உணவுப் பொருட்கள், எரி சக்தி விலை உயர்வு பெரும் பாதிப்பாக இருக்கிறது: உலகளாவிய கருத்துக் கணிப்பு!
திங்கள், 20 அக்டோபர் 2008 (10:55 IST)
உணவு பொருட்கள், எரி பொருட்களின் விலை உயர்வே கடும் சுமையாக இருப்பதாக 26 நாடுகளில் நடந்த கருத்து கணிப்பில் இருந்து தெரியவந்துள்ளது.
பி.பி.சி. வேர்ல்ட் சர்வீஸ் சமீபத்தில் 26 நாடுகளில் வாழும் மக்களிடம், பொருளாதார நிலைமை பற்றிய கருத்து கணிப்பு நடத்தியது. இந்த ஆய்வில் பதிலளித்த 60 விழுக்காட்டினர், சமீபத்தில் அதிகரித்த உணவு பொருட்கள், எரி பொருட்களின் விலையே பெரும் சுமையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதில் சீனாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் சிறிதளவே பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிலர் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
உணவு பொருட்கள், எரி பொருட்களின் விலை, மின்சார கட்டணம் போன்றவை அதிகரித்ததால, குடும்பங்களின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்த ஆய்வில் இருந்து உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை, குறிப்பாக ஏழை நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.
வளரும் நாடுகளின் மக்கள், உணவுப் பொருட்களின் விலை உயர்வால், முன்பு சாப்பிட்ட அளவைவிட, தற்போது குறைந்த அளவு சாப்பிடுவதாக தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ், பணாமா ஆகிய நாடுகளில் வாழும் மக்களில் 63%, கென்யாவைச் சேர்ந்த 61%,, நைஜிரியாவைச் சேர்ந்த 58% மக்கள் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தாதல், தற்போது குறைந்த அளவு உணவு சாப்பிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்து கணிப்பில் மொத்தம் 27,319 பேர் பதிலளித்தனர். அதில் 43 விழுக்காட்டினர் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்ததால், அவர்களின் உணவு பழக்கமே மாறி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பணாமா 71%, எகிப்து 67%, கென்யா 64%, பிலிப்பைன்ஸ் 63% பேர் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டு இருப்பதாக கூறியுள்ளனர்.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வளரும் நாடுகள், ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்களை மட்டும் பாதிக்கவில்லை. இந்த கருத்து கணிப்பில் இருந்து வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களையும் பாதித்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 27%, பிரிட்டன் 25%, ஜெர்மனி 10% பேர் உணவு அளவை குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் உணவை குறைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
உணவுப் பழக்கத்தை வளர்ந்த நாடுகளில் வாழும் மக்களும் மாற்றிக் கொண்டு இருப்பாதக கருத்து கணிப்பில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதில் ஸ்பெயின் 17%, போலாந்து 19%, ஜெர்மனி 24% மக்கள் உணவுப் பழக்கத்தை மாற்றி கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
26 நாடுகளில் நடந்த இந்த கருத்து கணிப்பில் 23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டிற்குள் வைக்க தங்கள் நாட்டு அரசுகள் தவறிவிட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதிலும் சீனா விதிவிலக்காக உள்ளது. சீனாவைச் சேர்ந்த 66% தங்கள் நாட்டு அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் திருப்தி அடைந்ததாக கூறியுள்ளனர்.
மற்ற நாடுகளில் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 70 விழுக்காடு மக்கள், உணவுப் பொருட்களின் விலையை வாங்கும் அளவில் வைக்க, தங்கள் நாட்டு அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்தவர்களில் 47 விழுக்காட்டினரும்,. ஐக்கிய அரபு குடியரசைச் சேர்ந்தவர்களில் 49% அரசு மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதில் அதிக அளவு மக்கள் அதிருப்தி தெரிவித்த நாடுகளின் விவரம்: எகிப்து 88%, பிலிப்பைன்ஸ் 86%, லெபனான் 85%, இந்தோனிஷியா 82%, துருக்கி 82%, நைஜிரியா 75, தென் கொரியா 81%, பிரான்ஸ் 79%, ரஷ்யா 78%, இத்தாலி 74% பேர் உணவுப் பொருட்கள் விலையை அரசு கட்டுப்படுத்த தவறியதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்து கணிப்பில் பெட்ரோல் உள்ளிட்ட எரி பொருட்களின் விலை உயர்வு எந்த அளவு பாதித்துள்ளது என்று கேட்கப்பட்டது.
இதில் எல்லா நாட்டு மக்களும், எரிசக்தியின் விலை அதிகரித்தால், பெருமளவு பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வளரும் நாடுகளான பிலிப்பைன்ஸ் 95%, எகிப்து 93%, இந்தோனேஷியா 84%, கென்யா, லெபனான் 83%, மெக்ஸிகோ 81% பேர் எரிசக்தியின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வளரும் நாடுகள் மட்டுமல்லாது. பெரும்பாலான வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.
அவர்களில் அமெரிக்கா 58%, பிரான்ஸ் 59, இத்தாலி 61% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, கனடா ஆகிய இரண்டு நாடுகளைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையினர், உணவுப் பொருட்களின் விலையை விட, பெட்ரோல் போன்ற எரிசக்தியின் விலை உயர்வு, தங்களை அதிகம் பாதித்து இருப்பதாக கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் அமெரிக்காவைச் சேர்ந்த 43%¸ கனடாவைச் சேர்ந்த 27% பேர் அதிக அளவு பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் இவர்களில் பெரும்பான்மையினர் உணவு உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்து கணிப்பு நடத்திய 26 நாடுகளில், எரிசக்தி பொருட்கள் விலை உயர்வால் அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். அமெரிக்காவில் 58%, கனடாவில் 42% பேர் பாதிப்புபிற்கு உள்ளாகி இருப்பதாக கூறியுள்ளனர்.
கனடாவேச் சேர்ந்த 40 விழுக்காட்டினர் உணவுப் பொருட்களின் விலை உயர்வை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கையில் திருப்தி அடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த மக்கள் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்ததால், அதிக அளவு பாதிப்படைந்து இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்த பிராந்தியத்தில் பிரேசில், கோஸ்டாரிகா, மெக்ஸிகோ, பனாமா ஆகிய கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இந்த நாடுகளில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவர்கள், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உணவு பொருட்களின் விலை அதிகரிப்பினால். பிரேசிலைச் சேர்ந்த 68% பேர் உணவை குறைத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் பனாமைச் சேர்ந்த 34% மட்டுமே உணவைக் குறைத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்த கருத்து கணிப்பை பி.பி.சி. வேர்ல்ட் சர்வீசுக்காக, சர்வதேச அளவில் கருத்து கணிப்பு நடத்தும் குளோப் ஸ்கேன் என்ற நிறுவனம், மேரிலாண்ட் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த சர்வதேச கொள்கை ஆய்வு மையத்துடன் இணைந்து நடத்தியது.
இதை குளோபல் ஸ்கேன் ஒருங்கிணைத்து நடத்தியது. ஜூலை 8ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதிவரை 26 நாடுகளைச் சேர்ந்த, 27,319 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.