கருப்பு பணத்தால் இந்தியா இழந்த ரூ.20 லட்சம் கோடி!

வியாழன், 18 நவம்பர் 2010 (18:44 IST)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, அரசு கஜானாவுக்கு சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை தணிக்கை அதிகாரி வெளியிட்ட தகவல், நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலை அடங்குவதற்குள், கருப்பு பணத்தால் இந்தியா இழந்த தொகை சுமார் 20 லட்சம் கோடி என்ற தகவலை வெளியிட்டு இந்திய சாமான்ய மக்களை விக்கித்துப் போக வைத்துள்ளது ஆய்வறிக்கஒன்று!

வாஷிங்டனை சேர்ந்த " Global Financial Integrity" - GFI - என்ற ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை அமைப்பு, வரி ஏய்ப்பு, குற்றச் செயல்கள், ஊழல் போன்றவற்றின் மூலம் புழங்கப்படும் சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிற பணிகளையும், நிதி தொடர்பான ஆலோசனைகளை அளிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த அமைப்பு சுதந்திர இந்தியாவுக்கு பின்னர் 1948 லிருந்து 2008 ஆம் அண்டு வரை கருப்பு பணத்தால் இந்திய அரசின் கஜனாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்பது குறித்து மேற்கொண்ட ஆய்வில், சுமார் 462 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் 20 லட்சம் கோடி ரூபாய்) என தெரியவந்துள்ளதாகூறி, அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்க காரணமாக அமைந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், 1991 ஆம் ஆண்டு தொடங்கியது. இதுதான் பின்னர் வருவாய் விநியோகத்தை வீழ்ச்சியடைய வைத்து, ஏராளமான கருப்பு பண பெருக்கெடுப்புக்கு காரணமாக அமைந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 1948 முதல் 2008 ஆம் ஆண்டு வரை சட்டவிரோத கருப்பு பண பெருக்கெடுப்பால் (அல்லது சட்டவிரோத முதலீடு) மட்டும் இந்தியா இழந்த தொகை மொத்தம் சுமார் 213 பில்லியன் டாலர் என்று கூறுகிறது அந்த அறிக்கை!

வரி ஏய்ப்பு, ஊழல், லஞ்சம் மற்றும் குற்றச்செயல்கள் போன்றவற்றிலிருந்து உருவாவதுதான் இந்த கருப்பு பண பெருகெடுப்பு.

இந்தியாவின் இந்த ஒட்டுமொத்த கருப்பு பணத்தை (462 பில்லியன் டாலர்) ஒன்று திரட்டினால் அது, இந்தியாவுக்கு தற்போதுள்ள அயல் நாட்டுக் கடன் தொகையான 232 பில்லியன் டாலர் தொகையைவிட இருமடங்குக்கும் அதிகமானதாகும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த கருப்பு பண பெருக்கெடுப்பு இந்தியாவின் வறுமை குறைப்பில் தேக்கத்தை ஏற்படுத்தியதோடு, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளியை எப்போதுமே மென்மேலும் அதிகரிக்கச் செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1948 முதல் 2008 ஆம் ஆண்டு வரை இந்திய தனியார் துறையினர் தங்களது பண டெபாசிட்டை, வளர்ந்த நாடுகளின் வங்கிகளிலிருந்து தீவு நாடுகளின் நிதி மையங்களுக்கு மாற்றிக்கொண்டு சென்று விட்டனர்.இதன் காரணமாக 1995 ஆம் ஆண்டு 36.4 விழுக்காடாக இருந்த இந்த நிதி மையங்களின் பங்கு, 2009 ஆம் ஆண்டில் 54.2 விழுக்காடாக அதிகரித்துவிட்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை எழுதியவரும், மேற்கூறிய ஆய்வு நிறுவனத்தின் பொருளாதார நிபுணருமான டாக்டர் டேவ் கார் இந்த அறிக்கையை வெளியிட்டு பேசுகையில், இந்தியாவின் பாதாள உலக பொருளாதாரம், கருப்பு பண பெருக்கெடுப்புடன் எவ்வாறு நெருக்கமாக உள்ளது என்பதை தங்களது அறிக்கை நிரூபிப்பதாக கூறினார்.

" அயல்நாடுகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் சட்டவிரோத சொத்துக்களின் தற்போதைய மொத்த மதிப்பு சுமார், இந்திய பாதாள பொருளாதாரத்தின் 72 விழுக்காடாக உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு ஒட்டுமொத்த‌ உற்பத்தியின் 50 விழுக்காடுக்கு சமமானது இந்த பாதாள பொருளாதாரம்.

அப்படியெனில் அயல்நாடுகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் சட்டவிரோத சொத்துக்களின் தற்போதைய மொத்த மதிப்பு, இந்தியாவின் பாதாள உலக பொருளாதாரத்தினுடைய சட்டவிரோத சொத்துக்களின் மூன்று மடங்கு என்றும் கூறி நம்மை வாய் பிளக்க வைக்கிறார் டேவ் கர்!

வெப்துனியாவைப் படிக்கவும்