சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்று, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மட்டுமின்றி, குடும்ப அட்டை, இலவச வண்ணத் தொலைக்காட்சி, 2 ஏக்கர் இலவச நிலம் என அரசு நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் கிராம நிர்வாக (வி.ஏ.ஓ.) அலுவலர்கள்தான்.
தமிழக அரசின் வருவாய் துறையில் 2,653 கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. மொத்த காலி இடங்களில் 1,576 பொது போட்டிக்கு உரியவை. எஞ்சிய 1,077 காலி இடங்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கான இடங்கள் ஆகும்.
கி.நி.அ. தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து 10.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என பலரும் விண்ணப்பித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களில் 70 சதவீதம்பேர் கி.நி.அ. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களது விண்ணப்பங்களைப் பரிசீலிக்க பிரிவு அலுவலர்கள், உதவிப் பிரிவு அலுவலர்களைக் கொண்டு 60 பிரிவுகளை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த ஒரு பிரிவையும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தவில்லை. பிரிவுகளை ஏற்படுத்த, தேர்வாணைய அலுவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். திறந்த நிலை பல்கலைக்கழகப் பிரச்சனை தீர்க்கப்படாத காரணத்தால், தேர்வாணையத்தில் இதுவரை யாருக்கும் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. இதனால், பிரிவுகள் உருவாக்கப்படவில்லை.
கடந்த முறை கி.நி.அ. தேர்வு அறிவிக்கப்பட்ட போது, 6.9 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அப்போது, விண்ணப்பங்களைப் பரிசீலிக்க 75 பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இப்போது 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள சூழலில் 60 பிரிவுகளை மட்டுமே ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவிட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் குறைந்த அளவிலான இந்தப் பிரிவுகளைக் கூட உருவாக்க தேர்வாணையம் முன்வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதனிடையே, பிரிவுகளை உருவாக்காமல் உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர்களைக் கொண்டு கி.நி.அ. தேர்வு விண்ணப்பங்களைப் பரிசீலிக்க தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத உள்ள தேர்வின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிக்கு சார்புச் செயலர் நிலையில் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால், நாளொன்றுக்கு ரூ.24 கூலியாகப் பெறும் உதவியாளர்களைக் கொண்டு விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணி நடந்து வருவதாக புகார் கூறப்படுகிறது. சாதாரண நிலையில் உள்ள ஊழியர்களைக் கொண்டு நடத்தப்படும் பணியால் தேர்வு நுழைவுச் சீட்டு அனுப்புவதில் பெரும் குளறுபடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றும் ஊழியர்களும் கசக்கிப் பிழியப்படுவதாக குற்றச்சாற்றும் கூறப்படுகிறது.
காலி இடங்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரிக்கப்படும் என்ற விவரம் தெரியவில்லை. குறைந்தபட்சம் 1,000 இடங்களாவது கூடும் என்று முதன்மை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பதால் தேர்வு எழுதுவதற்கான இட ஏற்பாடுகளை செய்யும் பணிதான் மிகவும் சிரமமாக உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வு மையங்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், கி.நி.அ. போட்டித் தேர்வை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கி.நி.அ. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் தேர்வு தேதியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். வேலையின்மை ஒருபக்கம், கிராம மக்களுக்கு அரசின் திட்டங்களைக் கொண்டு செல்லக்கூடிய அலுவலர்கள் போதுமான பேர் இல்லாமை மற்றொரு பக்கம். இப்படிப்பட்ட சூழலில் மக்கள் நலனை கருத்தில் கொண்டாவது இந்தத் தேர்வை குறைவின்றி, தாமதமின்றி தமிழக அரசு நடத்தி முடிப்பது நன்மை பயக்கும்.