மற்றவரின் வலியையும் துயரத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் சுய இலாபத்தையே கருத்தாக கொண்டவர்களைப் பற்றி நமது நாட்டில் கூறப்படும் பழமொழி இது.
இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்துவரும் துயரத்தை முடிவுக்கு கொண்டுவர போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் மட்டுமின்றி, உலகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழர்களும் ஒருசேர குரல் கொடுத்துப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் குரலிற்கு டெல்லி அரசு செவிசாய்க்கவில்லை என்றாலும், ஐரோப்பிய நாடுகளும், ஜப்பானும் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.
இந்த நிலையில்தான் கடந்த 17ஆம் தேதி எம்.ஜி.ஆர். பிறந்த நாள் அன்று அ.இ.அ.தி.மு.க. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா கூறிய சில கருத்துகள் தமிழக மக்களிடையே ஒரு கொதிப்பை ஏற்படுத்தியது. இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தொல். திருமாவளவன் 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார், அதனை உங்கள் கூட்டணியில் உள்ள ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கின்றன, நீங்களும் ஆதரிக்கின்றீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஜெயலலிதா, அந்த உண்ணாவிரதம் கருணாநிதியும், திருமாவளவனும் பேசிக்கொண்டு நடத்துகிற நாடகம் என்று கூறியது மட்டுமின்றி, “இலங்கை வேறு ஒரு நாடு, அந்த நாட்டு பிரச்சனையில் தலையிடுவதற்கு ஒரு எல்லை உள்ளது” என்று கூறினார்.
அந்த குறிப்பிட்ட கேள்விக்கு அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் ஜெயலலிதா கூறிய கருத்தே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. சிறிலங்க இராணுவ, விமானப் படை குண்டு வீச்சில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி அவர் கூறிய கருத்து இதுதான்: “இலங்கையில் தமிழர்களை கொல்ல வேண்டும் என்று சிங்கள இராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள், இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. ஆனால், இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டு இருப்பது என்னவென்றால், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு இராணுவத்திற்கு முன்னால் கேடயமாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதித்தால் இந்த அப்பாவித் தமிழர்கள் சாக வேண்டிய அவசியமே இல்லை” என்று கூறியிருந்தார்.
எல்லா தலைவர்களின் அறிக்கையையும் வரிக்கு வரி அப்படியே போடும் தினத்தந்தி நாளிதழ், ஜெயலலிதா கூறியதையும் அப்படியே வெளியிட்டது. பல தொலைக்காட்சிகளிலும் அது வெளியானது.
ஜெயலலிதா இவ்வாறு கூறியதை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே கண்டித்தது. தமிழ்நாட்டின் மற்ற பல கட்சிகளும் கண்டித்தன. அவர் கூறிய கருத்திற்காக மட்டுமின்றி, அவர் வெளிபடுத்திய அற்புதமான அறியாமைக்காகவும் அக்கருத்து விமர்சனத்திற்குள்ளானது.
இந்த நிலையில்தான் நேற்று வேறு ஒரு அறிக்கை வெளியிட்டு ஜெயலலிதா கொடுத்துள்ள விளக்கம், அவருடைய பேச்சை விட, தமிழர்கள் பிரச்சனையில் தமிழருக்கு எதிரான அவரின் எண்ணத்தையும், சிறிலங்க அரசிற்கு ஆதரவான அவரது பார்வையையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
எந்த நாட்டில் யுத்தம் நடந்தாலும் அப்பாவி மக்கள் அழிவதை தவிர்க்க முடியாது என்று தான் கூறிய கருத்தை சில ‘தீய சக்திகள்’ திரித்துக் கூறி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும், சிறிலங்க இராணுவத்திற்கு ஆதரவாகவும் பேசியது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயன்றிருப்பதாக ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘எந்த நாட்டில் யுத்தம் நடந்தாலும் அப்பாவி மக்கள் அழிவதை தவிர்க்க முடியாது’ என்றுதான் தான் கூறியதாக சொல்லும் ஜெயலலிதா, இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய ராக்கெட் தாக்குதலையடுத்து, அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகளை இஸ்ரேல் குறிவைத்து கடும் தாக்குதல் நடத்தியபோது, ஏராளமான பொதுமக்களும், பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர் என்று கூறி கண்டனம் தெரிவித்தது ஏன்? அங்கும் ஹமாஸிற்கும், இஸ்ரேலிற்கும் யுத்தம்தானே நடந்தது? இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டுகொள்ளாமல் இருந்ததுபோல அதனையும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறலாமே?
