ஃபேஸ்புக்கில் தெரிவிக்கக் கூடாத விடயங்கள்!

வெள்ளி, 12 நவம்பர் 2010 (18:40 IST)
கூகுளையே மிரள வைக்கும் அளவுக்கு கிடுகிடு வளர்ச்சியை எட்டியுள்ள ஃபேஸ்புக் சமூக வலைத்தளம், இன்றைய இளைய சமூகத்தினரின் இணைய டைரி என்றால் அது மிகையில்லை.

அந்த அளவுக்கு நாட்டு நடப்பு முதல் வீட்டு நடப்பு வரை எல்லாவற்றையும் அதில் எழுதி தள்ளிவிடுகிறார்கள் ஆர்வத்தில் அலைமோதும் இளையதலைமுறையினர்!

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கான ஒரு வேடிக்கையான மற்றும் ஜாலியான வழிமுறை ஃபேஸ்புக் என்றாலும், இத்தகைய சமூக வலைத்தளங்களில் நம்மை பற்றிய குறிப்புகளை வெளியிடும்போது - குறிப்பாக பெண்கள் - மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அவ்வாறு எச்சரிக்கையாக இருக்கவேண்டியவை எந்த மாதிரியான விடயங்களில், எது எதை தெரிவிக்கலாம், எவற்றை தெரிவிக்கக்கூடாது என்பது குறித்து நிபுணர்கள் கூறுவதை பார்க்கலாம்.

" நமது சொந்த புகைப்படம் (மார்ஃபிங்கில் மாற்றப்படும் ஆபத்து) உள்பட சில வகையான புகைப்படங்களை நமது வலைப்பக்கத்தில் ஏற்றுவது ஆபத்தாக முடியலாம்.யாராவது அவதூறாக பேசலாம் அல்லது ஏதாவது குற்றத்திற்கோ அல்லது அதைவிட மோசமான நிகழ்வுகளுக்கோ ஆட்பட நேரிடலாம்.

"டேட்டா மைனிங்" - data mining - என்றழைக்கப்படும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உள்ளன. இவை ஃபேஸ்புக்கை துளாவி நமது பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை எடுத்துவிடும். அப்படி கிடைக்கும் விவரங்கள் கிரிமினல் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு தங்கக்கட்டிக்கு சமமானவை" என்கிறார் பிரபல தகவல் தொழில்நுட்ப நிபுணரான டேவ் ஒயிட்லெக்.

எனவே பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை ஃபேஸ்புக் தளத்தில் தெரிவிக்ககூடாது. இந்த விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ள நிலையில், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் இணைய பயன்பாட்டின்போது "பாதுகாப்பு கேள்விகள்" - security questions - , கடவுச்சொல் - password - ஆக கேட்கப்படுபவற்றில் மேற்கூறியவைதான் முதன்மை பங்காற்றுகிறது.

எனவே மேற்கூறிய விவரங்களை தெரிவிப்பது எத்தனை ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ளலாம்.

அதேப்போன்று, வங்கி விண்ணப்பங்கள், இணையத்தின் மூலமான வங்கி பண பரிவர்த்தனை போன்றவற்றில் நீங்கள் யார் என்பதன் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்கப்படும் பாதுகாப்பு கேள்விகளில்,உங்களது தாயாரின் முதல் பெயர் என்ன என்பது கேட்கப்படுகிறது.

மேலும் நீங்கள் முதன் முதலில் படித்த பள்ளியின் பெயரும் கேட்கப்படுவது வழக்கமாக உள்ளது.
எனவே இத்தகைய விவரங்களையும் தெரிவிக்காமல் தவிர்ப்பது நல்லது.

அவ்வாறு செய்வது நமது அடையாள திருட்டை தவிர்க்க வைப்பதோடு, கொள்ளையர்கள் மற்றும் திருடர்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும்.

மேலும் நீங்கள் உங்களது ஃபேஸ்புக் தளத்தில் உங்களது அன்றாட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்தால், " அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டில் இருக்கமாட்டேன்..., 2 ஆம் தேதி ஊருக்கு செல்கிறேன்; திரும்பி வர 10 நாட்கள் ஆகும்..." என்றெல்லாம் தெரிவிக்காதீர்கள்.

இப்படி தகவல்களை உளறிக்கொட்டுவது திருடர்களையும், கொள்ளையர்களையும் நாமே வெற்றிலை பாக்கு வைத்து நமது வீட்டிற்கு கொள்ளையடிக்க வர அழைப்பதற்கு சமமாகிவிடும்.

மேலும் சாதி, மதம், இனம் குறித்த அவதூறான கருத்துக்களை தெரிவிப்பதோ அல்லது சட்டவிரோத புகைப்படங்களை போடுவதோ கூடாது. அவ்வாறு செய்வது உங்களது வாழ்க்கைக்கே ஆபத்தாகக் கூட போய்விட வாய்ப்புள்ளது.

மேலும் நமது தொலைபேசி எண்களை குறிப்பிடுவதால், அதை வாங்குங்கள்...இதை வாங்குங்கள், லோன் தருகிறோம், மருத்துவக் காப்பீடு போடுங்கள்... என்றெல்லாம் வரும் தொ(ல்) லை பேசி அழைப்புகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்.

அத்துடன் இப்போதெல்லாம் குழந்தைகள் கடத்தல் அதிகமாகி வருகிறது.அப்படி இருக்கையில் நம்மை பற்றிய விவரங்களை ஃபேஸ்புக் தளத்திலிருந்து சேகரித்துக்கொண்டு, நமது குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதோ அல்லது வெளியில் தனியாக செல்லும்போதோ நம்மை பற்றிய விவரங்களை கூறி, நான் உனது பெற்றோருக்கு தெரிந்தவன்தான் என்பதுபோல் காட்டிக்கொண்டு நமது குழந்தைகளை கடத்தவும் வாய்ப்புண்டு.

எனவே ஃபேஸ்புக் போன்ற தளங்களில் உங்களது பெயரை தவிர, உங்களைப்பற்றிய வேறு எவ்வித அந்தரங்க தகவல்களையும் தெரிவிக்காதீர்கள்!

வெப்துனியாவைப் படிக்கவும்