இலங்கையில் சிறிலங்க அரசு தமிழர்களை ஒட்டு மொத்தமாக அழித்திட திட்டமிட்டு நடத்திவரும் அரச பயங்கரவாதத்திற்கு முடிவுகட்ட, உடனடியாக போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விடுத்த வேண்டுகோளை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு, ராஜபக்ச அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளுக்கு இன்முகத்துடன் ஆதரவளித்துவிட்டுத் திரும்பியுள்ளார் இந்திய அயலுறவு செயலர் சிவ்சங்கர் மேனன்.
கடந்த மூன்றரை மாதமாக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சட்டப் பேரவையிலும், வெளியிலும் ஒருமித்த குரலில் விடுத்த வேண்டுகோளிற்கு எந்த மரியாதையும் இல்லை என்பதை அயலுறவு செயலர் சிங்சங்கர் மேனன் பயணம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தியுள்ளது.
ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழித்தலை தடுக்க போர் நிறுத்தம் செய்திடு என்று மத்திய அரசை வலியுறுத்த தமிழர்களாகிய நீங்கள், தீர்மானம் போடலாம், போராட்டம் நடத்தலாம், மனித சங்கிலி நடத்தலாம், உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளலாம். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு, உங்களின் இனத்தை அழித்துவரும் அதிபர் ராஜபக்ச அரசுடன், “முன் எப்போதையும் விட இப்போது ஆழ்ந்த, இதமான, பலமான உறவு உள்ளது” என்று சிங்சங்கர் மேனன் தன்னிடம் கூறினார் என்று சிறிலங்க அயலுறவு அமைச்சர் ரோகித போகல்லகாமா கூறியிருப்பது, “தமிழர்களைத் தாண்டிய ஒரு நல்லுறவை நாங்கள் சிறிலங்க அரசுடன் கொண்டுள்ளோம்” என்பதையே தமிழனின் செவிப்பறை கிழிய பறைசாற்றியுள்ளது.
அதுமட்டுமா? “தமிழர்கள் உட்பட இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் அமைதியுடனும், கெளரவத்துடனும் வாழ வழிவகுக்கும் ஒரு அரசியல் தீர்வை, பேச்சு வார்த்தையின் மூலம் காண வேகமாக செயலாற்ற வேண்டும் என்று இந்திய அரசின் சார்பாக சிறிலங்க அரசிடம் வலியுறுத்தப்பட்டதாக” கொழும்புவில் இருந்து இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
PUTHINAM
விமானம் மூலம் குண்டுகளை வீசியும், கனரக பிரங்கி, பல்குழல் பீரங்கி, எறிகணைகள் சுட்டும் ஒவ்வொரு நாளும் தமிழர்களைக் கொன்று வதைத்துவரும் சிறிலங்க அரசின் அயலுறவு அமைச்சரிடமும், அதிபரிடமும், ‘தமிழர்கள் அமைதியுடனும், கெளரவத்துடனும் வாழ அமைதி வழியில் தீர்வு காண வேண்டும்’ என்று கூறியுள்ளதாக அறிக்கை விடுவது தமிழர்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, வெறுப்பேற்றும் நடவடிக்கையாகும்.
இலங்கை இனப் பிரச்சனைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வை வலியுறுத்திய ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நாடுகளும், முதலில் தமிழர்கள் மீது நடத்திவரும் போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துவரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து ஒன்றுமே பேசாமல், தமிழர்கள் அமைதியுடனும், கெளரவத்துடனும் வாழ ‘விரைந்து’
வழிகாணுமாறு சிவ்சங்கர் மேனன் கூறிவிட்டு வருகிறார் என்றால், அதன் பொருள், ‘விரைந்து அழித்துவிட்டு பிரச்சனையை முடியுங்கள்’ என்பதுதானே தவிர, தீர்வு காணுங்கள் என்று பொருளல்ல.
எனவே தனது வெளிப்படையான, மறைமுகமான நடவடிக்கைகளின் மூலம் தமிழர்களின் நலனோ அல்லது அவர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவதோ தங்களின் நோக்கமோ, கவலையோ அல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், அதன் தலைமைப் பொறுப்பிலுள்ள காங்கிரஸ் கட்சியும் தெளிவாக தெரிவித்துவிட்டன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இன்று வரை தமிழ்நாடும், உலகளாவிய தமிழினமும் ஒருமித்த குரலில் விடுத்த கோரிக்கைகள் அனைத்தும், இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைக்கு ஒப்புக்கொண்டு சேனநாயகா, பண்டாரநாயகா, சிறிமாவோ ஆகியோர் ஒப்பந்தம் செய்து, பிறகு அதனை கிழித்துத் தூக்கி எறிந்தததைப் போல மத்திய அரசால் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன.
அன்றைக்கு சிங்கள ஆட்சியாளர்கள் தமிழனின் உரிமைகளைப் பறித்து நெஞ்சில் குத்தினர். தமிழ்நாடு, புதுவையிலிருந்து 40 மக்களவை உறுப்பினர்களுடன் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி, இன்று அவர்களின் வாழ்வைக் காக்க குரல் கொடுத்த தமிழினத்தின் கோரிக்கையை மறுத்து முதுகில் குத்தியுள்ளது.
இதற்கு மேலும் ஈழத் தமிழரை காக்கவோ அல்லது அவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணவோ ஐ.மு.கூ. அரசை நம்பிப் பயனில்லை.
PUTHINAM
எப்படி ஈழத் தமிழனின் நலனைப் புறக்கணித்து, தமிழ்நாட்டு மீனவனின் வாழ்வுரிமையை தாண்டி, தமிழின எதிரியான இன வெறி சிறிலங்க அரசுடன் மத்திய அரசு உறவு கொண்டுள்ளதோ அதற்கு பதிலடியாக தமிழினம் மத்திய அரசைத் தாண்டி, நியாயமான தமிழரின் வாழ்வுரிமைப் போராட்டங்களுக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபையையும், உலக நாடுகளையும் நேரடியாக நாட வேண்டும்.
தமிழனின் சுதந்திரமும், வாழ்வுரிமையும் பேரத்திற்கோ அல்லது தன்னை ஒரு வல்லரசாக காட்டிக்கொள்ள முற்படும் ஒரு அரசின் நலனிற்காகவோ பலியிடுவதற்கு இல்லை என்பதை தமிழினம் ஒன்றுபட்டு எழுந்து வீறுகொண்டு செயல்பட்டு நிரூபித்திட வேண்டும்.