தீபாவளி பண்டிகைக்காக ஆடை, ஆபரணங்களை வாங்க சென்னை தியாகராயர் நகருக்கு வரும் மக்கள், அங்குள்ள கடைகளில் பொருட்களை வாங்கச் செல்லும் மக்கள் கூட்டத்தினால், அந்தக் கடைகளுக்குள்ளேயே நெரிசல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
உஸ்மான் சாலை, இரங்கநாதன் வீதி ஆகியவற்றில் உள்ள ஜவுளிக் கடைகளில் கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் கூடிய கூட்டம் ஒரு அபாய அறிவிப்பாகவே இருந்தது.
போத்திஸ், சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், குமரன் ஸ்டோர்ஸ் என்று எல்லா பெரும் ஜவுளிக் கடைகளும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. இக்கடைகளின் வாயில் பெரிதாக இருந்தும் மக்கள் வரவு பெருமளவிற்கு அதிகரித்ததால், அங்குள்ள ஊழியர்கள் முறைப்படுத்த திணறியதைக் கண்டோம்.
இக்கடைகளின் ஒவ்வொரு தளத்திலும் சேரும் மக்கள் கூட்டம், மிக மிக நெருக்கமாக ஒருவரையொருவர் உரசிக்கொண்டும், தள்ளிக்கொண்டும் தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தேடி எடுக்க முண்டுவதும், பொருட்களை வாங்கியவர்கள் பணத்தைச் செலுத்த முண்டியடித்துக்கொண்டு முன்னேறுவதும் பார்ப்பதற்கே அச்சுறுத்தலாக இருந்தது.
webdunia photo
FILE
பொருட்களை வாங்குவதற்கு உள்ளே சென்ற மக்கள், உள்ளே வந்த வழியிலேயே வெளியேறுவதற்கு முடியாத நிலை நேற்று ஒரு கடையில் ஏற்பட்டுள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தப்பித்துச் செல்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அவசர வழியில் (Emergency Exit) மக்களை வெளியே அனுப்பியுள்ளனர்.
கம்பிகளால் ஆன அந்த வழியில் சேலை கட்டிய மகளிர் மிகுந்த சிரமத்துடன் இறங்கிச் சென்றுள்ளனர். அந்த வழியில் ஒருவர் தடுமாறி விழுந்தாலும் போதும், அவர் மீது மற்றொருவர் விழும் நிலையில் அவசர வழியே அபாய வழியாகும் நிலை ஏற்பட்டுவிடும் என்று நேற்று அங்குச் சென்ற ஒரு தாயும், மகளும் தெரிவித்தனர்.
இதுமட்டுமின்றி, ஒவ்வொரு தளத்திலும் குறைந்தது 1,500 பேர் முதல் 2,000 பேர் வரை எந்த நேரத்திலும் நெருக்கமாக உள்ளிருப்பதால் மூச்சுத் திணறல் இருந்ததையும் உணர்ந்தோம். மிக ஆபத்தான சூழ்நிலையிலேயே அங்கு வணிகம் நடந்துகொண்டிருக்கிறது.
எதிர்பாரா விதமாக ஆக்ஸிஜன் குறைவு ஏற்பட்டாலோ அல்லது லேசான தீ விபத்து நிகழ்ந்தாலோ கூட அச்சத்தில் மக்கள் வெளியேறத் தலைப்பட்டால் அது மிக கோரமான நெரிசல் விபத்தாக முடியும் சாத்தியம் உள்ளது.
தியாகராயர் நகர் காவல் நிலையத்தினரும், தீயணைப்புப் படையினரும் உடனடியாக அங்குள்ள நிலையை ஆராய்ந்து, நெரிசல் உள்ளிட்ட எந்த ஆபத்தும் நிகழாமல் தடுக்கக்கூடிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம்.