போரைப் பற்றி ‘பொதுவாக’ இவரிடம் யார் கருத்துக் கேட்டது? இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் என்பதற்காகத்தானே தமிழ்நாட்டில் இவ்வளவு கூக்குரல் எழும்புகிறது?
விடுதலைப் புலிகள் அவர்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அனுமதிக்கவில்லை, அவர்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவரது கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் தா. பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதிலளிக்காத ஜெயலலிதா, அந்தக் கருத்தை மீண்டும் கூறியுள்ளார்.
தங்களை விடுதலைப் புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று எந்த இலங்கைத் தமிழர் இவரிடம் கூறினார்? இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்துள்ள எந்தத் தமிழராவது தங்களை விடுதலைப்புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ளனரா? மாறாக, தங்களை சிறிலங்க இராணுவத்தினர் கடத்தி சென்று கொன்று காணடித்து விடுகின்றனர் என்றுதானே சமீபத்தில் இராமேஸ்வரம் வந்த தமிழ் பெண் ஒருவர் கூட கூற, அது தொலைக்காட்சியில் காட்டப்பட்டதே.
ஒரு வாதத்திற்காக ஜெயலலிதா சொல்வதை ஒப்புக்கொண்டு பார்ப்போம். விடுதலைப் புலிகள் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தினால் சிங்கள இராணுவத்தினர் சுட மாட்டார்களா? குண்டு வீச மாட்டார்களா? அவ்வளவு அன்பா அவர்களுக்கு தமிழர்கள் மீது? அவ்வளவு மனிதாபிமான படையாக சிங்கள இராணுவமும், அந்நாட்டு அரசும் இருக்குமானால், ஏது அங்கே இனப் பிரச்சனை? சராசரி புத்திக்கு புலனாவது
கூட தமிழ்நாட்டின் முதல்வராக இரண்டு முறை இருந்த ‘தலைவருக்கு’ தோன்றாதது ஏன்? காரணம் அரசியல். இராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் புலிகளை பயங்கரவாதிகள் என்றே பழிதூற்றி அரசியல் செய்து இலாபம் பார்த்த பார்வை மாறவில்லை, அவ்வளவுதான்.
இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறையிருந்தால், ஓராண்டுக் காலத்தில் 6000 முறை வான்வழித் தாக்குதல் நடத்தி பல ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி சிங்கள இராணுவம் தமிழினத்தை கொன்று குவித்தபோதோ அல்லது அதனை சிங்கள பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஊடகங்களில் அறிவித்தபோதோ கண்டித்திருப்பார் ஜெயலலிதா. அவருடைய கண்ணிற்கு அதெல்லாம் தெரியவில்லை, ஆனால் தமிழர்களைக் காப்பாற்ற ஒவ்வொரு நாளும் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளை ‘தமிழ் பயங்கரவாதிகள்’ என்று புதிய பட்டம் கட்டி முத்திரை குத்த முடிகிறது.
ஒரு இலட்சம் தமிழர்களை கொன்று குவித்தது மட்டுமின்றி, இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து குண்டுகள் வீசி தமிழினத்தை அழித்துவரும் சிறிலங்க அரசின் நடவடிக்கை ஜெயலலிதாவிற்கு பயங்கரவாதமாகத் தெரியவில்லை. ஒரு அரசிற்கு தன் நாட்டு மக்களை கொல்வதற்கு அதிகாரம் உள்ளது என்றோ அல்லது அது கூட அந்நாட்டு இறையாண்மைக்கு உட்பட்டது என்று கூட ஜெயலலிதா சொன்னாலும் சொல்வார்.
போரை நிறுத்த வேண்டும் என்பதற்காக கருணாநிதி எடுக்கும் நடவடிக்கைகளால்தான் இலங்கை இராணுவத்தால் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்! எப்படிப்பட்ட கண்டுபிடிப்பு! விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லையாம், அதனால்தான் மற்ற இயக்கத்தின் தலைவர்களையெல்லாம் கூட விடுதலைப் புலிகள் கொன்றுவிட்டனராம்.
