரு இடியை ஏழை மக்களுக்கு தூக்கிப் போட்டுள்ளார் ஜெயலலிதா. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமே திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது தமிழக அரசு! கடந்த தி.மு.க. ஆட்சியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு அரசின் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது அதற்கும் வேட்டு வைக்கப்பட்டுள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவித்திட்டம், அனாதை பெண்கள் திருமண உதவித் திட்டம், தமிழ்நாடு அரசு கலப்பு திருமண உதவித்திட்டம், விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம் உள்ளிட்ட 10 வகையான திருமண உதவித்திட்டங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.
FILE
இந்தத் திட்டங்களையெல்லாம் தி.மு.க. அரசு நிறைவேற்றி வந்தது. ஏழைப் பெண்களின் திருமண உதவித்தொகையாக 20 ரூபாய் வழங்கியது. அதுமட்டுமின்றி திருமண உதவித்தொகை பெற்ற அதே பெண்மணியின் கர்ப்பகாலங்களில் மாதாமாதம் 700 ரூபாய் வழங்கியது. குழந்தை பிறந்த உடன் 6 ஆயிரம் ரூபாய் வழங்கியது. ஏழைப் பெண்களுக்கு இப்படி என்னற்ற சலுகைகளை வழங்கியது கடந்த ஆட்சி. இந்த ஆட்சி ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நேரடியாக பறிக்காமல் நிபந்தனை விதித்து தடுக்கிறது. இலவசம் கொடுப்பதும், கொடுக்காததும் ஆளும் அரசின் வசதி. ஆனால், கொடுக்கிறேன் என்று கூறி அதற்கு நிபந்தனை விதிப்பது ஏழைகள் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும்.
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த நிபந்தனைகள் மூலம் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. மொத்தத்தில் திருமண உதவித்திட்டத்துக்கு ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மூடுவிழா நடத்தப்போகிறது.
தனது பெண் பிள்ளையின் திருமணத்திற்கு 25 ஆயிரம் ரூபாயும், 4 கிராமம் தங்கமும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த ஏழை வாக்காளர்களுக்கு ஆட்சி அமைத்த ஐந்தே நாளில் முதல் அல்வாவை கொடுத்துள்ளார் ஜெயலலிதா. இது தவிர இன்னும் என்னென்ன திட்டங்களை கைவசம் வைத்துள்ளாரோ!
போகப் போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்.