சோனியாவுடன் கலைஞர் பேச்சு!

சனி, 24 ஜனவரி 2009 (18:57 IST)
இலங்கையில் நமது தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்து கவிதை வாயிலாக கண்ணீர் சிந்திவிட்டு, மறுபக்கம் தன்னை‌ப் புகழ்ந்து பாடும் கவியரங்கிலும் பட்டிமன்றத்திலும் பங்கேற்று, அந்த சோகத்தை போக்கிக் கொள்கிறார் நமது முதல்வர் கலைஞர்.

இந்த சூழ்நிலையில்தான் இலங்கை பிரச்னைக்கு தனது இறுதி முயற்சியாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார் அவர்.

அவர்கள் இருவரின் (கற்பனையான) உரையாடல் இதோ...

கலைஞர்: வணக்கம் சோனியா ஜி! நல்லா இருக்கீங்களா? மன்மோகன் சிங் எப்படியிருக்கார்?

சோனியா: நமஸ்தே கலைஞர்ஜி. எப்படி இருக்கீங்க? என்ன விசேஷம்?

கலைஞர்: நான் ஏன் உங்களுக்கு போன் போட்டேன்னா...

சோனியா: புரியுது... நல்லாவே புரியுது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யணும் சொல்லி...

கலைஞர்: (அவசரமாக இடைமறித்து...) நோ..நோ.. தப்பா புரிஞ்சுகிட்டிங்க... நான் அதைப்பத்தி பேச வரல. பிரதமர் ஆஸ்பத்திரியில் இருக்கறதால மந்திரி சபையிலே மாற்றம் வரும்னு கேள்விப்பட்டேன்.

உங்களையே தொடர்ந்து ஆதரிச்சிகிட்டு வரும் எங்களுக்கும், கூடுதலாக பிரதிநிதித்துவம் தரணும்கிறது தான் என் தாழ்மையான வேண்டுகோள். அதுக்கு வசதியாகத் தான் கனிமொழியைத் தொடர்ந்து இப்போ கயல்விழிக்கும் கட்சியில பொறுப்பு கொடுத்திருக்கேன். தயாநிதி மாறனும் கட்சிக்கு திரும்பியிருக்கார்.

சோனியா: அப்பாடா.. விஷயம் இதுதானா? நான் கூட இலங்கை, போர் நிறுத்தம்னு வழக்கமான பல்லவிதான் பாடுவீங்களோன்னு பயந்துட்டேன்.

கலைஞர்: ஈழத்தில் நடக்கும் போரை நான் கண்டிக்கிறேன். ஆனா. அது இலங்கையின் உள் விவகாரம்கிறதுல நான் தெளிவாக இருக்கேன். போர் நிறுத்தனும்னு சொல்றது என் உரிமை. அதை நிறுத்துவதும் நிறுத்தாததும் ராஜபக்சேவின் உரிமை.

சோனியா: ஆனா சட்டசபையில தீர்மானமெல்லாம் போட்டு மிரட்ட‌றீங்களே?

கலைஞர்: இங்க இருக்கிற உங்க காங்கிரஸ் ஆளுங்க கூட தான் 'ஆதரவு வாபஸ்', 'திருமாவை கைது செய்'னு எங்களுக்கு பூச்சாண்டி காட்டறாங்க.. அதை நாங்க பெருந்தன்மையா ஏத்துக்கலியா. அது மாதிரி தான் இதெல்லாம்.

நான் சொல்லறபடி சொல்வேன். ஆனா அதையே மறுத்து அடுத்தநாள் கவிதை வடிப்பேன். கண்டுக்காதீங்க சோனியா ஜி.

சோனியா: விட்டுக் கொடுத்து அனுசரிச்சு போயிடுற அரசியல் முதிர்ச்சி உங்ககிட்ட இருக்கு. ஆனா ராமதாஸ் அவ்வப்போது கொடைச்சல் கொடுத்துக்கிட்டு இருக்காரே! மத்திய அரசு தூங்குதான்னு கேக்கறாரே..

கலைஞர்: கவலையே படாதீங்க.. லோக்சபா தேர்தல் வரைக்கும் ஈழத் தமிழர் விஷயத்தில் அவர் பொறுமையாத்தான் இருப்பார். ஈழத் தமிழர் மேல எவ்வளவு அக்கறை இருக்கோ அதேபோல் ஆட்சி மேலயும் அவர் பாசம், பற்றுதல் வச்சிருக்கார்.

சோனியா: இருந்தாலும் தொடர்ந்து நச்சரிச்சிகிட்டு வந்தா..?

கலைஞர்: பிரதமர் இப்போ உடல்நலம் சரியில்லாம இருக்கறதால உடனே இலங்கை பிரச்னைல கவனம் செலுத்த முடியலைன்னு சொல்லி, எனக்கு ஒரு கடிதம் அனுப்பிடுங்க...

சோனியா: பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு ஏன் அனுப்பலைன்னு கேட்டா?

கலைஞர்: பிரதமர் பொறுப்பை கூடுதலாக கவனிச்சுக்கறதால, உடனே அவரால் இலங்கைக்கு போக முடியலைன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம்.

சோனியா: ரொம்ப சரியா சொன்னீங்க. உங்களோட அரசியல் அனுபவத்தாலும், சாணக்கியத்தனத்தாலும் தான், ஏதோ நாங்ககெல்லாம் இங்க நிம்மதியா குப்ப கொட்ட முடியுது.

கலைஞர்: ரொம்ப புகழாதீங்க சோனியாஜி. உங்களுக்கு தொண்டாற்ற கனிமொழி, கயல்விழி, தயாநிதிமாறன் காத்திருக்காங்கன்னு மீண்டும் நினைவு படுத்திக்க விரும்புறேன். 'சோனியாவுடன் பேச்சு வெற்றி'னு சொல்லி அறிக்கை ஒன்னையும் இன்னிக்கே வெளியிட்டுடறேன்.

சோனியா: அப்படியே ஆகட்டும் கலைஞர் ஜி.

கலைஞர்: வணக்கம் அம்மையாரே.

வெப்துனியாவைப் படிக்கவும்