ஐரோப்பா கடன் நெருக்கடி: தவிக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள்

சனி, 29 ஜனவரி 2011 (17:59 IST)
தென்னை மரத்தில் தேள் கொட்டினால்,பனை மரத்தில் நெறிகட்டுவதாக கூறுவது வேறு எதற்கும் பொருந்துகிறதோ இல்லையோ இந்திய தகவல் தொழில் நுட்ப (ஐடி) நிறுவனங்களுக்கு நன்றாகவே பொருந்தும் போல!

ஐரோப்பா கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில், டாடா கன்சல்டன்சி(டிசிஎஸ்), இன்ஃபோசிஸ்,விப்ரோ போன்ற இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அதுகுறித்து மிகவும் கவலையடைந்துள்ளன.

ஐரோப்பாவில் தடம் பதித்து சமீப ஆண்டுகளாக வெகுவாக வருவாயை ஈட்டி வந்த இந்த நிறுவனங்களுக்கு,அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால்,அவர்களுக்கு கிடைத்துவந்த வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலைகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தின் தேவாஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய ஐடி நிறுவனங்கள் உள்பட உலகம் முழுவதுமிருந்து முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் கலந்துகொள்ள வந்த, இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிருஷ் கோபால கிருஷ்ணன், ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடிதான் தங்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நெருக்கடி காரணமாக ஐரோப்பாவில் உள்ள தங்களது வாடிக்கையாளர்களாக உள்ள நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்பதால்,அவர்களுக்கான வேலை திட்டங்களை செய்து கொடுக்கும் தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு,'புராஜக்ட்'கள் கிடைப்பது குறைந்து, அதனால் தங்களது நிறுவனத்தின் இந்த ஆண்டு வருவாயும் குறையும் என்று கவலை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடிக்கு தங்களால் எதுவும் செய்யமுடியவில்லை என்றாலும் ,தங்களது நிறுவன கிளைகளை மேலும் அதிகரித்து,அதிக வாடிக்கையாளர்களை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒருபுறம் கவலையை ஏற்படுத்தியுள்ள போதிலும்,நடப்பு 2011 ஆம் ஆண்டில் கணினி தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறையலாம் என்ற நிபுணர்களின் ஆருடம் மேலும் அச்சமூட்டுவதாக உள்ளது.

அதாவது இணையத்தள தொழில்நுட்பம்,கணினிகள் மற்றும் தகவல்களை 'டெஸ்க்டாப்' கம்ப்யூட்டர்களிலிருந்து மொபைல் கம்ப்யூட்டர் மற்றும் ரிமோட் டேட்டா சென்டர்களுக்கு தூக்கிக் கொண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுதான் ஐடி நிறுவனங்களை கவலைக் கொள்ளச் செய்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க,இந்தியாவில் அதிகரித்து வரும் உணவு பொருட்கள் போன்ற பண்டகங்களின் விலை உயர்வால், பணவீக்கம் அதிகரிப்பு போன்றவற்றால் தங்களது ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கவேண்டிய நிலை இந்நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதே சமயம் 'புராஜகட்'டுகள் கொடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்,உற்பத்தி செலவு அதிகரிப்பை நீங்களே சமாளித்துக் கொள்ளுங்கள் என்று அவர்களது தலையிலேயே கட்டி, சேவைக் கட்டணத்தை அதிகரித்து கொடுக்க மறுத்துவிட்டனர்.இதனால் தங்களது உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகவும், இதுவும் தங்களை கவலைக்குள்ளாக்கி இருப்பதாகவும் இந்திய ஐடி நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.

"இந்திய ரிசர்வ் வங்கி,இந்த வாரம் வட்டி விகிதத்தை 0.25 விழுக்காடு அதிகரித்துள்ளது.கடந்த மார்ச் மாதத்திலிருந்து எடுத்துக்கொண்டால் இது ஏழாவது முறையாகும்.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால்,எங்களைப் போன்ற ஐடி நிறுவனங்களின் உள்ளூர் சந்தை வளர்ச்சி பாதிக்கும்.ஏனெனில் உள்ளூர் சந்தையில்தான் எங்களுக்கு குறைந்த உற்பத்தி செலவுடன் கணிசமான இலாபம் கிடைக்கிறது.அப்படி இருக்கையில் அந்த சந்தையில் பாதிப்பு ஏற்பட்டால்,அது எங்களது ஒட்டுமொத்த வருவாய் வளர்ச்சியை பாதிக்கும்" என்கிறார் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்திரசேகரன்.

கடந்த டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டு வருவாய் தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று விப்ரோ உள்ளிட்ட பல்வேறு இந்திய தொழில்நுட்ப ஏற்றுமதியாளர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

ஆக மொத்ததில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்றவற்றை கட்டுப்படுத்திட,அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே அவற்றின் பாதிப்பிலிருந்து விப்ரோ முதல் விவசாயி வரை தப்ப முடியும்!

வெப்துனியாவைப் படிக்கவும்