டட்லி சேனநாயகா, பண்டாரநாயகா, சிறிமாவோ என்று அடுத்தடுத்து வந்த சிங்களத் தலைவர்களின் ஆட்சியில் சம உரிமை பெற ஜனநாயக ரீதியில் போராடிப் பார்த்து தங்கள் உரிமைகளை பெற முடியாது என்று முடிவு செய்து தனி நாடு ஒன்றே தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பெற்றுத்தரும் என்று கூறி, அந்த முழக்கத்தின் அடிப்படையிலேயே வல்வெட்டித்துறையில் போட்டியிட்டு வெற்றி பெற்று தனி ஈழப் போராட்டத்தை ஈழத்தந்தை செல்வா துவக்கி வைத்தார் என்ற வரலாறு கூட தெரியாமல், “சுய நிர்ணய உரிமைக்கென்ற இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை அ.இ.அ.தி.மு.க. முழு மனதோடு ஆதரிக்கிறது. அதே சமயத்தில் ஆயுதம் ஏந்தி பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை எதிர்க்கிறது” என்று ஏதோ இவரிடம் ஈழத் தமிழர்கள் ஆலோசனை கேட்டதாக நினைத்து கருத்து தெரிவிக்கிறார்.
ஆயுதம் தாங்கிய போராட்டம் துவக்கப்பட்டிருக்க வில்லையெனில் இன்று ஈழத் தமிழினத்தில் எத்தனை விழுக்காடு விஞ்சியிருக்கும் என்பதை நீண்ட நெடிய அப்போராட்டத்தை நன்கு அறிந்தவர்களால் யூகிக்க முடியும். அதேபோல ஈழத் தமிழர் உரிமைப் பிரச்சனை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு சென்றது ஆயுதப் போராட்டத்தின் காரணமாகத்தான் என்பதும் அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்ல, ஈழத் தமிழரின்
உயிரையும், உரிமையையும் காக்க 25,000 விடுதலைப் புலிகள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளார்கள் என்பதும் உலக நாடுகளுக்குத் தெரியும். அதனால்தான், விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்திருந்தாலும், அவர்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றும், அவர்களோடு சிறிலங்க அரசு பேச வேண்டும் என்றும் அமெரிக்கா கூறிவருகிறது.
இராஜீவ் காந்தி படுகொலையை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை இதற்கு மேலும் சிறுமைபடுத்திட முடியாது என்பதே, இன்றைக்கு தமிழக மக்களிடம் ஏற்படுள்ள எழுச்சி விடுக்கும் செய்தி.
ஜெயலலிதாவாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சியானாலும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாக இருந்தாலும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இராஜீவ் படுகொலை எனும் உணர்ச்சிக் கிலுகிலுப்பையைக் காட்டி இதற்கு மேலும் தமிழக மக்களை யாரும் ஏய்க்கவும் முடியாது, ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மறைத்திடவும் முடியாது.
இதனை அன்றே உணர்ந்தவராக இருந்தார் அ.இ.அ.தி.மு.க. நிறுவனரும் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவருமான எம்.ஜி.ஆர். அதனால்தான், அன்றைக்கு செயல்பட்டுவந்த அனைத்து இயக்கங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தேர்வு செய்து ஆதரவளித்தார். ஈழ மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்பதன் அடையாளமாக தொடர்ந்து கறுப்புடை தரித்தார்.
அப்படிப்பட்ட தலைவர் வழி வந்தவராக கூறிக்கொள்ளும் ஜெயலலிதா, இதற்கு மேலும் ஒரு எதிர்ப்பு அரசியலிற்காக, நாளும் துயரத்தில் மூழ்கடிப்படும் ஒரு இனத்தின் உரிமை போராட்டத்தை சிறுமைபடுத்துவதை தவிர்த்துவிட்டு, எம்.ஜி.ஆர். வழியில் அதனை ஆதரிக்க முன்வர வேண்டும்.
சுதந்திரத்திலிருந்தான் அரசியல் பிறக்கிறது. அரை நூற்றாண்டுக் காலம் இன ஒடுக்கலை, ஒழித்தலை திட்டமிட்டு நடத்திவரும் ஒரு இனவாத அரசுடன் பேசி எந்த தீர்வையும் உருவாக்க முடியாது. எனவே ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை சுதந்திரத்தைத் தாண்டிய நிரந்தரத் தீர்வு என்பதும் ஏதும் கிடையாது.
இதனை உள்ளது உள்ளபடி உணராமல் இலங்கைப் பிரச்சனையில் அ.இ.அ.தி.மு.க.விற்கு தனித்த பார்வை உள்ளது என்று கூறி அரசியல் செய்வது, எருதின் புண் வலியை உணராமல் தனது பசியை போக்கிக்கொள்ள அதனைக் கொத்திக் கொத்தி சதையை எடுத்து உண்டுவிட்டுப் பறக்கும் காக்கையை ஒத்ததாகவே இருக்கும். அதனை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.