காஷ்மீரில் பரவுகிறதா எகிப்து தீப்பொறி?

திங்கள், 28 பிப்ரவரி 2011 (18:58 IST)
எகிப்து, லிபியா என்று உலகின் பல நாடுகளில் உள்ள சர்வாதிகார தலைவர்களுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் ஆட்சி தலைமையையே ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கும் நிலையில்," தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் ..."என்ற கதையாக எகிப்தில் வெடித்த புரட்சி, காஷ்மீரிலும் கலகத்தை கிளப்பி விடுமோ என்று மத்திய அரசு கிலி பிடித்துபோயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது உண்மைதான் என்பதை காஷ்மீர் தெருக்களில் சரமாரியான எண்ணிக்கையில் களமிறக்கிவிடப்பட்டுள்ள மத்திய, மாநில உளவு பிரிவினரின் எண்ணிக்கை பறைசாற்றுகிறது.

வியாபாரிகளாகவும், கூலித்தொழிலாளர்களாகவும், ஏஜென்சி முகவர்களாகவும் பல்வேறு அவதாரங்களில் களமிறங்கி உள்ள இந்த உளவாளிகள், காஷ்மீர் மக்களின் மனவோட்டத்தை அறிய அங்குள்ள வீதிகளில் படு தீவிரமாக வலம் வந்துகொண்டிருப்பதை அறிய முடிகிறது என்கிறார்கள் பிரிவினைவாத குழுக்களை சேர்ந்தவர்கள்.

ஏதோ ஒரு அசம்பாவிதம் நடப்பதற்கான ஆயத்தம் மேற்கொள்ளப்படுவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்ததால்தான், மத்திய அரசு இந்த அளவுக்கு பதற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு மத்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராக நடந்த நீண்ட நாள் கல்வீச்சு கலவரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குள் காஷ்மீரின் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா அரசுக்கும், மத்திய அரசுக்கும் போதும் போதுமென்றாகிவிட்டது.

அதிலும் இந்த போராட்டத்தில் முன்னர் எப்பொழுதும் இல்லாத வகையில் 15 வயதுக்கும் குறைவான மாணவர்களும், பெண்களும் களமிறங்கியது மத்திய அரசை ஏகமாகவே மிரள வைத்திருந்தது.

பின்னர் எப்படியோ "பேச்சுவார்த்தைக் குழு, கருத்து கேட்பு...!" என காஷ்மீர் மக்களை ஏகமாக தாஜா செய்து ஒருவழியாக அமைதியை ஏற்படுத்தியது.

அப்படி அரும்பாடுபட்டு ஏற்படுத்திய அமைதியை சீர்குலைக்க, சமீப நாட்களாக உலகின் பல நாடுகளில் நடந்துவரும் மக்கள் போராட்டங்கள் குறித்த செய்தியை காஷ்மீர் மக்களிடையே பரபபி, அவர்களையும் போராட்டத்திற்கு தூண்டிவிட சதி நடப்பதை உளவுத் துறை சாமர்த்தியமாக மோப்பம் பிடித்துவிட்டது.

இதிலும் வழக்கம்போல் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடர்பு இருப்பதை உறுதிபடுத்தியுள்ள நமது உளவுத் துறையினர், கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே, அதாவது எகிப்து கிளர்ச்சியெல்லாம் வெடிப்பதற்கு முன்னரே, மீண்டும் கலவரத்தை தூண்டிவிட ஐஎஸ்ஐ களம் இறங்கியிருந்ததாக கூறுகின்றனர்.

குறிப்பாக கடந்த ஆண்டு கோடை காலத்தில் நடந்த கல்வீச்சு கலவரத்தில் பங்கேற்ற இளவயதினரின் பட்டியலை, ஐஎஸ்ஐ-க்காக பிரிவினைவாத தலைவர்கள் களம் இறங்கி தயாரித்தனராம்.

அந்த பட்டியல் தற்போது ஐஎஸ்ஐ வசம் இருப்பதாக நம்பும் நமது உளவுத் துறை, இந்த பட்டியலில் உள்ள காஷ்மீர் இளைஞர்களை, ஐஎஸ்ஐ மூளைச்சலவை செய்து, அவர்களிடம் ஆயுதங்களையும் கொடுத்து களமிறக்கி விடலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் இவ்வளவும் தெரிந்த பின்னரும் நமது மத்திய, மாநில அரசுகள் கையைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமா என்ன?

