மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக அதிக விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை 70 விழுக்காடு வாக்குப்பதிவு என்பதே, அது மக்களவைத் தேர்தலாக இருந்தாலும், சட்டப்பேரவை தேர்தல் அல்லது இடைத்தேர்தலாக இருந்தாலும் மிகப்பெரிய வாக்குப் பதிவாகக் கருதப்படும்.
பெரும்பாலான உயர் நடுத்தர மக்களும், மேல்தட்டு மக்களும் வாக்களிப்பது நமது கடமையல்ல; வெற்றிபெற்ற பின் விமர்சிப்பதே நமது வேலை என்று வாளா இருந்து விடுவார்கள். அதற்குக் காரணம், அவர்கள் சார்ந்து வாழும் குடும்பப் பின்னணி, அவர்கள் ஆற்றும் பணி போன்றவையாகும்.
எனவேதான் ஏழைகளையும், வியாபாரிகளையும், நடுத்தர மக்களையும் குறிவைத்தே அரசும், அரசியல் கட்சிகளும் வாக்கு சேகரிக்கும் யுக்திகளை காலங்காலமாக கடைபிடித்து வருகிறார்கள் எனலாம்.
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஒரு வாக்கிற்கு ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை விலை பேசப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் தி.மு.க.விற்கு இந்தத் தேர்தல் கவுரவப் பிரச்சினை என்பதோடு, மத்திய கூட்டணியில் தங்களின் பிரதிநிதித்துவத்தை எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வலியுறுத்துவதற்கும் முக்கியமானதாக அமையும் என்பதால், எப்படியும் வென்றே தீர வேண்டும் எனற நோக்கில் களத்தில் இறங்கினர்.
கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தலில், அஇஅதிமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றிபெற்ற ம.தி.மு.க., இந்த முறை அத்தொகுதியை கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் அ.இ.அ.தி.மு.க.விற்கு விட்டுக் கொடுத்தது.
தவிர, தி.மு.க.வைப் பலமாக எதிர்த்து வாக்குகளைத் திரட்ட அ.தி.மு.க.வே சரியான போட்டியாக இருக்கும் என்று கருதியோ அல்லது விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க.விடம் இருந்து கூடுதல் சகாயத்தை எதிர்நோக்கியோ கூட திருமங்கலத்தை விட்டுக் கொடுத்திருக்கலாம்.
அந்த வகையில் ஆளும் தி.மு.க.விற்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் அ.தி.மு.க. சார்பிலும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணம் ஒருபுறம் கொடுத்தாலும், பரஸ்பரம் ஒருவரையொருவர் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யவும் தயங்கவில்லை.
அனைத்திற்கும் மேலாக, பீகார், உத்தரப்பிரதேசத்தை விடவும் தமிழகம் தேர்தல் விதிமீறல்களில் மிஞ்சி விட்டதாக் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி கருத்து கூறியிருந்தார். அந்த அளவுக்கு ஒரு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தவிர, மறைந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் மீது அதிகப் பற்று கொண்ட சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பதோடு, அடுத்தடுத்து அ.இ.அ.தி.மு.க.வோ அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளோதான் வெற்றி பெற்றுள்ளன. ஓரிரு முறை தி.மு.க.வும் வென்றுள்ளது.
அந்த வகையில் எப்படியும் திருமங்கலம் தங்களின் கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் என்ற ரீதியில் அ.தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் களமிறங்கியுள்ளன.
அனைத்திற்கும் மேலாக, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது தி.மு.க. அணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது அ.தி.மு.க. அணியில் உள்ளதும், தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வெளியேறி யாருக்கும் ஆதரவளிக்காததும் கூட இடைத் தேர்தல் முடிவில் பிரதிபலிக்கலாம்.
இவ்வளவு களேபரத்திற்கும் பிறகு இங்கு நேற்று முடிந்துள்ள இடைத்தேர்தலில், புதிய சாதனையாக 88.89 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஒரு சில சம்பவங்களைத் தவிர, பெரிய அளவு வன்முறை அல்லது அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக வாக்குப்பதிவு முடிந்திருப்பதும், ஜனநாயகத்திற்குக் கிடைத்துள்ள வெற்றி எனலாம்.
இதற்கான முடிவு இன்னும் 48 மணி நேரத்திற்குள் தெரிந்து விடும். வாக்கு எண்ணிக்கை திங்கட்கிழமை (12ஆம் தேதி) நடைபெறுகிறது.
மேலும் தொகுதி மக்கள் துணிவுடன் வந்து, தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்காக தங்களின் வாக்குகளைச் செலுத்தியிருப்பதையும் இந்த நேரத்தில் வரவேற்காமல் இருக்க முடியாது.
திருமங்கலம் வாக்காளர்களைப் பின்பற்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதி மக்களும், அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் கண்டிப்பாக தங்கள் வாக்குகளைச் செலுத்த வேண்டும். அப்போதுதான் கள்ளவாக்குகள் குறைவதோடு, நமது பிரதிநிதிகளைத் தேர்வு செய்ததில் நமது பங்கும் உள்ளது என்ற மனநிறைவும் கிடைக்கும்.