ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: மதச்சார்பின்மைக்கு பின்னடைவு!

திங்கள், 29 டிசம்பர் 2008 (18:05 IST)
PTI
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அம்மாநில மக்களின் ஜனநாயக உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அது மதவாத ரீதியாக அம்மாநில அரசியல் பெரும் அளவிற்கு பிளவுபட்டுள்ளதையே காட்டுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 61 விழுக்காடு மக்கள் பங்கேற்றது, அவர்கள் இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுவதாக உள்ளது என்று பொதுவாக வர்ணிக்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியபோது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல, அங்கு ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்பதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

தேர்தலை புறக்கணிக்கும்படி, ஹூரியாத் உள்ளிட்ட மதவாத- பிரிவினைவாத இயக்கங்களும், ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளும் ‘வேண்டுகோள்’ விடுத்த நிலையிலும் 61 விழுக்காடு மக்கள் தேர்தலில் பங்கேற்றுள்ளது ஜனநாயக வழிமுறைகளின் மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று எடுத்துக்கொண்டாலும், அந்த வழிமுறையில் அவர்கள் வாக்களித்த விதம் ஜனநாயக உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை.

PTI
மாறாக, ஓராண்டிற்கு முன்னர் அம்மாநிலத்தை உலுக்கிய அமர்நாத் பிரச்சனையின் பிரதிபலிப்பாகவே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது என்பதுதான் உண்மை. தேர்தல் முடிவுகளை சற்றே கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை நன்கு புலப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 87 இடங்களில் எந்த ஒரு கட்சியும் தனித்த பெரும்பான்மை பெறவில்லை என்றாலும், தேசிய மாநாட்டுக் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சியாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் முஃப்தி மொஹம்மது சையதுவின் மக்கள் ஜனநாயகக் கட்சி 21 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்திலும், 17 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திலும், கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 10 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்று 11 இடங்களை பெற்று 4 வது பெரிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உயர்ந்துள்ளது.

இதில் அதிகமான இடங்களைக் கைப்பற்றிய முதல் இரண்டு கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் தங்கள் வெற்றியில் பெரும்பான்மையான இடங்களை காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே வென்றுள்ளன. ஜம்மு பகுதியில் இவ்விரு கட்சிகளும் சில இடங்களிலேயே வென்றுள்ளன.

அதே நேரத்தில் இவ்விரு கட்சிகளுக்கும் கடந்த தேர்தலோடு ஒப்புடுகையில் இழப்பு ஏதுமில்லை. மாறாக, மக்கள் ஜனநாயகக் கட்சி 5 இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது!

மூன்றாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தலில் வென்ற இடங்களைக் காட்டிலும் 3 இடங்கள் குறைவாகப் பெற்றுள்ளது. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில், அதிலும் குறிப்பாக தெற்கு காஷ்மீரில் அதன் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது. தெற்கு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல வடக்கு காஷ்மீரில் ஃபரூக், உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஜம்முவில் இதுவரை இல்லாத அளவிற்கு பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்று நான்காவது பெரிய கட்சியாக சட்டப்பேரவையில் அடியெடுத்து வைக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி, ஜம்மு-காஷ்மீரில் அமையப்போகும் ஆட்சியை எந்த விதத்திலும் நிர்ணயிக்கப் போவதில்லை என்றாலும், அதன் சட்டப்பேரவை செயல்பாடு அம்மாநில அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆக, தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் காஷ்மீர் பகுதி மக்களின் பிரதிநிதிகளாகவும், ஜம்மு பகுதியில் உள்ள மக்களின் பிரதிநிதிகளாக காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. இவைகள் தவிர, தேசிய சிறுத்தைகள் கட்சி 3 இடங்களிலும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி (சென்ற தேர்தலில் வென்றதைவிட ஒரு இடம் குறைவாக) ஒரே ஒரு இடத்திலும் வென்றுள்ளன.

இதில் குறிப்பாக கவனிக்கத்தக்கது, ஜம்மு பகுதியில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்ப்பற்ற அரசியல் கட்சிகளின் வாக்குகள் இம்முறை பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றுள்ளதும், தெற்கு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அதிகரித்துள்ள ஆதரவும் வெற்றியுமாகும்.

இப்படி ஒரு பெரும் மாறுதல் ஏற்பட எது காரணியாக இருந்துள்ளது என்று பார்த்தால், புனித அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நில ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து முதலில் காஷ்மீரிலும், பிறகு அதற்கு ஆதரவாக ஜம்முவிலும் நடந்த போராட்டங்கள் மத ரீதியாக வாக்காளர்களின் எண்ணங்களை மாற்றியுள்ளது தெரிகிறது.

அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நில ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு வித்திட்டது தேசிய மாநாட்டுக் கட்சி.
அதனை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்த காங்கிரஸ் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் முன்வந்தபோது, காங்கிரஸோடு ஆட்சியில் அங்கம் வகித்த மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவளித்தது. அக்கட்சியைச் சேர்ந்தவர் துணை முதல்வராக இருந்து அதற்கான ஒப்புதலை அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கினார்.


அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நில ஒதுக்கீடு செய்வதற்கு காஷ்மீரில் உள்ள மதவாத-பிரிவினைவாத அமைப்புகள் தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த எதிர்ப்பு பெரிதாக இருக்கவில்லை. தனது அரசியல் இலாபத்திற்காக அப்பிரச்சனையை முக்கிய எதிர்க்கட்சியாக இருந்த தேசிய மாநாடு கையிலெடுத்ததும் எதிர்ப்பு பெரிய கிளர்ச்சியாக்கப்பட்டது அனைவரும் அறிந்தது.

அந்த நிலையில்தான், அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புக்கொண்ட மக்கள் ஜனநாயகக் கட்சி, நில ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புக் காட்டத் துவங்கியது. அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நில ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெறக்கோரிய மக்கள் ஜனநாயகக் கட்சி, அதற்கு காலக்கெடுவையும் நிர்ணயித்தது, ஆதரவை திரும்பப் பெறும் அறிவிப்பையும் வெளியிட்டது. அதன் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அரசாணையை முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் திரும்பப் பெற்றப்பிறகும் கூட, ஆதரவை விலக்கிக்கொண்டு ஆட்சியைக் கவிழ்த்தது.

அமர்நாத் கோயில் நில ஒடுத்துக்கீடு ஆணையை திரும்பப்பெறக்கோரி நடந்த கலவரத்திலும், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

PTI
அரசாணை திரும்பப்பெற்றதும் காஷ்மீரில் கலவரம் ஓய்ந்தது. ஆனால், அரசாணையை திரும்பப்பெற்றதைக் கண்டித்து இந்துக்கள் அதிகம் உள்ள ஜம்மு பகுதியில் கிளர்ச்சியும், கலவரமும் வெடித்தது. இங்கும் கலவரத்திலும், காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கும் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஒருவர் தன்னை எரித்துக்கொண்டு எதிர்ப்புக் காட்டி உயிரை விட்டார். அவருடைய விதவை மனைவி இந்தத் தேர்தலில் பா.ஜ.க. சார்பாக போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

காஷ்மீர் தலைநகருக்குச் செல்லும் தேச நெடுஞ்சாலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் மறித்தனர். இதனால் காஷ்மீர் பகுதிக்கு அத்‌தியாவசியத் தேவை பொருட்கள் கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது காஷ்மீர் பகுதியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியத

தேர்தலிற்குப் பிறகு புதிதாக பதவியேற்கும் அரசு இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் என்ற உடன்படிக்கையோடு ஜம்முவில் கலவரத்திற்கு (பேச்சுவார்த்தையின் மூலம்) முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்தப் பின்னனியில்தான் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் ஆணையத்தின் சீரிய முயற்சியால் - வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, இப்படி முடிவுகள் வந்துள்ளன.

PTI
நில ஒதுக்கீடு விடயத்தை மிகப்பெரிய பிரச்சனையாக ஊதிப் பெரிதாக்கிய உமர் அப்துல்லாவின் (இதில் ஃபரூக் மாறுபட்ட பார்வை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அவர் முதல்வராக இருந்தபோதுதானே அமர்நாத் கோயிலிற்கு நில‌ம் வழங்க அரசு ஒப்புக்கொண்டது) தேசிய மாநாடு தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது (இடங்கள் எண்ணிக்கை மாறவில்லை, அதே 28 தான்).

உமரைத் தொடர்ந்து அப்பிரச்சனையை கையிலெடுத்த மேலும் ஊதிப் பெரிதாக்கிய மொஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 5 இடங்களைக் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

அமர்நாத் கோயிலிற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட உத்தரவை மீண்டும் பிறப்பிக்க வேண்டும் என்று கட்சி ரீதியாகவும், பொது அமைப்பையும் உருவாக்கி போராடிய பாரதிய ஜனதா கட்சி 10 இடங்களை கூடுதலாக கைப்பற்றியுள்ளது.

மதச்சார்பற்ற கொள்கை கொண்ட அகில இந்தியக் கட்சி என்று பறைசாற்றிக்கொண்டு, பிறப்பித்த உத்தரவை அரசியல் எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெற்ற காங்கிரஸ் கட்சி 3 இடங்கள் குறைவாக வென்றது மட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், ஜம்முவிலும் மிகப் பெரிய அளவிற்கு வாக்குச் சரிவை சந்தித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அமைச்சரவையில் ஒருமித்து ஒப்புக்கொண்டு பிறப்பித்த அரசாணையை கடைசிவரை (ஆட்சி போனாலும் பரவாயில்லை என்று) உறுதியுடன் இருந்திருந்தால், ஜம்முவிலும், தெற்கு காஷ்மீரிலும் அக்கட்சி பெரும் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், அரசியலிற்காக மதச்சார்பின்மையை ஒரு அடையாளமாக மட்டுமே கொண்டு செயல்பட்டதால், இரு தரப்பு மக்களிடமிருந்தும் காங்கிரஸ் கட்சி அன்னியப்பட்டுவிட்டது.

PTI
ஆக, ஜனநாயக ரிதியிலான ஒரு தேர்தலாக இது தெரிந்தாலும், அதன் முடிவு ஜம்மு-காஷ்மீர் மக்களின் மத ரீதியிலான எண்ணத்தையே பிரதிபலித்துள்ளது. இது அம்மாநில சட்டப்பேரவையிலும் பலமாக பிரதிபலிக்கலாம்.

ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் தோற்றது மதச்சார்பின்மையே.