மாநில காவல்துறையினரும், உளவு பிரிவினரும் சத்தமில்லாமல் கடந்த ஆண்டு நடந்த கலவரத்தில் பங்கேற்ற கல்வீச்சாளர்களின் பெயர், விவரங்களை திரட்டிக்கொண்டுள்ளனர்.கூடவே பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை நேரில் வந்து செல்லவேண்டும் என்பது உள்ளூர் காவல் நிலையத்தின் உத்தரவு.

"அவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.எங்களுக்கு மேலிடத்திலிருந்து வந்துள்ள உத்தரவு தெளிவாக உள்ளது. அதாவது கடந்த கோடை காலத்தில் நடந்து மீண்டும் அரங்கேறிவிடக் கூடாது" என்பதுதான் என்று கூறுகிறார் காவல்துறை உயரதிகாரி ஒருவர்.

கடந்த ஆண்டு கோடை கலவரத்தின்போது, பிரிவினைவாத் குழுக்களை சேர்ந்தவர்கள் கடைக்காரர்களை மிரட்டி கடைகளை அடைக்க சொன்னார்கள் என்பதால் இந்த முறை அதுபோன்று எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று போலீஸ் ரொம்பவே உஷாராக உள்ளது.அவ்வப்போது வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களை போனில் அழைக்கும் உள்ளூர் போலீசார், ஏதேனும் மிரட்டல் வந்ததா? என்று விசாரித்துக் கொள்கிறார்கள்.

இப்படி அரசு தரப்பில் பல உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றையெல்லாம் மீறி இந்த கோடையிலும், பிரிவினைவாத குழுக்களின் உதவியுடன் மக்களை தூண்டிவிட்டு கலவரத்தை நடத்தி பார்த்துவிட வேண்டும் என ஐஎஸ்ஐ துடி துடியாய் துடிக்கிறது.

அதிலும் எகிப்து, லிபியா என ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் புரட்சி போராட்டங்களை உலக ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதால், இந்த மாதிரியான ஒரு தருணத்தில் காஷ்மீரிலும் இந்திய அரசுக்கு எதிராக அத்தகையதொரு போராட்டத்தை நடத்தினால்,அது ஒட்டுமொத்த உலக ஊடகங்களின் பார்வையையும் காஷ்மீரை நோக்கி திருப்பும் என்று ஐஎஸ்ஐ-யும், பிரிவினைவாத குழுக்களும் கணக்குப்போடுவதாக தெரிகிறது.

இந்நிலையில் பிரிவினைவாத குழுக்களுக்கு தற்போது மக்களை தூண்டிவிட தேவை ஒரே ஒரு சின்ன தீப்பொறிதான்.இலேசாக ஊதிவிட்டாலே அது பற்றிக்கொள்ளும் என்ற நினைப்பில்தான் அத்தகையதொரு பொறி கிளப்பிவிடும் தருணத்திற்காகத்தான் காத்திருக்கின்றனர்.

ஆனாலும் அதற்கு இடம்கொடுத்துவிடக்கூடாது என்பதில் மத்திய அரசு படு கவனமாக உள்ளது.

மத்திய அரசு இவ்வாறு உஷார் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டாலும், காஷ்மீர் மாநில் அரசு என்னவோ சற்று மிரட்சியுடன்தான் உள்ளது.

"தீவிரவாதத்தை நம்மால் கையாள முடியும்.நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பின்னர், தீவிரவாதத்தை தூண்டிவிட்டவர்களின் முதுகிலேயே தீப்பற்றத் தொடங்கிவிட்டது.தொடர்ந்து நடந்தேறி வரும் வன்முறையால் இங்குள்ள (காஷ்மீர்) மக்கள் மிகவும் சோர்வடைந்துவிட்டனர்.

ஆனால் எங்கள் பயமெல்லாம் ஒரு போராட்டத்திற்காக லால் சவுக்கில் சுமார் 50,000 மக்கள் -எகிப்து தாஹீர் சதுக்கத்தில் மக்கள் திரண்டது மாதிரி- ஒரே நேரத்தில் திரண்டால் என்ன செய்வது? அதை எப்படி கையாள்வது? "என்று கவலையுடன் கேட்கிறார் காஷ்மீர் மாநில அரசு அதிகாரி ஒருவர்.

ஆக மொத்தத்தில் இந்த கோடை காலம் முடியும் வரை காஷ்மீர் அரசுக்கும், மத்திய அரசுக்கும் திக்.. திக்... தான்!

வெப்துனியாவைப் படிக்கவும்